வாக்குத்தத்தம்: 2025 செப்டம்பர் 1 திங்கள்

சபை கூடிவருதலை ….. நாமும் விட்டுவிடாமல் ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம் (எபிரெயர் 10:25).

நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீருற்றைப்போலவும் இருப்பாய். (ஏசா.58:11)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 139-144 | மாலை: 1கொரிந்தியர் 11

ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 1 திங்கள்

கர்த்தாவே, நீரே என் பங்கு; … முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும் (சங். 119:57,58).

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்குவார் (ஏசா.58:11) என்ற வாக்குப்படியே அன்றன்றுள்ள அப்பத்தைக் கொடுத்து, வறட்சிகளுக்கும் இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி இதுவரையிலும் நடத்தின தேவன் இந்த மாதத்தையும் ஆசீர்வாதமாய் நடத்தித்தர நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.

தேவநாமம் மகிமையடைய…

தியானம்: 2025 செப்டம்பர் 1 திங்கள் | வேதவாசிப்பு: யாத்திராகமம்14:10-31

YouTube video

கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன் (சங்கீதம் 9:1).

கடந்த மாதம் முழுவதும் நம்மை கரம்பிடித்து வழிநடத்தின தேவன் ஒரு புதிய மாதத்திற்குள் பிரவேசிக்க நமக்கு கிருபை செய்தபடியால் தேவனை ஸ்தோத்தரிப்போம். தேவனுடைய கிருபையும் சமாதானமும் ஆசீர்வாதங்களும் இம்மாதத்தில் நமது குடும்பத்தில் தங்கி இருக்க தேவன் கிருபை செய்வார். கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய் (ஏசா.58:11) என்று வாக்களித்தவர் இம்மாதத்திலும் நம்மோடிருந்து நம்மை வழிநடத்துவார்.

நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருந்து, அவரை ஆராதித்து, அவருக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தால் மாத்திரம் போதாது. தேவநாமம் நம் மூலமாய் மகிமையடைய நாம் பிரயாசப்படவும் வேண்டும். அதேவேளை அவருடைய நாமம் தூஷிக்கப்படுவதைக் கண்டால் எதிர்த்து நிற்கக்கூடிய வைராக்கியமும் நமக்கு இருக்கவேண்டியது அவசியம். ஒரு தந்தை தப்பான வழியிலே சென்று கொண்டிருந்த தனது மகனைப் பார்த்து, உன்னுடைய நடத்தையால் நீ என்னுடைய பெயருக்கும் இழுக்கு ஏற்படுத்துகிறாய் என்பதை உணரமாட்டாயா என்று கேட்டார். “தேவபிள்ளைகள்” என்ற நாமத்தைத் தரித்திருக்கும் நாம் சரியான முறையில் நடக்காவிட்டால் நமது பரம தந்தையாகிய அவருடைய நாமம் இழுக்கடைகிறது என்பதை நாம் உணருகிறோமா?

கோலியாத் என்னும் விருத்தசேதனமில்லாத அந்நியன் ஒருவன் இஸ்ரவேலரின் தேவனுடைய நாமத்தைத் தூஷிப்பதை ராஜாவாகிய சவுலும், இஸ்ரவேலரும் ஒருவேளைக் கேட்டு செய்வதறியாது இருந்திருக்கலாம். ஆனால், தற்செயலாக அங்கே வந்த தாவீதினால் இதனைப் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. இஸ்ரவேலரின் தேவன் எவ்வளவு உயர்ந்தவர்; அவரது நாமத்தை நிந்திக்க இந்த விருத்தசேதனம் இல்லாத அந்நியன் எம்மாத்திரம் என்று தாவீது பொருமினான். இவனை என்ன செய்யலாம் என்று தாவீதின் மனம் அங்கலாய்த்திருக்கும்.

பிரியமானவர்களே, இவ்விதமான கேள்விகளும், பொருமல்களும் அங்கலாய்ப்புக்களும் நமக்குள்ளும் எழும்பவேண்டும். நாம் உண்மையிலேயே தேவனை நேசித்தால், அவர் நாமம் உயர்வடைய வாஞ்சித்தால், எங்கெல்லாம் அவரது நாமம் தூஷிக்கப்படுகிறதோ அதைக் கண்டு நாம் வேதனையடைவோம். அப்படி ஒரு அங்கலாய்ப்பும், வேதனையும் உருவாகவில்லையானால் நாம் தேவனை நேசிக்கிறோம் என்று கூறுவது கேள்விக்குறியாகிவிடும். நாம் தேவனைவிட்டு ஏனோதானோ என்று ஜீவித்துக்கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். இது வேண்டாம். நமக்காகத் தம்மையே தந்தவருக்காய் நாம் வைராக்கியம் கொள்ளவேண்டாமா? அதற்காக நாமும் முன்மாதிரியாய் வாழவேண்டும்.

ஜெபம்: அன்பின் தேவனே, இம்மாதம் முழுவதும் நீர் எங்களை வழிநடத்தும். உமது நாம மகிமைக்காய் நாங்களும் வைராக்கியத்தோடு முன்மாதிரியாய் வாழ கிருபை தாரும். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (செப்டம்பர் – அக்டோபர் 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நம்மை வழுவாது பாதுகாத்து வழிநடத்திவரும் அன்பின் தேவன் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வெளிவர தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியங்களை தங்கள் ஜெபங்களில் தாங்குகிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவருடைய நாமத்தினாலே நன்றிகளைத் தெரிவிக்கிறோம். தொடர்ந்து இத்தியானங்கள் வாயிலாக அநேகமாயிரமான மக்களது வாழ்க்கையிலே கர்த்தர் மகிமையான காரியங்களைச் செய்யும்படியாக உங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்யுங்கள். தங்கள் ஆவிக்குரிய நண்பர்கள் விசுவாசிகளுக்கும் தியான நூலை அறிமுகம் செய்துவையுங்கள்.

ஜூலை மாதம் 15ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று சென்னையில் நடை பெற்ற போதகர்கள் விசுவாச பங்காளர்களுக்கான வேதாகம கருத்தரங்கு மிகவும் ஆசீர்வாதமாக நடைபெற்றது. இதில் உபயோகிக்கப்பட்ட கையேடு விநியோகத்திற்கு உள்ளது. தேவைபட்டோர் எழுதி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அனுதினமும் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் போதிக்க தேவன் கிருபைசெய்து வருகிறார். இவ்வூழி யங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் சத்தியத்தை அறியவும் ஜீவனுள்ள தேவனண்டைக்கு வழிநடத்தப்படவும் வேண்டுதல் செய்கிறோம். இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட தாங்கள் இணைக்கரம் கொடுத்து உதவ அழைக்கிறோம்.

செப்டம்பர் மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் தாழ்மையைப் பற்றி நாம் தியானிக்கும்படியாக எழுதியுள்ளார்கள். அக்டோபர் மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் பிரசங்கியின் புத்தகத்திலிருந்து தியானங்களை எழுதியுள்ளார்கள். தியானங்கள் தங்களது ஆவிக்குரிய வாழ்வுக்கு பேருதவியாக இருக்க ஜெபிக்கிறோம். சகோதரிகளை உங்கள் ஜெபங்களில் நினைத்துக்கொள்ளுங்கள்.

கே.ப.ஆபிரகாம்

வரையறுக்கப்பட்ட வாழ்நாட்கள்!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: யோபு 14: 1-14

அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர் (யோபு 14:5).

தேவன் தமது ஞானத்தால் மனிதனாகிய நம் மீதும் அவர் நம்மை வைத்துள்ள இவ்வுலகின் மீதும் விதித்த வரம்புகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் கடலுக்கு எல்லையை வைத்துள்ளார் (யோபு 38:10-11); சாத்தானையும் மட்டுப்படுத்தியுள்ளார் (1:12;2:6), தேசங்களுக்கு எல்லைகளை வரையறுக்கிறார் (அப்.17:26). ஏதேன் தோட்டத்திலிருந்த ஆதி பெற்றோர்களும் அவர்களுக்குரிய காரியங்களில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் தங்களது வரம்புகளை மீறியதால் வெளியேற்றப்பட்டனர் (ஆதி.3). நமது வாய்ப்புகள், வளங்கள் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றில் நீங்களும் நானும் தனித்தனியாக மட்டுப்பட்டவர்கள். தேவனே அவைகளுக்கு வரம்புகளை விதித்துள்ளார். நமது ஆயுசு நாட்கள் எண்ணப்பட்டுள்ளன. அந்த இறுதி நாளைத் தாண்டி நாம் செல்லக்கூடாது. அதை அவசரப்படுத்தினால் அது முட்டாள்தனம்.

சட்டத்தைப் பொறுத்தவரை அனைவரும் சமம். ஆனால் வாழ்க்கையில் நாம் அனைவரும் சமமல்ல; மனித வாழ்க்கை தனிப்பட்ட வரம்புகளை உள்ளடக்கியது. ஆனால், வரம்புகள் நமக்கு சுதந்திரத்தை அளிக்கின்றன. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உண்டு. அது பொதுசாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் வாகனம் ஓட்டுவதற்கு எனக்கு சுதந்திரத்தைத் தருகிறது. நானும் எனது மனைவியும் கடவுச்சீட்டு வைத்திருப்பதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததால், நாங்கள் உலகம் முழுவதும் பயணம் செய்வதற்கும். ஊழியம் செய்வதற்கும் உதவி செய்கிறது.

அதுபோல நமது ஜெபத்திற்கு பதில் பெற விரும்பினால் நாம் சில நிபந்தனைகளுக்குட்பட வேண்டும். அவைகளுக்கு நாம் கீழ்ப்படிந்தால் தேவன் நமது தேவைகளை அருளுவார். இதுவே சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்றாகும். நாம் செய்ய விரும்பும் காரியங்களை செய்வது சுதந்திரம் ஆகாது; தேவன் குறித்திருப்பதை நான் செய்வதே மெய்யான சுதந்திரம்; என்னுடைய கீழ்ப்படிதல் எனக்கு ஆசீர்வாதத்தின் வழியைத் திறக்கும்.

உண்மையான சுதந்திரம் ஐக்கியத்தை ஊக்குவிக்கிறது. ஏனெனில் நமது திறமைகளும் உடைமைகளும் வரம்புகளுக்குரியவை. அநேக காரியங்கள் எனக்குத் தெரியாதவை; என்னால் செய்ய இயலாதவை. எனவே மற்றவர்களது உதவி எனக்குத் தேவை. தேவன் ஆதாமின் தனிமை நல்லதல்ல என்று கண்டார். எனவே அவனுக்கு உதவ ஏற்ற துணையை உண்டாக்கினார் (ஆதி.2:18-25). திருமணம், குடும்பம் மற்றும் நண்பர்கள் போன்றவை தேவன் நமக்குத் தந்த பரிசுகள். இவ்வுலகில் நம்மால் இயலாதவற்றுக்கு உதவ தேவனுடைய இருதயத்திலிருந்து இவை நமக்குத் தரப்பட்டவையாகும். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். குடும்பம், சமுதாயம் மற்றும் சபை ஆகியனவும் ஒத்தவை. நாம் ஒருவரையொருவர் சார்ந்து ஒருவருக்கொருவர் உதவவேண்டும்.

வாழ்க்கை சில வரம்புகளுக்குட்பட்டது, அவை நமக்கு சுதந்திரத்தைத் தந்து ஐக்கியத்தில் முடிகிறது. இந்த ஐக்கியமானது வாழ்வை தீவிரமாகக் கண்ணோக்க வைக்கிறது. நமது வாழ்வு மற்றவர்களுடன் அன்புடன் இணைந்தால் அவர்கள் சிறப்பானவர்களாக மாறுகிறார்கள், அவர்களை இழக்க நாம் விரும்புவதில்லை. “ஆகவே நாங்கள் ஞானமுள்ள இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (சங்.90:12) தேவன் நமது நாட்களைக் குறித்துள்ளார். ஆனால், அது நமக்குத் தெரியாது. நம்முடைய நாட்களையும் காரியங்களையும் அவர் தமது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். ஆனால், நம்மால் அந்த பக்கங்களைப் பார்க்க இயலாது (சங்.139:15-16).

காரியங்களின் தொகையாவது: நம்முடைய வாழ்க்கை குறுகினது! எனவே நாம் நமது வாழ்வையும் மற்றவர்களின் வாழ்வையும் மதிக்கவேண்டும். ஏனெனில் அவை வரம்புகளுக்குட்பட்டவை. தேவன் நமது வரம்புகளைக் குறித்துள்ளார். குறிப்பாக நமது ஆயுட்காலம்; எனவே தேவன் நமக்குக் கொடுக்கும் மணி நேரங்களையும், நாட்களையும் நாம் சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும். அதாவது தேவனுடைய சித்தத்தை அறிந்து அதைச் செய்யவேண்டும். “பகற்கால மிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” (யோவான் 9:4).

நமக்கு தரப்பட்டுள்ள வரம்புகள் தடைகள் அல்ல; அவை வாய்ப்புகள். நாம் என்ன செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதில் கவனம் செலுத்துவோம். “என்னால் எல்லாவற்றையும் செய்யமுடியாது, ஆனால், என்னாலும் ஏதாவது செய்யமுடியும். என்னால் இயலும்வரை தேவன் எனக்கு கொடுத்துள்ள காரியங்களில் உண்மையாக இருக்கவேண்டும்”.

“ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப் பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்” (எபேசியர் 5:15-16).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வேதாகமம் பற்பல மொழிகளில் எழுதப்பட்டன!

வேதாகமம் உருவானது எப்படி? (செப்டம்பர் – அக்டோபர் 2025)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமம் மூன்று மொழிகளில் எழுதப்பட்டன. அவை:

1.எபிரேயம், 2.அரமேய மொழி, 3.கிரேக்க மொழி

பழைய ஏற்பாட்டில் பெரும்பகுதி எபி ரேய மொழியில் எழுதப்பட்டது. சில பகுதி கள்மட்டும் அரமேய மொழியில் எழுதப்பட்டன அவை:

1. எஸ்றா 4 முதல் 8 வரை உள்ள அதிகாரங்கள்.

2. தானியேல் 2 முதல் 7 வரை உள்ள அதிகாரங்கள்.

3. எரேமியா 10:11.

எபிரேயமொழி அழகிய சித்திர வடிவான மொழி. எபிரேயர்கள் சித்திரங்களாய் சிந்தித்தார்கள். எனவே பெயர்ச் சொற்கள் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தன. அவர்கள் தெளிவாக, உவமை, உருவகங்களுடன் பேசினார்கள், ஒவ்வொன்றும் “ஜீவன்” உள்ளதாக துடிப்புள்ளதாகவும் கருதப்பட்டது. பால் வேறுபாடு காட்டாத பால் இம்மொழியில் இல்லை (Neuter). எபிரேய மொழியில் ஒரு கதையை நாடகமாக்குவது எளிது, தேவனுடைய மக்களாகிய இஸ்ரவேலரின் செயல்பாடுகளை வர்ணிக்க இம்மொழி மிகவும் ஏற்றது.

எபிரேய மொழி தனிப்பட்ட நபருக்குரிய மொழியாகும். இது இருதயத்திற்கும் உணர்ச்சிகளுக்கும் கிளர்ச்சியூட்டுவது; உள்ளத்துக்கு அல்ல.

எபிரேய மொழி பேசுகிறவர்கள் எபிரேயர்கள். எபிரேயர்களும் இஸ்ரவேலரும் ஒன்றே. இஸ்ரவேலரின் நாட்டில் எபிரேய மொழி இருந்தது. தேவன்தாம் நேசிக்கும் மக்களை இஸ்ரவேல் நாட்டில் தழைத்தோங்கச் செய்வார். அவர் சொல்லுவதைப் பாருங்கள்: “நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன். ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்” (மல்கியா 1:2,3). தேவன் இஸ்ரவேல் தேசத்தை யாக்கோபுவுக்காக நேசித்திருக்கிறார்.

புதிய ஏற்பாடு முழுவதும் கிரேக்க மொழி யில் எழுதப்பட்டுள்ளது. கிரேக்க மொழி எபிரேய மொழியைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது. இது ஒரு அறிவுப்பூர்வமான மொழி! இது உள்ளத்துக்கும் பிரியமான மொழி; இருதயத்துக்கு அல்ல. கிரேக்க மொழியில் ஒரு காரியத்தை அறிவுபூர்வமாக்குவது எளிது; ஒரு கருத்தை எளிதாக வெளிப்படுத்தலாம். எனவே இறையியல் கருத்துக்களை கிரேக்க மொழியில் வெளிப்படுத்த முடியும். எபிரேய மொழியில் இல்லாத ஒரு மொழித் தெளிவு கிரேக்க மொழியில் உள்ளது.

எபிரேய மொழியைப் போலல்லாமல், கிரேக்க மொழி உலகமெங்கும் நாகரீகம் மிகுந்த நாடுகளில் புதிய ஏற்பாட்டு காலத்தில் பேசப்பட்டது.

கிறிஸ்துவின் நற்செய்தி உலகெங் கும் எல்லாத் தேசங்களுக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும் (லூக்கா 24:47). எனவே இந்த நற்செய்தி கிரேக்க மொழியில் கூறப்பட வேண்டும் என்று தேவன் விரும்பினார். கிரேக்க மொழி இயற்கையாகவே எல்லோராலும் சாதாரணமாகப் பேசப்பட்ட மொழி. தெருவில் போகும் எல்லோரும் கிரேக்க மொழி பேசுவார்கள்.

புதிய ஏற்பாட்டில் உள்ள கொள்கைகள், நற்செய்தி, இவற்றை வெளிப்படுத்தவும் மற்றவர்களுக்குக் கூறவும் கிரேக்க மொழி மிகவும் வசதியாக இருந்தது.

வேதாகமம் ஏன் எழுதப்பட்டது?

வேதாகமம் எழுதிவைக்கப்பட்டி ருப் பதில் அநேக நன்மைகள் உண்டு.

1. முதலாவது தெளிவு

பேசுவதைக் காட்டிலும் எழுதுவது மிகவும் தெளிவாக ஒரு காரியத்தை பதிவு செய்ய உதவும்.

2. இரண்டாவதாக பரவச்செய்தல்

மனிதர்கள் இறந்துபோகிறார்கள். நினைவுகள் மறந்துபோக வாய்ப்புண்டு. ஆனால், தேவனுடைய சத்தியங்களையும், வார்த்தைகளையும் எழுதி வைத்திருந்தால் அவை எவ்வளவு காலத்துக்கும் அழியாமல் இருக்கும். நற்செய்திப் பணி யாளர்கள் தங்கள் ஊழியத்தின் மூலமாக ஆதாயப்படுத்தப்படும் புதிய விசுவாசிகளி டம் தேவனுடைய வார்த்தைகள் அடங் கிய வேதாகமத்தைக் கொடுக்கலாம். அவர்கள் அதைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். தேவஊழியர்கள் வேதாகமத்தைக் கொடுத்துவிட்டு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டாலும் புதிய விசுவாசிகள் அதைப்படித்து, ஆவியில் வளரவும், கள்ளப்போதனைகளை எதிர்த்து வெறுக்கவும் வாய்ப்பு உண்டாகும். உலகில் துன்பங்களால் ஆட்கள் இறந்துபோனாலும் வேதாகமம் அழியாமல் இருக்கும்.

வேதாகம நூல்களை எழுதிய ஆதி எழுத்தாளர்களை தேவன் அழைத்து, அபிஷேகம் பண்ணி, ஆசீர்வதித்து எழுதும்படி அகத்தூண்டுதல் கொடுத்து, ஆவியானவரின் நடத்துதல் எப்போதும் அவர்களுடன் இருக்கச்செய்தார். தேவன் கூறியதை, இயேசுவின் போதனைகளை அப்படியே தவறில்லாமல் எழுதும்படி அனுக்கிரகம் பண்ணினார்.

இதில் மிகவும் சிறப்பான அம்சம் என்னவென்றால், எழுதப்பட்ட வேதநூல்களில் தேவன் தம்மை வெளிப்படுத்தினார். கற்பனை செய்துபாருங்கள். தேவன் தமது உள்ளத்தில் இருப்பதை நமக்குத் தெரிவிக்கும் அளவுக்கு நம்மை நேசித்திருக்கிறார். இந்த 21ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் நாம் நம்பி, விசுவாசிப்பதற்கு ஏதாவது வேண்டும் என்று தேவன் அறிந்திருந்தார். இந்தக் கடைசிக்காலத்தில் தோன்றி இயங்கிக்கொண்டிருக்கும் இயக்கங்கள், ஊழியங்கள், ஊழியர்கள். பேச்சாளர்கள் இவர்களை நடுநிலையில் நின்று மதிப்பீடு செய்யத் தெரியவேண்டும், அதற்கு நமக்கு அறிவும், பயிற்சியும், திறமையும் வேண்டும்.

கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம் தான் நமக்குத் திட்டமான உரைகல், அவர் நம்மை நேசித்தபடியால் நம்மை யூகித்துக்கொண்டும், அனுமானித்துக்கொண்டும் இருக்கச் சொல்லவில்லை. நாம் அறியவேண்டிய அனைத்துக் காரியங்களையும் அவர் வேதாகமத்தில் எழுதச்செய்திருக்கிறார். நாம் தேவையானவற்றை அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

page 1 of 2