ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 6 திங்கள்
பங்காளர் குடும்பங்களிலே புதிதாய் வேலையில் சேர்ந்துள்ளவர்களுக்காகவும், நிரந்தர வேலைக்காய் காத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ள தேவன் அவர்களது காத்திருப்புக்கு ஏற்ற நன்மையைக் கட்டளையிட்டு ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.
புரட்டப்பட்ட கல்
தியானம்: 2026 ஏப்ரல் 6 திங்கள் | வேத வாசிப்பு: மாற்கு 16:1-8

கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித் தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் (மாற்கு 16:3).
மனக்கலக்கங்களும் சந்தேகங்களும் அடிக்கடி நம் எல்லோரையும் தாக்குகின்றன. அவை தவிர்க்கமுடியாதவை. ஆனால், நாம் அதனால் பாதிக்கப்படுகிறோமா அல்லது நம்பிக்கையோடு முன்னேறுகிறோமா என்பதே கேள்வி. மரணத்தையே ஜெயித்து உயிர்த்த ஆண்டவர் இன்று நமக்கிருக்கிறார். இனியும் நமது வாழ்வில் குறுக்கிடுகின்ற கலக்கங்களால் நாம் முறிந்து போகவேண்டிய அவசியமே இல்லை. நமக்குத் தேவை விசுவாசம் ஒன்றுதான்.
யோசேப்பு, இயேசுவின் சரீரத்தை ஒரு துப்பட்டியில் சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்ட ஒரு கல்லறைக்குள் வைத்து, வாசலில் ஒரு கல்லைப் புரட்டி வைத்துவிட்டார். இதனை மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள். இயேசுவில் அவர்கள் கொண்டிருந்த அன்பின் அடையாளமாய் அவரது சரீரத்துக்கு சுகந்தவர்க்கம் இடும்படிக்கு தாங்கள் சேர்த்து வைத்திருந்த சுகந்தவர்க்கத்தை எடுத்துக்கொண்டு ஓய்வுநாள் முடிந்ததும் கல்லறைக்கு வந்தனர். ஆனால், இரண்டு தடைகள் அவர்கள் முன்னே இருந்தன. ஒன்று, ரோம போர்வீரர்கள், இரண்டாவது கல்லறை வாசலை அடைத்திருந்த அந்தப் பெரிய கல். இவை இரண்டையும் தாண்டிச் செல்ல வேண்டும். ஆனால், ஒரு விஷயத்தை நாம் இன்று கற்றுக் கொள்ளவேண்டும். தடைகள் முன்னே இருப்பது அவர்களுக்குத் தெரியும்; இந்த இரண்டு தடைகளையும் தாண்டுவதும் கடினம் என்றும் தெரியும். என்றாலும் இத்தடைகள் உண்டாக்கக்கூடிய கலக்கங்களுக்கும் சந்தேகங்களுக்கும் இடமளித்து, பேசாமல் இருந்துவிடாமல், இயேசுவில் கொண்டிருந்த அன்பும் நன்றியும் அவர்களை உந்தித்தள்ள, ஞாயிறு தினம் அதிகாலையில் கல்லறையை நோக்கி புறப்பட்டுப்போனார்கள். நடந்தது என்ன? அப்பெரிய கல் புரட்டித் தள்ளப்பட்டிருந்ததும் அல்லாமல், மரித்த சரீரத்துக்கு சுகந்தவர்க்கம் இடுவதற்கு வந்தவர்களுக்கு கர்த்தர் உயிர்த்தெழுந்த செய்தியும் காத்திருந்தது. இவர்கள், சந்தேகத்துக்கு இடமளித்து கல்லறைக்கு வராமல் இருந்திருந்தால் இந்த மகிமையான காலைநேர மகிழ்ச்சி நிறைந்த செய்தியைக் கேட்டிருப்பார்களா?
நமக்கு முன்னே என்னதான் தடைகள் இருப்பதாக நாம் பயமுறுத்தப்பட்டாலும், நாம் போகிற பாதை, போகிற காரியம் தேவனுக்குச் சித்தமானது என்றால், புறப்பட்டுச் செல்லுவோம். நமக்காகக் கர்த்தர் நிச்சயம் ஒரு தூதனை ஆயத்தம் செய்திருப்பார் என்ற விசுவாசம் அவசியம். ஆனால், நாம் என்ன நோக்குடன் செல்கிறோம் என்பது முக்கியம். ஆண்டவரில் கொண்டுள்ள உள்ளான மாசற்ற அன்பு, கனம், நன்றியுணர்வுடன் முன் செல்லுவோம். தடைகளை நீக்கிப்போடுகிறவர் நமக்கு முன்னே நிச்சயம் செல்லுவார் (மீகா 2:13).
ஜெபம்: இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன் என்ற வாக்குத்தத்தத்திற்காகவும், எங்களுக்கு ஆயத்தப்படுத்தியுள்ள நன்மைகளுக்காகவும் உம்மைத் துதிக்கிறோம். ஆண்டவரே. ஆமென்.