ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 8 புதன்

என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது (சங்.141:2) இந்த நாளின் மாலையில் சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தில் கூடிவரும் பங்காளர்கள், செய்தியாளருக்காகவும், எல்லா இயற்கை அனுகூலங்களுக்காகவும், விண்ணப்பங்களின் சத்தத்துக்கு கர்த்தர் செவி சாய்க்கவும் மன்றாடுவோம்.

சுத்திகரிக்கப்பட வேண்டிய நினைவகம்!

தியானம்: 2026 ஏப்ரல் 8 புதன் | வேத வாசிப்பு: லூக்கா 24:1-12

YouTube video

அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, … (லூக்கா 24:8).

கணனி, அல்லது கைத்தொலைபேசியின் நினைவகம் வீண் செய்திகளால் நிரம்பிவிடும்போது, அதைச் சுத்தப்படுத்தும் வேளையில் முக்கியமான தகவல்களையும் சேர்த்து அழித்து விடுகிறோம். அவை நமது நினைவிலும் நிற்பதில்லை. இதுபோலவேதான் அன்று சீஷர்களும் வீண் தகவல்களை நினைவில் நிறைத்து வைத்து, இயேசு கூறியவற்றை மறந்துவிட்டார்களோ!

வாரத்தின் முதல்நாளிலே இயேசுவின் சரீரத்துக்கு சுகந்தவர்க்கம் இடும் படிக்கு கல்லறைக்கு முதலில் சென்றவர்கள் சீஷர்களல்ல; பெண்கள்தான். சரீரத்தைக் காணாது கலக்கமுற்ற அவர்கள் முன் தோன்றிய தேவதூதர்கள், “அவர் இங்கே இல்லை; அவர் உயிர்த்தெழுந்தார்” என்ற செய்தியைக் கூறி, இயேசு முன்கூட்டியே சொன்னவற்றையும் நினைவுபடுத்தினார்கள். “அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்கள்”. ஆம், அந்த ஸ்திரீகள் இயேசு சொன்னதை நினைவுகூர்ந்தனர்; இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பினர். ஒடிப்போய் சீஷர்களுக்கும் சொன்னார்கள். ஆனால், சீஷர்கள் இவர்களை நம்பவுமில்லை, அவர்களுக்கு இது வீண்பேச்சாகவே தோன்றியது. கல்லறைக்குச் சென்று பார்த்த பேதுருவும் ஆச்சரியப்பட்டானே தவிர, நம்பியதாக எழுதப்படவில்லை. இது ஏன்?

இயேசுவின் வார்த்தைகளைக் கூடவேயிருந்து கேட்டவர்கள் ஏன் மறந்தார்கள்? இயேசு தமது மரணம் உயிர்த்தெழுதல் குறித்து முதலில் கூறியபோது, பேதுரு அவரைக் கடிந்துகொண்டான் (மாற்.8:31-33). அடுத்த தடவை, அவர்கள் தங்களுக்குள் யார் பெரியவன் என்று தர்க்கம்பண்ணிக் கொண்டிருந்தார்கள் (மாற்.9:31-34). மூன்றாவது தடவை, இயேசுவின் மகிமையிலே அவருடைய வலது இடது பக்கத்திலே இருப்பதைக் குறித்தே யாக்கோபும் யோவானும் தர்க்கம் பண்ணினார்கள். ஆக, இயேசு உலகிற்கு வந்த தமது முக்கிய பணியைக் குறித்துப் பேசியபோதெல்லாம், சீஷர்கள் உலக ரீதியான சிந்த னையைத் தமக்குள் வளர்த்துக் கொண்டார்கள். இயேசு கூறியபடியே அவரது பாடு மரணம் நிறைவுபெற்றிருந்தும், தங்கள் உலகரீதியான பாதுகாப்பைக் குறித்துக் கவலைப்பட்டார்களே தவிர, உயிர்த்தெழுதலைக்குறித்து இயேசு கூறியதை அவர்களால் நினைவுபடுத்த முடியாமற்போனது. அவர்களுடைய நினைவகங்கள் தேவையற்ற காரியங்களால் நிறைந்துவிட்டிருந்தது. நமது நினைவகங்கள் எதனால் நிரம்பியிருக்கின்றன? நிறைவேறிய தேவனுடைய வாக்கு, இதுவரை அவர் நடத்திய அற்புத வழிநடத்துதல் எதையும் நம்மால் நினைவுகூரமுடியாதபடி நமது நினைவகங்களை நிரப்பியிருக்கும் வீண் காரியங்கள் என்ன? இன்றே பரிசுத்த ஆவியானவர் துணையுடன் நமது நினைவகங்களை சுத்தம் பண்ணுவோமாக.

ஜெபம்: கர்த்தாவே, அகற்றப்பட வேண்டிய காரியங்களை அகற்றி, இந்தவினாடி வரையிலும் கர்த்தர் செய்த அதிசயங்களை மட்டுமே எங்கள் நினைவில் நிறுத்தி துதிக்க எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.