ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 7 செவ்வாய்
இலங்கை தேசத்திற்காகவும் அங்கு நடைபெறும் சத்தியவசன ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும், இலக்கியம், ஊடக ஊழியங்கள், திருமறைப் பாடங்கள் இவைகளை தயாரிக்கும் பணியில் உள்ள ஊழியர்களுக்காகவும், எழுத்தாளர்களுக்காகவும், தாங்கும் பங்காளர்களுக்காகவும் கருத்தாய் ஜெபிப்போம்.
விடியலில் தேடல்!
தியானம்: 2026 ஏப்ரல் 7 செவ்வாய் | வேத வாசிப்பு: யோவான் 20:11-18

இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார் (யோவான் 20:15).
“நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்” (2நாளா.15:2). இது ஆசா ராஜாவுக்கு அன்று சொல்லப்பட்ட வாக்கியம். அப்படியே அவர்கள் தேடினார்கள், கர்த்தரும் அவர்களுக்கு வெளிப்பட்டார். “என்னைத் தேடுங்கள்; அப்பொழுது பிழைப்பீர்கள்” (ஆமோ.5:4) என்று ஆமோஸ் தீர்க்கன் இஸ்ரவேலுக்குத் திரும்பத் திரும்பக் கூறியும், அவர்கள் தவறவிட்டார்கள், இறுதியில் சிதறிவிட்டார்கள். கர்த்தரைத் தேடுவதில், இவர்களில் நாம் யார்?
இயேசுவை அடக்கம் பண்ணிய பின்னர், வாரத்தின் முதல் நாளன்று, மகதலேனா மரியாள் இருட்டோடே எழுந்து இயேசுவை வைத்திருந்த கல்லறைக்கு வந்தாள் என்றால், அவளுடைய ஆவல் ஆதங்கம் எப்படிப்பட்டது என்பதை சிந்திப்போம். கல் புரட்டப்பட்டிருந்ததைக் கண்டதும், ஓடிச்சென்று பேதுரு யோவானுக்கு அறிவிக்கிறாள். அவர்களும் வந்து பார்த்துவிட்டு, வேதவாக்கியங்களை உணராதவர்களாக திரும்பி போய்விட்டார்கள். ஆனால் அவளோ கல்லறையினருகே வெளியே நின்று அழுது கொண்டிருந்தாள். கல்லறைக்குள் இருந்தவர்கள் தூதர்கள் என்பதைக்கூட உணராதவளாக “ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்” என்று புலம்புகிறாள். திரும்பிப்பார்க்க, அங்கே இயேசு நிற்கிறார். ஆனால், அவளுடைய துக்கம் அவரை அவள் கண்களுக்கு மறைத்துவிட்டது. இயேசுவோ, அவளது தேடலை அறிந்து, “ஏன் அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்” என்று கேட்கிறார். அவள் அவரிடமும் புலம்புகிறாள். இயேசு, “மரியாளே” என்று அழைக்கிறார். தன் பெயர் சொல்லி அழைத்ததைக் கேட்டவுடனே அவள் திரும்பிப்பார்த்து, “ரபூனி” என்கிறாள். “வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார்” (மாற்.16:9) என்று மாற்கு இந்த சம்பவத்தைப் பதித்திருக்கிறார்.
மரியாள் தேடினாள், விடாது தேடினாள், கண்டாள், அவளே பாக்கியவதி. அவளது துக்கம் கண்களை மறைத்தாலும், அவளின் தேடல் அவளை ஏமாற்றவில்லை. அவள் தேடியது இயேசுவின் மரித்த சரீரத்தை; ஆனால் கண்டடைந்ததோ உயிரோடெழுந்த இயேசுவை. இன்று நாம் யார்? சரீரம் இல்லையென்றதும் திரும்பிவிட்ட சீஷர்களா? விடாது தேடிக் கண்டடைந்த மகதலேனா மரியாள்களா? விடியலில் அவளுடைய முதல் தேடல் ஆண்டவர்; அவரும் அவளுக்குத் தம்மைக் காண்பித்தார். இன்று “விடியலில் விடாது தேடுதல்” என்ற விஷயம் நமது வாழ்வில் இருக்கிறதா என்பதே முதல் கேள்வி. தேடுவோம். நிச்சயம் கண்டடைவோம். ஏனெனில், அவர் உயிர்த்தெழுந்து உயிரோடே ஜீவிக்கிற தேவன்.
ஜெபம்: ஆண்டவரே, அதிகாலமே உமது சமுகத்தில் வந்து நிற்க உமது பெலனைத் தாரும். சோம்பலுள்ளவர்களாய் இராமல் மரியாளைப்போல நாங்களும் உம்மைத் தரிசிக்க கிருபை செய்யும். ஆமென்.