ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 31 செவ்வாய்

எனக்கு ஜீவனைத் தந்ததுமல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியை காப்பாற்றினது (யோபு 10:12) அனுதினமும் உறங்காமல் தூங்காமல் நம்மை பாதுகாத்து, நாம் வேண்டிக்கொண்டதற்கும் மேலான நன்மைகளாலே நம்மை ஆசீர்வதித்து நடத்தின கர்த்தருக்கே மகிமையைச் செலுத்தி ஜெபிப்போம்.

தம்முடையவர்களுக்கான ஜெபம்!

தியானம்: 2026 மார்ச் 31 செவ்வாய் | வேத வாசிப்பு: யோவான் 17:6-19

YouTube video

… நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே (யோவான் 17:9).

நம்முடையவர்களுக்காக எவ்வளவுதூரம் நாம் பாரப்பட்டு ஜெபிக்கிறோம்? இயேசு, தமது மரணத்துக்கான வேளை வந்துவிட்டதை உணர்ந்து, தாம் போனதும் பிதாவானவர் கொடுத்த சீஷர்கள் தவறிவிடக்கூடாது என்று பாரப்பட்டு ஜெபிக்கிறதைக் காண்கிறோம். இந்த சீஷர்கள் யார்? இயேசுவின் வார்த்தைகளை விசுவாசிக்கிறவர்கள் (வச.8). தேவனுடைய மகிமையை கிறிஸ்துவுக்குள்ளாக இந்த உலகத்திற்குப் பிரதிபலிக்கிறவர்கள் (வச.10). தாம் உலகத்தில் இருந்தவரைக்கும் தம்முடனிருந்த இவர்கள், தாம் போன பிற்பாடும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே இயேசுவின் முதலாவது வேண்டுதலாக இருந்தது (வச.11). தாம் இதுவரை அவர்களைக் காத்துக் கொண்டபோதிலும், ஒருவன் இழக்கப்பட்டுவிட்டதைக் குறித்து தமது மனவேதனையை வெளிப்படுத்தி மற்ற சீஷர்களுக்காக மன்றாடுகிறார் இயேசு (வச.12). சந்தோஷத்தின் ஊற்றாகிய இயேசுவுடன் முழுமையான உறவைக் கொண்டிருக்கிறவன் எந்த நிலையிலும் தன் சந்தோஷத்தை இழந்து விடமாட்டான். அவன் தேவனுடைய பாதுகாப்பு கரிசனை அவருக்குள்ளான வெற்றி யாவையும் பெற்றுக்கொள்கிறான். அந்த சந்தோஷத்தைத் தம்முடையவர்கள் பெற்றுக்கொள்ள இயேசு ஜெபிக்கிறார் (வச.13). தம்மைப்போல தம்முடையவர்களும் உலகத்தார் அல்ல என்பதால், உலகம் அவர்களை பகைத்தது என்று தம்முடையவர்களின் நிலைமையைச் சொல்லி ஜெபிக்கிறார் (வச.14). அதற்காக அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி ஜெபிக்காமல், தீமையினின்று காத்துக் கொள்ளும்படி ஜெபிக்கிறார் இயேசு (வச.15). ஏனெனில் அவர் நம்மை இந்த உலகத்துக்குள் தமது பிரதிபலிப்புகளாக அனுப்பியிருக்கிறார். ஆகவே, உலகத்தோடு ஒத்து ஓடாமல், வேறு பிரிக்கப்பட்டவர்களாய் அனுப்புகிறவருக்கு சாட்சியாய் வாழவே அவர் தமது சீஷர்களை அழைத்தார். அந்த அழைப்பிலிருந்து அவர்கள் விழுந்து விடாதபடி இயேசு இந்த உலகில் இருந்தபோதே ஜெபித்தார் (வச.15). இதற்குத் தேவையான சத்திய வசனத்திலே நிலைத்து நிற்கவேண்டுமென்று இயேசு பாரத்துடன் தம்முடையவர்களுக்காக ஜெபித்தார் (வச.17).

இன்றும் அவர் நமக்காக ஜெபிக்கிறார். நாமும் நமது ஆண்டவரின் சீஷர்கள்தான், சீஷர்களாகத் தம்மைப் பின்பற்றி வரும்படிக்கே அவர் நம்மை இரட்சித்திருக்கிறார். உலக போராட்டத்திலும் இயேசுவுக்குள் ஜெயம் பெற்று அநேகரை அவரிடம் கொண்டு வருவதற்குரிய பெலத்தை நமக்கு அருளும்படி இயேசு ஏற்கனவே ஜெபித்துவிட்டார். ஆகவே, அவர் எதற்காக அன்று தமது சீஷர்களை உலகிற்குள் அனுப்பினாரோ, இன்று நம்மை அனுப்பியிருக்கிறாரோ, அதை நிறைவேற்ற தைரியத்தோடு அவர் கரத்தில் நம்மைத் தருவோமாக.

ஜெபம்: ஆண்டவரே, இவ்வுலக போராட்டத்தில் நாங்கள் ஜெயம் பெற்று, மற்றவர்களை யும் உம்வழி நடத்திட பிதாவினிடத்தில் நீர் வேண்டிக்கொண்டபடியே .அந்தப் பணியை நிறைவேற்ற எங்களைத் தருகிறோம். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 30 திங்கள்

பழங்குடிமக்கள், ஆதிவாசிமக்கள் மத்தியில் சமாதானத்தைக் கூறி நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவித்துவரும் மிஷனரிகளுக்காகவும், மிஷனரி ஸ்தாபனங்களுக்காகவும், பணித்தளங்களில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகள், வன்முறைகளில் கர்த்தர் ஊழியர்களை வேலியடைத்து பாதுகாக்கவும், அங்கு செயல்பட்டுவரும் ஜெபக்குழுக்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.

இயேசுவின் ஜெபம்

தியானம்: 2026 மார்ச் 30 திங்கள் | வேத வாசிப்பு: யோவான் 17:1-5

YouTube video

… நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்; (யோவான் 17:4).

இந்த அதிகாரத்தில் இயேசு செய்த நீண்ட ஜெபத்தை யோவான் பதிவு செய்துள்ளார். இயேசு தனிமையாகவும் பிறருக்காகவும் ஜெபித்த ஜெபங்களை சுவிசேஷங்களில் காணலாம். ஆனால், இது விசேஷித்ததும், முழுமையாகத் தரப்பட்டுள்ளதுமான ஜெபம். இந்த முழு ஜெபத்தையும் முழு இருதயத்துடன் கவனித்தால், சாத்தானின் வல்லமைக்கு உட்பட்ட சக்திகளுக்கும், தேவனுடைய அதிகாரத்துக்கு உட்பட்டவர்களுக்குமிடையே நடைபெறுகின்ற ஒரு யுத்த களமாகவே இந்த உலகம் விளங்குகிறது என்பதை இந்த ஜெபம் உணர்த்துகிறது. அதற்காக நாம் கலங்கவேண்டியதில்லை. ஏனெனில், இந்தப் போராட்டத்தில் தேவன் தமது பிள்ளைகளை சாத்தானின் வல்லமையிலிருந்து விலக்கி, பாதுகாத்து, பரிசுத்தப்படுத்தி, சத்தியத்தில் நிலைத்திருக்க உதவ வேண்டுமென்று இயேசு பாரத்துடன் ஜெபிக்கிறதைக் காண்கிறோம். தமது வேளை வந்துவிட்டதை உணர்ந்தும், நமது ஆண்டவர் தமக்காக ஜெபிக்காமல் நமக்காக ஜெபித்தாரே, இந்தச் செயல் நமது இருதயத்தை உடைக்காதோ!

இந்த ஜெபத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துப்பார்க்கலாம். முதற் பகுதியில் இரு முக்கிய விஷயங்களை நாம் கவனிக்கவேண்டும். முதலாவது, நித்திய ஜீவன். நித்திய நித்தியமாக வாழுவதுதான் நித்திய ஜீவன் என்றுதான் நாம் எண்ணுவதுண்டு. அது சரிதான். ஆனால், “மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என்று இயேசு தெள்ளத்தெளிவாக அறிக்கை செய்வதைக் கவனிக்கவும். ஆம், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்கான ஒரே வழி குமாரன் இயேசுவினூடாக பிதாவை அறிவதேயாகும். நித்திய ஜீவனை அடைவதற்கான ஒரே தேவை கிறிஸ்துவுக்குள் தேவனுடனான உறவே அல்லாமல் வேறேதுவு மில்லை. நமது பாவங்களை விட்டு இயேசுவிடம் திரும்பும்போது பரிசுத்தாவியானவர் நமக்குள் வாசம்பண்ணி நம்மை நேர்பாதையில் நடத்தி, பிதாவினிடத்தில் சேர்ப்பார்.

அடுத்ததாக, மகிமைப்படுத்துதல். தேவனுடைய மகிமை என்பது அவருடைய குணாதிசயமும், பிரசன்னமுமாகும், ஆனால், மகிமைப்படுத்துதல் ஒரு செயற்பாடு. “பூமியிலே உம்மை மகிமைப்படுத்தினேன்” என்று ஜெபித்த ஆண்டவர் எப்படி அதைச் செய்து முடித்தார்? “நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.” இதுதான் மகிமைப்படுத்துதல். வெறுமனே பாடுவதில் ஜெபிப்பதில் அல்ல; நமக்காக தேவன் அநாதியாய் குறித்திருக்கிற தேவதிட்டத்தை அறிந்து, அதை இப்பூமியில் நிறைவேற்றி முடிப்பதே தேவனை மகிமைப்படுத்துவதாகும். நாம் மெய்யாகவே தேவனை நமது வாழ்விற்கூடாக மகிமைப்படுத்துகிறோமா?

ஜெபம்: தேவனே, நீர் தந்த வாழ்நாட்களிலே எங்களுக்கு நீர் வைத்த திட்டங்களை நிறை வேற்றி முடிக்கவும் உம்மைமட்டுமே மகிமைப்படுத்தவும் கிருபை செய்யும். ஆமென்.