ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 3 செவ்வாய்
இம்மாதத்தில் ஒளிபரப்பாகவுள்ள சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அநேக புறஇன மக்கள் கண்டு இரட்சிக்கப்படவும், நிகழ்ச்சிகளின் தொகுப்புப் பணிகளில் ஈடுபடும் சகோதரர்கள் நேர்த்தியாய் பணிகளைச் செய்வதற்கும் ஆவியானவர் உதவி செய்து,சிறந்த பலனை காணச்செய்ய கருத்தாய் ஜெபிப்போம்.
உபவாசித்து ஆயத்தமானார்!
தியானம்: 2026 மார்ச் 3 செவ்வாய் | வேத வாசிப்பு: லூக்கா 4:1-13

அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார் (லூக்கா 4:2).
முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னரோ அல்லது எதிர் காலத்துக்காக தூரப்பயணம் செல்லும் முன்னரோ, அல்லது செல்வதற்கான முன் ஆயத்தங்களைத் தொடங்கும் முன்னரோ தேவனுடைய பாதத்தில் அமர்ந்திருந்து முடிவெடுக்கிறோமா? அல்லது எல்லாவற்றையுமே நமது எண்ணப்படி செய்து முடித்துவிட்டு, பின்னரே, “எல்லாம் சரிவரவேண்டுமென்று ஜெபியுங்கள்” என்று பலரிடமும் வேண்டிக் கொள்பவர்களாக இருக்கிறோமா?
இங்கே நமது ஆண்டவர் ஞானஸ்நானம் பெற்றும், ஆவியானவரின் வழி நடத்துதலால் வனாந்தரத்துக்குக் கொண்டுபோகப்பட்டு, 40 நாட்கள் ஆண்டவரோடு ஒன்றித்து உபவாசத்தில் இருந்தார். பின்பு சோதனைக்காரனின் சோதனைகள் அனைத்தையும் வெற்றிகொண்டார். அவர் வெற்றிகொண்டதும் தேவதூதர்கள் வந்து அவருக்குப் பணிவிடை செய்தார்கள். அதன் பின்னர்தான் அவர் தமது ஊழியத்தையே ஆரம்பித்தார். தமது பணியில் பன்னிரண்டு சீடர்களையும் தெரிவு செய்வதற்கு முன்பும்கூட அவர் இராமுழுவதும் ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார். தமது ஊழியத்தை ஆரம்பிக்கும் முன்பாக ஆண்டவர் உபவாசித்து, தேவனோடு உறவிலே தரித்திருந்தார். அந்த நாட்களில் அவருக்குப் பல சோதனைகள் வந்தது. அவற்றையெல்லாம் அவர் வெற்றிகொண்டார். இந்த உலக வாழ்வில் தாம் செய்யப்போகின்ற பிதாவின் திருச்சித்தத்தை, அதாவது மனுக்குலத்தின் மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற ஆரம்பித்தபோது, இயேசு தம்மை தேவனுக்குள்ளாக ஆயத்தம்பண்ணி, திடப்படுத்தியவாறே ஊழியத்தை ஆரம்பித்தார் என்று பார்க்கிறோம்.
நம்மில் அநேகர், ஏதோவொரு தேவ ஊழியத்திலே நம்மை ஈடுபடுத்தியிருக்கிறோம், அப்படியானால் நமது வாழ்வு தேவனோடுள்ள உறவில் தங்கியிருக்கிறதா? இன்று ஊழியம் என்று அங்கும் இங்கும் அலைந்து திரியும் அநேகர் தமது தியான வாழ்வை இழந்துபோவதுண்டு. ஜெபத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறிப்போவதுண்டு. அதனால்தானே இலகுவில் பாவத்தில் விழுந்து போகிறார்கள். மற்றவர்கள் பார்க்கும்போது, “ஐயோ எப்படியாக வல்லமையாக ஊழியம் செய்தார்களே, இவர்களுக்கு எப்படி இந்த நிலை வந்தது?” என்று வியப்போடு பார்க்கிறார்கள். அவர்களுடைய ஆவிக்குரிய அஸ்திபாரம் ஆட்டங்கண்டு போனதை யாரும் அறியார்கள். பிரியமானவர்களே, நாம் ஜாக்கிரதையோடு நடந்துகொள்வோம். இயேசுவே இவ்வளவு ஆயத்தங்களைச் செய்தாரானால் நாம் எம்மாத்திரம்? எத்தனை அதிகமாக நாம் உபவாசிப்பதும் ஜெபிப்பதும் வேத வசனத்தில் நிலைத்திருப்பதும் அவசியம்!
ஜெபம்: “அன்பின் ஆண்டவரே, ஊழியத்தைச் செய்யும் நாங்கள் எங்கள் வேதவாசிப்பு தியானவேளை, உபவாசம் இவைகளில் தவறிவிடாதபடி அனுதினமும் உம்முடைய சமுகத்தில் காத்திருந்து ஆயத்தப்பட உமது கிருபைகளைத் தந்தருளும். ஆமென்.”