ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 13 வெள்ளி
தாய்லாந்து நாட்டிற்காக ஜெபிப்போம். தென்கிழக்கு ஆசியநாடு அழகான கடற்கரை, பிரமிக்க வைக்கும் முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட புத்த மடாலயங்கள், வளமான கலாச்சாரம் நிறைந்த இந்தநாட்டிற்கு தேவனுடைய இரட்சிப்பு உண்டாக, ஒன்றான மெய்த்தேவனாகிய இயேசுவை மக்கள் அறிந்துகொள்ள ஜெபம் செய்வோம்.
பயப்படும்படிக்கு மன்னிக்கிறீர்
தியானம்: 2026 மார்ச் 13 வெள்ளி | வேத வாசிப்பு: சங்கீதம் 130:1-8

ஆண்டவரே, உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு (சங்.130:3,4).
இருவர் உரையாடிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒருவர், தான் செய்த தவறுக்காக மற்றவரிடம் மன்னிப்புக் கேட்கிறார். அந்த மற்றவரோ, “இல்லை, நீ செய்த தவறுக்காக உனக்கு மிகப் பெரிய தண்டனையைத் தருவேன்” என்றார். மன்னிப்புக் கேட்டவரோ இவர் என்ன இப்படிச் சொல்லுகிறாரே என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, மற்றவர், “சரி, நான் உன்னை நம்புகிறேன். உன்னை மன்னிக்கிறேன். அதுவே நான் உனக்குக் கொடுக்கும் பெரிய தண்டனை” என்றார்.
இங்கே சங்கீதத்தில், “உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு” என்று வாசிக்கும்போது, எனக்கு இந்த உரையாடல் ஞாபகத்திற்கு வந்தது. ஒருவர் நம்மை கண்டபடி திட்டி விடுவார் என்று பயப்படலாம்; அல்லது தண்டித்து விடுவார் என்று பயப்படலாம், ஆனால் இங்கே சங்கீதக்காரர், “உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு; அதனால் பயப்படுகிறேன்” என்கிறார். நாம் பாவிகளாக இருக்கும்போதே தேவன் நம்மைத் தேடி வந்து, நமக்காகத் தமது ஜீவனைக் கொடுத்து நம்மை மீட்டுக்கொண்டார் (ரோமர் 5:8). நாம் பெற வேண்டிய தண்டனை யாவற்றையும் தாமே தம்மீது சுமந்துகொண்டார். நமக்கு விடுதலையையும் பெற்றுத் தந்தார்.
நமக்காக, நமது பாவங்களுக்காகப் பாடுபட்ட தேவன், இப்போது நம்மை மன்னிக்கிறார். அந்த மன்னிப்புக்கு முன்னால் பயப்படாமல் நாம் எப்படி இருக்கமுடியும்? சில வேளைகளில் தவறு செய்தவர்கள், “ஐயோ, நாம் தப்பு செய்துவிட்டோமே; அதற்கு எவ்வளவு தண்டனை வேண்டுமானாலும் கொடுத்துவிடுங்கள்” என்று புலம்புவதை நாம் கேட்டிருப்போம். தாம் செய்த தவறுக்கு தண்டனையைப் பெற்றுவிட்டால் போதும், அவர்கள் திருப்தியாகி விடுவார்கள். ஆனால், அவர்களை நோக்கி, “இல்லை, நான் உங்களை மன்னிக்கிறேன்” என்று சொல்லும்போது அதைத்தான் அவர்களால் தாங்க முடியாததாக இருக்கிறது. காரணம், மன்னிப்புக்கு அவ்வளவு வலிமையுண்டு. அதனால்தான் தேவன் நம்மை மன்னிக்கிறார். “இனி பாவம் செய்யாதே” என்கிறார். மாத்திரமல்ல, “உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்கு ஆகாரங் கொடு” என்கிறார். அப்படிக் கொடுக்கும்போது, “நாம் தீமை செய்தும் இவர்கள் நமக்கு ஆகாரம் கொடுக்கிறார்களே” என்று அவர்களுக்கு மனவேதனை ஏற்படும். “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்; தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்.23:34) என்று மன்னிப்புக் கேட்டவர் நமது ஆண்டவர். நமது ஆண்டவர், மன்னித்து மறக்கிறவராகவும் இருக்கிறார். அவருக்குப் பயப்படும்படிக்கு அவரிடத்தில் மன்னிப்பு உண்டு. அவருடைய மன்னிப்பை அனுபவித்த நாமும் மற்றவரை மன்னிப்போம், மறப்போம்.
ஜெபம்: “ஆண்டவரே, எங்களுக்கு குற்றஞ்செய்தவர்களுக்கு உம்மைப் போல நாங்களும் மன்னித்து மறக்கிறவர்களாக காணப்பட உமதாவியால் எங்களை நிரப்பும். ஆமென்”.