ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 7 சனி
பங்காளர் குடும்பங்களிலே பிரசவத்திற்கு காத்திருக்கிற ஸ்திரீகளை கர்த்தர் பெலப்படுத்தி குறித்தவேளையில் சுகப்பிரசவத்தைத் தந்தருள ஜெபிப்போம். அதுபோல திருமணமாகி ஆண்டுகள் கடந்தும் பிள்ளைப் பேறின்றி தவிக்கிற குடும்பத்தினருக்கு கர்த்தர் இரக்கம் பாராட்டி அற்புதம் செய்திடவும் ஜெபிப்போம்.
சோதனைக்குத் தப்பிக்கொள்!
தியானம்: 2026 மார்ச் 7 சனி | வேத வாசிப்பு: ஆதியாகமம் 20:1-18

உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் …. நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன் (ஆதி.20:6).
வீட்டில் எலிகளைப் பிடிப்பதற்காக நாம் பொறிகளை வைப்பது வழக்கம். எலிகளுக்கு எவை அதிகம் பிடிக்குமோ அதைத்தான் அந்தப் பொறியிலே வைப்போம். அதுவும் எலியை சுண்டி இழுக்கும் தேங்காய் துண்டை சுட்டு வைப்பதும் வழக்கம். அந்த மணத்தினால் சுண்டி இழுக்கப்படும் எலிகள் பொறியில் சிக்கி மாண்டுவிடும். இதுபோலவேதான் சாத்தான், நம்மைக் கவர்ந்து இழுக்கும்வண்ணம் பொறிகளை வைப்பான். நமது பலவீனங்களை நம்மைவிட அவன் அதிகமாக அறிந்து வைத்திருக்கிறான்; அந்தப் பலவீனங்களினூடாகவே துவாரமிட்டு நுழைந்து விடுவான்.
ஆனால், இங்கே அபிமெலேக்கின் வாழ்விலே அவ்விதமான ஒரு சோதனை வந்தது. அதிலிருந்து தப்பிக்கொள்ளும்படிக்கு தேவனே அவனுக்கு உதவி செய்தார். காரணம், தனக்கு ஆபத்து நேரிடக்கூடாது என்பதற்காக, தனது மனைவியாகிய சாராளை, தனது சகோதரி என்றுதான் ஆபிரகாம் அபிமெலேக்கிடம் சொல்லியிருந்தார். ஆக, அபிமெலேக்கு உத்தம இருதயத்தோடேதான் அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொள்ள துணிந்தான். ஆனால் யாவையும் அறிந்திருந்த தேவன், சாராளில் தமது திட்டம் நிறைவேற திட்டமிட்டிருந்த தேவன், இந்த நேரத்தில் குறுக்கிட்டு அந்தக் கொடிய பாவத்துக்கு உட்படாத படிக்கு அபிமெலேக்கைக் காத்துக்கொண்டார். அவன் எதுவும் அறியாமலேயே அந்தச் சோதனையில் விழப்பார்த்தான். தேவன், அவன் தப்பிக்கொள்ளும்படிக்கு உதவி செய்தார்.
இன்றும் பாவ சோதனைகள் நம் யாவருக்குமே வரும். ஏனெனில் இது விழுந்துபோன உலகம். ஆனால், மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல், வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1கொரி.10:13) என்று வேதவாக்கியம் வாக்களிக்கின்றது. ஆகவே தேவனது உதவி நமக்கு எப்போதுமுண்டு. ஆனால் அதற்கு ஆண்டவரின் சத்தத்தைக் கேட்கும்படியாக ஆயத்தமான செவிகளோடுகூட நாம் இருக்கவேண்டியது மிக அவசியம். மேலும், நமது இருதயம் உத்தமமாய் இருக்கவும் வேண்டும். தேவ சத்தத்தைக் கேளாமல் சோதனையில் மாட்டிக்கொண்டால் அதற்கு ஆண்டவர் காரணம் அல்ல; நாமே அதற்கு முழுக்க முழுக்க காரணராவோம். ஆண்டவர் சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் வைத்திருக்கிறார் என்றே வேதாகமம் கூறுகின்றது. ஆகவே, அதை அறிந்துகொள்ள நான் அவரோடு என்றும் சரியான உறவில் இருக்க வேண்டும்.
ஜெபம்: கர்த்தாவே, பாவம் நிறைந்த உலகில் சோதனைகளில் அகப்பட்டுக்கொள்ளாதபடி காத்துக்கொள்ளும். அறியாமல் வீழ்ந்த சோதனைகளில் தப்பிக்கொள்ள வழிசெய்து உம் வழிகளில் எங்களை நடத்தும். ஆமென்.