ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 5 வியாழன்

இவ்வருடத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அஸ்ஸாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அமைதி சீர்குலையாமல் நேர்த்தியாக நடைபெற்று கர்த்தருக்குச் சித்தமானவர்கள் ஆட்சியில் அமர மன்றாடி ஜெபிப்போம்.

சோதனைக்குட்படாதபடிக்கு…

தியானம்: 2026 மார்ச் 5 வியாழன் | வேத வாசிப்பு: மத்தேயு 26:31-46

YouTube video

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார் (மத். 26:41).

இன்று கீழே விழுந்து அடிபட்டவர்களையும், கால் முறிந்து கஷ்டப்படு பவர்களையும் சந்திக்கும்போது அவர்கள் சொல்லுகிற ஒரு காரியம், “நான் கவனமாகத்தான் எப்போதும் நடப்பேன். ஆனால், இது எப்படி நடந்தது என்று தெரியாது. கண்மூடித் திறக்கிறதுக்குள் எல்லாமே நடந்தாயிற்று” என்பர். இல்லாவிட்டால் விழுந்து எழும்பி விட்டு நிலம்தான் வழுக்கியது, அதுதான் தடுக்கியது என்று ஏதாவது ஒரு சாக்கைச்சொல்லித் தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக் கொள்வோரும் உண்டு.

இங்கே பேதுருவும் இப்படித்தான் சொன்னார். “யார் இடறலடைந்தாலும் நான் இடறலடையமாட்டேன்.” அந்தளவுக்கு அவர் தன்மேல் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அந்தப் பேதுருவைப் பார்த்த ஆண்டவர், “இன்று சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மறுதலிப்பாய்” என்று சொன்னார். அந்த நேரத்தில் பேதுருவுக்கு அது பைத்தியமாய்த் தோன்றி இருக்கலாம். “இவருக்கு என்னைப்பற்றி இன்னும் சரியாகத் தெரியவில்லை, இவ்வளவுதான் இவர் என்னில் வைத்திருக்கும் நம்பிக்கைபோலும்” என்றெல்லாம் தனக்குள் எண்ணியிருந்திருக்கக்கூடும். ஆனால் கடைசியில் நடந்ததென்ன?

கெத்செமனே தோட்டத்தில் ஆண்டவர் அவர்களை, சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணும்படி கூறினார். ஆனால் அவர்களோ அதைச் செய்யவில்லை. ஏதோ கவலையில் தூக்க மயக்கமாய் இருந்தார்கள். சோதனையை அனுமதிக்கும் ஆண்டவரே, சோதனைக்குட்படாதபடிக்கு தீமையினின்று இரட்சிக்கும்படி ஜெபிப்பதாக சொன்னது ஏன்? சோதனைகள் வருகின்றபோது நாம் அதில் அமிழ்ந்துபோகாமல் வெற்றிகொண்டு எழுந்திட வேண்டுமெனில், அதற்குத் தேவனுடைய உதவி வேண்டுமல்லவா! ஆகவே நாம் ஜெபத்தில் அவரோடு உறவாடி உறுதியாக இருந்தால் சோதனையை இலகுவாக ஜெயித்திடலாம். சீஷர்களிடம் ஜெபிக்கும்படி சொன்ன ஆண்டவர், தனக்கு வரப்போகும் பாடுகளை ஜெயித்திட தாமும் கெத்செமனேயில் ஜெபித்தார் என்று வாசிக்கிறோம். நம்மை வீழ்த்திப்போட சாத்தான் எந்நேரத்திலும் நம்மைத் தாக்கலாம். நாம் ஜெபத்திலும் தியானத்திலும் உறுதியாய் இருப்பது அவசியம். நாம் தேவனோடு நெருங்கி ஜீவிக்க இந்தநாட்கள் உதவினாலும், தபசு நாட்களில்தான் சோதனைகள் வரும் என்பதல்ல. ஒவ்வொரு நாளிலுமே நாம் தேவனோடு நெருங்கிய உறவில் இருக்கவேண்டும். அவரோடுள்ள உறவில் விரிசல் கண்டிருந்தால், இந்த லெந்து நாட்களில் ஆண்டவரோடுள்ள உறவைப் புதுப்பித்துக்கொள்வோம். சோதனைகளில் ஜெயம் பெற்றிட, சாத்தானை ஜெயித்தவரையே பின்பற்றுவோமாக.

ஜெபம்: “அன்பின் பிதாவே, எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாமல் எங்களைத் தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும். இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.”