ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 11 புதன்
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார் (சங்.107:19) இந்த நாளில் அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தில் கர்த்தர் பிரசன்னராயிருந்து கூட்டத்தை ஆசீர்வதிக்கவும், ஏறெடுக்கப்படும் ஜெபவிண்ணப்பங்களுக்கு கர்த்தர் தயைசெய்து ஏற்ற மறுஉத்தரவு அருளிச்செய்திடவும் வேண்டுதல் செய்வோம்.
எனக்குப் பயப்படும் பயத்தை…
தியானம்: 2026 மார்ச் 11 புதன் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 23:23-33

எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன் (யாத்திராகமம் 23:27).
ஒரு யுத்தத்திற்குப் புறப்படும் அரசனானாலும் சரி, அல்லது ஒரு பிரச்சனையை எதிர்நோக்கும் ஒரு சாதாரண மனிதனானாலும் சரி, அதை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டும். அல்லது அதற்கான முன் ஆயத்தங்களுடன் செல்வது மிக அவசியமானது. எவருமே எந்த ஆயத்தமும் இல்லாமல் கடினமான சூழ்நிலையை சமாளிக்கச் செல்லமாட்டார்கள். ஆனால், இங்கே தேவன் சற்று வித்தியாசமான ஒரு காரியத்தைச் சொல்கிறார். அது சற்று வியப்பாக இருக்கிறது. “அவர் வாக்குக்குச் செவி கொடு” என்று சொல்லி, தம்முடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொள்ளும்படி தமது மக்களுக்கு பல கட்டளைகளைக் கட்டளையிடுகிறார். எப்படி வாழவேண்டும், தேவன் வெறுக்கும் காரியங்களை எப்படி வெறுத்துவிட வேண்டும், அந்நிய தேசத்திலே புறஜாதியார் மத்தியில் எப்படி தேவனின் நாமத்தை மகிமைப் படுத்தவேண்டும். இப்படியாக எவ்வளவோ கற்பனைகளையும் கட்டளைகளையும் கொடுத்த தேவன், “நீ போகும் இடத்தில் எனக்குப் பயப்படும் பயத்தை உனக்கு முன் செல்லும்படிக்குச் செய்வேன்” என்கிறார். அதனால் “நீ போகும் இடமெல்லாம் ஜனங்கள் எல்லாரையும் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகுகாட்டப் பண்ணுவேன்” என்கிறார்.
அதாவது, நமக்கு விரோதமானவர்களையும், நமக்குச் சத்துருக்களாய் இருப்போரையும், நமக்குத் தீங்கு செய்ய நினைப்போரையுங்குறித்து நாம் கவலைப்படத் தேவையே இல்லை. நமது எண்ணம் கவலையெல்லாமே அவரது வார்த்தைகளை எப்படியாகக் கடைப்பிடிப்பது, அவற்றை எப்படியாகப் பின்பற்றுவது, இவையாக மட்டுமே இருக்க வேண்டும். மிகுதியைக் கர்த்தர் தாமே பார்த்துக்கொள்ளுவார். எவ்வளவு பெரியதொரு ஆறுதலான வார்த்தை பார்த்தீர்களா? கர்த்தரின் மகத்துவங்களையும், அவர் செய்த அதிசயமான காரியங்களையும் பார்த்து அவருடைய நாமத்துக்குப் பயப்படும் மக்கள், அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவருக்குப் பிரியமாய் நடந்து அதே தேவனை ஆராதிக்கும் மக்கள் என்று நம்மையும் பார்த்துப் பயப்படுவார்களாம். இது இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட வார்த்தையானாலும், இன்றைக்கும் நமக்கும் உண்மையாகவே இருக்கிறது. ஏனென்றால் வாக்குரைத்தவர் மனம்மாற அவர் மனுபுத்திரனல்லவே!
“என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி என் தலையை எண்ணையால் அபிஷேகம் பண்ணுகிறீர்” (சங்.23:5). இவரே நமது தேவன். எனவே, நமக்கு விரோதமானவர்களை எதிர்கொள்ள நாம் பயப்படத் தேவையில்லை. நாம் தேவனின் கட்டளைபடி நடப்போம். மற்றதை தேவனே பார்த்துக்கொள்வார்.
ஜெபம்: “கர்த்தாவே, உமது வாக்குக்கு செவிகொடுத்து உம்முடைய கற்பனைகளின்படி நடந்துவர தூயஆவியானவர் உதவி செய்ய வேண்டுகிறோம். ஆமென்.