ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 9 திங்கள்

ஞானத்தில் குறைவுள்ளவனுக்கு சம்பூரணமான ஞானத்தை கடிந்துகொள்ளாமல் கொடுக்கிற தேவன் தாமே பத்தாம்வகுப்பு அரசுத் தேர்வு எழுதப்போகும் கர்த்தருடைய பிள்ளைகள் பயங்கள் நீங்கி, எல்லாத் தேர்வுகளையும் கர்த்தர் அருளும் பெலத்தோடு நன்றாக எழுதவும் மேல்நிலைக் கல்வியில் அவர்கள் விரும்பும் பாடங்களை எடுத்து படிப்பதற்கு ஏற்ற மதிப்பெண்களை பெறுவதற்கும் ஜெபிப்போம்.

சோதனையில் பின்மாற்றம்

தியானம்: 2026 மார்ச் 9 திங்கள் | வேத வாசிப்பு: லூக்கா 8:5-15

YouTube video

தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக் காலமாத்திரம் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள் (லூக்கா 8:13).

கற்பாறையின்மேல் விழுந்த விதை ஏன் வேர்கொள்ள முடியாமற்போனது? அதற்குக் காரணம் விதை அல்ல; அது விழுந்த இடம்தான் தவறானது. கற்பாறை கடினமாக இருப்பதால் விதை முளைத்தும் அதற்கு வேர்கொள்ள முடியாமற்போயிற்று.

அதுபோலவே வசனத்தை கேட்டும், அந்த வசனம் கேட்டவர்களுக்குள் வேர் கொள்ள முடியாமற் போவதற்குக் காரணம், அவர்களது கடினமான இருதயமே. தங்களது இருதயத்தை மிகக் கடினமாக சிலர் வைத்துக்கொள்வதுண்டு. நான் எப்போதுமே சரி, நான் தவறு செய்யமாட்டேன். நான் தேவனுடைய வழியில் நடக்கிறேன். அவரது வார்த்தைகளை எல்லாம் சரியாகப் பின்பற்றுகிறேன். இப்படியாக பல்வேறுபட்ட சிந்தனைகளால் தங்கள் இருதயத்தை தாங்களே கடினமாக்கி வைத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு என்னதான் சத்தியத்தை எடுத்துரைத்தாலும் அது அவர்களது கடின இருதயத்தைக் கடந்து உள்ளே செல்லுவது சாத்தியமேயில்லை.

கர்த்தருடைய வசனத்துக்குத் தங்களை ஒப்புக்கொடுக்காமல் இப்படியாக கடின இருதயத்தோடு இருப்பவர்கள், சோதனைக் காலத்தில் பின்மாற்றமடைந்து போவார்கள். நாம் வசனத்தை கேட்பவர்களாய் மாத்திரம் இருப்பதில் எந்தவிதமான பயனும் இல்லை. வசனம் நமக்குள் வேர் ஊன்றி இருப்பதே அவசியம். வசனம் நமக்குள் இருந்தால்தான் நாமும் இயேசுவைப்போல சோதனைகள் வரும்போது வசனத்தைக் கொண்டு ஜெயிக்கமுடியும். ஒரு மரமானது எப்படியாக ஆழமாக வேர் ஊன்றி வளருகிறதோ அந்தளவுக்கு அந்த மரமானது உறுதியானதாகவும், செழிப்புள்ளதாகவும் இருக்கும். அதுபோலவே நாமும் தேவனுக்குள் உறுதியாகவும், செழிப்பாகவும் இருக்க வேண்டுமேயானால் அவருடைய வசனம் நமக்குள் வேர் ஊன்றவேண்டும். வேர் ஆழமாக ஊன்ற ஊன்ற நாமும் தேவனுக்குள் உறுதியாகக் கட்டப்படுவோம். அப்பொழுது கடினமான பெரிய சோதனை வந்தாலும் நாம் கர்த்தருக்குள் உறுதியாகவும் திடமாகவும் இருக்கமுடியும். பின்னர், பின்மாற்றம் என்பது நமது வாழ்வில் காணப்படவே மாட்டாது.

பிரியமானவர்களே, நாம் சோதனைக்குத் தப்பித்துக்கொள்ள விழித்திருந்து ஜெபிப்பதோடுகூட, தேவனுடைய வார்த்தையிலும் வேர்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். இதை இந்த லெந்து நாட்களில் ஆரம்பித்து, தொடர்ந்தும் கைக்கொள்ளுவோம். “தங்களுக்குள்ளே வேர் கொள்ளாதபடியினாலே கொஞ்சக்காலம் மாத்திரமே நிலைத்திருக்கிறார்கள்” (மாற்.4:17) என்ற வாக்கியம் நமக்கு எச்சரிப்பாக இருக்கட்டும்.

ஜெபம்: தேவனே, நாங்கள் சந்திக்கும் சோதனைகாலத்தில் பின்வாங்கிப் போய்விடாமல் வசனத்தில் வேரூன்றி விசுவாசத்தில் நிலைத்திருக்க எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.