ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 4 புதன்

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நாட்களில் தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் ஞாபகசக்தியோடு நிதானத்தோடும் அதேசமயத்தில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில் விரைவாக எழுதி முதலிடத்தில் வெற்றி சிறக்க கர்த்தருடைய அனுக்கிரகத்திற்காக பாரத்தோடு ஜெபிப்போம்.

சோதனையை அனுமதிக்கிறார்!

தியானம்: 2026 மார்ச் 4 புதன் | வேத வாசிப்பு: யோபு 1:1-12

YouTube video

இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; (யோபு 1:12).

எல்லா மனுஷருக்குமே சோதனைகள் நேரிடும். ஆனால் சோதனைகளை யாருமே விரும்புவதில்லை. என்றாலும், நமக்கு நேரிட்ட சோதனை மிகுந்த காலங்களை நாம் திரும்பிப் பார்க்கும்போது, அவைகள் தான் நமது வாழ்வில், நாம் தேவனோடு நெருங்கியிருந்த காலங்களாகவும், நம்மை அவருடைய வழிகளில் பக்குவப்படுத்திய காலங்களாகவும் இருந்திருப்பதைக் காணலாம். நாம் அமர்ந்திருந்து சிந்தித்தால் இது உண்மையென்று புரிந்துகொள்வோம்.

சோதனைகள் நமக்கு திடீரென நேரிடையாக நேரிடுவது கிடையாது, தேவன் அதை அனுமதிக்கிறார் என்றே சொல்லவேண்டும். இங்கே யோபுவின் வாழ்வை நோக்கிப் பார்க்கும்போது, அவன் தேவனுடைய பார்வையில் உத்தமமான ஒரு வாழ்வை வாழ்ந்தான் என்பதற்கு தேவனே சாட்சியாகவும் இருக்கிறார். யோபுவின் உத்தமத்தைக்குறித்து சாத்தான் தேவனுக்குச் சவாலிட்டபோது, அவனைச் சோதிப்பதற்கு தேவன், சாத்தானுக்கு அனுமதி கொடுத்தார். ஆனால் அவன்மேல் மாத்திரம் கைபோடாதே என்கிறார். அதாவது தேவனின் அனுமதியில்லாமல் சாத்தான் யோபுவின் ஜீவனைத் தொடமுடியாதபடிக்கு தேவன் யோபுவைச் சுற்றிலும் பாதுகாப்பாய் இருந்தார். எனவே, தேவனின் அனுமதியோடு கூடவே சாத்தான் யோபுவிடம் வருகிறான் என்பது தெளிவாகிறது.

சாத்தானின் சோதனையில் யோபு எல்லாவற்றையும் இழந்து போயிருக்கலாம், கலங்கிப் போயிருக்கலாம், சோர்ந்து போயிருக்கலாம், தேவனிடம் பல கேள்விகள் கேட்டிருக்கலாம். ஆனால் அவன் சோதனையில் தோற்றுப் போகவில்லை. வழிவிலகிப் போகவில்லை. பிசாசையே தோற்கடித்தான். மீண்டும் மீண்டும் சாத்தான் தேவனிடம் சென்று யோபுவை வீழ்த்துவதற்காகப் போராடுகிறான், அவன் சரீரத்தையும் தொடுவதற்கு தேவனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு வந்து, கொடிய பருக்களால் அவனை வாதிக்கிறான். ஆனாலும் கடைசியில் சாத்தானே தோற்றுப் போனான். யோபுவோ தேவனின் இரட்டிப்பான ஆசீர்வாதத்திற்குப் பங்காளியானான்.

இன்று நமக்கு வரும் சோதனைகளை நாம் எப்படிப் பார்க்கிறோம்? தேவ அனுமதி இல்லாமல் எந்த சோதனையும் நம்மை அணுகாது என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? அல்லது சாத்தான் தானாகவே நம் வாழ்வில் நுழையும்படிக்கு நாமே வழிவகுத்துக் கொடுத்துவிட்டு, பின்னர் தவிக்கிறோமா? நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். நம்மை சரி செய்துக்கொள்ளுவோம்.

தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல (யாக்.1:13)

ஜெபம்: “கர்த்தாவே, எங்களுக்கு நேரிடும் சோதனைகள், எங்களைப் புடமிட்டு தேவனுக்கு உகந்தவர்களாய் மாற்றவே என்பதை அறிந்துகொள்ள எங்களுக்குதவும். ஆமென்.”