ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 6 வெள்ளி
திபெத் நாட்டிற்காக ஜெபிப்போம். திபெத் தன்னாட்சி பகுதி என்ற பெயரில் சீனமக்கள் குடியரசின் ஒரு பகுதியாக விளங்கும் இங்கே கடந்த 15 ஆண்டுகளாக அனைவருக்கும் இலவசமாக கல்வி கற்பிக்கப்படுகிறது. குறைந்த மக்கள் தொகை கொண்ட இந்நாட்டின் அதிபதிகள், மக்கள் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட, மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள ஜெபிப்போம்.
திராணிக்கு மேலாக சோதிக்கவிடார்!
தியானம்: 2026 மார்ச் 6 வெள்ளி | வேத வாசிப்பு: யோபு 2:1-13

தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான் (யோபு 2:10).
வலியைத் தாங்கும் பெலன் மனுஷருக்கு, மனுஷர் வேறுபட்டது. ஒருவர் அதிக வலி என்று சொல்லும் அந்த வேதனையானது, இன்னுமொருவர் இது தாங்கக்கூடிய வலிதான் என்பார். இதனால் பொதுவாக ஒருவர் வலிக்கிறது என்று சொன்னால், ஒன்றிலிருந்து பத்துக்குள் உங்கள் வலி எந்த இலக்கத்துக்குரியது என்று கேட்டு அவருடைய தாங்கும் சக்தியை அறிந்துகொள்வது வழக்கம். அதுபோலவே சோதனையையும் தாங்கும் திராணி மனுஷருக்கு, மனுஷர் வேறுபட்டதே. அதனால்தான் தேவன், நமது திராணிக்கு மேலாக நாம் சோதிக்கப்பட தாம் விடப்போவதில்லை என்கிறார். யோபுவின் வாழ்வைப் பார்க்கும்போது, யோபுவை என்னவேண்டுமானாலும் செய்து பார் என்று சாத்தானுக்கு தேவன் உடனடியாக அனுமதி கொடுக்கவில்லை. முதலில் “யோபுவின் மேல் கைபோடாதே” என்கிறார். சாத்தான் யோபுவுக்கு உண்டான சகலவற்றையும் அழித்துப் போட்டான். பிள்ளைகளையும் சாகடித்தான். ஆனால் யோபுவோ, “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்கிறார். இந்த சோதனையில் அவர் தேவனை மகிமைப்படுத்தினார்.
ஆனால் சாத்தானுக்குப் பொறுக்கவில்லை; ஓடுகிறான் தேவனிடம். “நீர் அவனைத் தொடாமல் இருக்கச் சொன்னீர். அவனுக்குண்டானவைகள் தானே அழிந்தன. அவனது தோலுக்கும், ஜீவனுக்கும் பதிலாக அவன் என்னத்தையும் கொடுப்பான். அவனது மாம்சத்தைத் தொட்டால் நிச்சயம் அவன் உம்மைத் தூஷித்துவிடுவான்” என்கிறான். இப்போதும் தேவன், “சரி, அவன் மாம்சத்தை உன் கையில் தருகிறேன். ஆனால், அவன் பிராணனுக்கு ஒன்றும் செய்யாதே” என்கிறார். இதனால் சாத்தான் உச்சந்தலை தொடங்கி, உள்ளங்கால் மட்டும் கொடிய பருக்களால் யோபுவை வாதித்தான். யோபு சாம்பலில் உட்கார்ந்து ஒரு சிரட்டைத் துண்டால் சொறிந்த வண்ணம் இருந்தான். இப்போது அவனது மனைவி அங்கே ஆட்டங்கண்டாள். “ஏன் இன்னமும் தேவனில் நம்பிக்கையாய் இருக்கிறீர்? அவரைத் தூஷித்துவிட்டு ஜீவனை விடும்” என்கிறாள். யோபு மனைவியைக் கடிந்துகொண்டு, “தேவனுடைய கைகளில் நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ” என்கிறார்.
சோதனையைத் தாங்கும்படியான திராணி யோபுவுக்கு இருந்தது. அவன் தேவன்மீது வைத்திருந்த நம்பிக்கையின் அளவும் அந்தளவு பெரிதாகவே இருந்திருக்கிறது. நமக்குள் இருக்கும் திராணியின் அளவு எவ்வளவு? சோதனை வரப்போகிறது என்று அறிந்தவுடனேயே சுருண்டு சோர்ந்து நிற்கிறோமா? தேவனை நோக்கி நமது முழங்கால்களைத் திடப்படுத்துவோம். உங்கள் திராணிக்கு மேலாக சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையோடு கூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் (1கொரி. 10:13).
ஜெபம்: ஆண்டவரே, நீர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்க கிருபை தாரும். ஆமென்.