ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 8 ஞாயிறு
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக … எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார் (பிலி.2:11) அனைத்து திருச்சபை ஆராதனைகளிலும் போட்டி பொறாமைகளின்றி ஒருமித்து அவருடைய சிறந்த நாமத்தை உயர்த்தவும், லெந்து நாட்களின் சிறப்பு கூட்டங்களின் பலனாக சபை மக்கள் ஆவிக்குரிய வாழ்வில் புதுப்பிக்கப்படவும் ஜெபிப்போம்.
புகழ்ச்சியே சோதனை
தியானம்: 2026 மார்ச் 8 ஞாயிறு | வேத வாசிப்பு: 1சாமுவேல் 18:1-15

வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை (நீதி. 27:21).
தேவனுடைய அழைப்பைப் பெற்று ஊழியத்துக்காக வருகின்ற அநேகர், பின்பு புகழ்ச்சியை விரும்பி, புகழ்ச்சிக்குப் பின்பாக ஓடி அழிந்துபோகிறதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இன்று புகழ்ச்சியே மனிதனுக்குப் பெரும் சோதனையாகிறது என்பதே உண்மை.
இஸ்ரவேலருக்கு எதிராக வந்து நின்று அறைகூவல் விடுத்த கோலியாத் என்னும் பெலிஸ்தனை எதிர்கொண்டு போர் செய்ய யாருக்குமே துணிவிருக்கவில்லை. ராஜாவாகிய சவுல் முதற்கொண்டு இஸ்ரவேலர் யாவருமே அவனது தோற்றத்தையும், அவனது சவாலையும் எதிர்கொள்ள முடியாமல் நடுங்கிய வண்ணம் இருந்தார்கள். தற்செயலாக அங்கு வந்த தாவீது, சேனைகளின் கர்த்தரின் நாமத்தை நிந்திப்பதற்கு இவன் யார் என்று சொல்லி, கோலியாத்தை எதிர்கொண்டு வெற்றியும் கண்டான்; எல்லாருடைய பாராட்டுதலையும் பெற்றுக்கொண்டான். உடனடியாக சவுலும்கூட அவனைப் பாராட்டினான். பின்னர் ஸ்திரீகள், “சவுல் கொன்றது ஆயிரம்; தாவீது கொன்றதோ பதினாயிரம்” என்று பாடியபோது. தாவீதுக்குப் புகழ்ச்சி போகிறதே என்று எண்ணிய ராஜாவாகிய சவுலுக்கு மிகுந்த எரிச்சலும், பொறாமையும் உண்டானது. அன்று முதல் தாவீதை எரிச்சலுடன் சவுல் பார்த்தான். தனது புகழ்ச்சியை இப்போது தாவீது எடுத்துக்கொண்டான் என்று சவுல், தாவீதுமீது கோபப்பட்டான். அதனால் தேவனுடைய அபிஷேகத்தையும் இழந்துபோனான், கர்த்தரின் ஆவியானவர் சவுலை விட்டு விலகினார். பொல்லாத ஆவி சவுலுக்குள் வந்தது என்று காண்கிறோம்.
இன்று நம்முடைய வாழ்விலும் புகழ்ச்சியே நமக்குச் சோதனையாக அமைந்து விடுகிறது. நாம் புகழ்ச்சியைத் தேடி ஓட வேண்டியதில்லை. தேவனுடைய நாமத்தின் புகழ்ச்சிக்காகவே நாம் வாழவேண்டும். ஆண்டவர் இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது அவர் புகழ்ச்சியைத் தேடி ஓடவில்லை. எல்லாவற்றிற்கும் தேவனையே மகிமைப்படுத்தி வாழ்ந்தார். நாமும் அதுபோலவே வாழக் கற்றுக்கொள்வோம். புகழ்ச்சியைத் தேடி ஓடும்போது, மற்றவர்கள்மேல் அது பொறாமையையும், போட்டி மனப்பான்மையையும் தூண்டிவிடும். அதுவே நமது வாழ்வுக்கு பெரிதான வீழ்ச்சியையும், அழிவையும் கொண்டுவந்துவிடும். ஜாக்கிரதையாய் இருப்போம். “எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது, உங்களுக்கு ஐயோ, அவர்கள் பிதாக்கள் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்” (லூக்.6:26) என்று ஆண்டவர் தாமே கூறியதைச் சிந்திப்போமாக.
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, மனுஷரின் புகழ்ச்சிகளில் நாங்கள் வஞ்சிக்கப்பட்டு அழிவை காணாதபடி உமது நாமத்தின் புகழ்ச்சிக்காகவே நாங்கள் வாழ உமது கிருபைகளைத் தாரும். ஆமென்.