ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 19 வியாழன்
நான் தியானம் பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார் (சங்.55:17) அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை அன்றாடம் வாசித்து கிறிஸ்து இயேசுவுக்குள் பெலன் கொள்ளுகிறவர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து. தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் அதிகமதிகமாய் உபயோகித்து அநேக ஆயிரங்களுக்கு பிரயோஜனமாக பயன்படுத்த ஜெபிப்போம்.
நமது பணியிலே தேவபயம்
தியானம்: 2026 மார்ச் 19 வியாழன் | வேத வாசிப்பு: நெகேமியா 5:1-19

நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை (நெகேமியா 5:15).
வீட்டில் வேலை செய்யும் பெண்ணை தனியே விட்டுவிட்டு, வீட்டார் அனைவரும் வெளிநாடு சென்றுவிட்டார்கள். தனது அக்கா தனியாக இருக்கிறாளே என்று கவலைப்பட்ட அவளது தங்கை, தொலைபேசியில் அக்காவைக் கூப்பிட்டு, “உனக்கு தனியே இருக்கப் பயமில்லையா? ஏதாவது நடந்தால் யாருக்குத் தெரியும்? என்றாள். மறுமுனையில் இருந்து, “அதுதான் வீட்டுக்கார அம்மா கேமராவில் என்னைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்களே. ஏதாவது நடந்தால் அவர்கள் ஆவன செய்வார்கள்” என்ற பதில் வந்தது. இப்போ எங்கு பார்த்தாலும சிசிடிவி கேமராக்கள்தான். நமது பணத்தை ஏடிஎம் மெஷினில் எடுப்பதென்றாலும் தலைக்கு மேலே கேமராதான். இப்படியே எந்த நேரமும் நம்மை யாரோ ஒருவர் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வு வரும்போது, அது தவறு செய்வதற்கு விடாதல்லவா.
கர்த்தருக்குப் பயந்து வாழும் வாழ்வும் அப்படிப்பட்ட ஒன்றுதான். கர்த்தர் எந்த நேரமும் நம்மேல் கண்ணோக்கமாய் இருக்கிறார். அவர் நம்மைப் பார்த்த வண்ணமே இருக்கிறார் என்ற எண்ணம் நம்மை அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்ய விடாது. இங்கே நெகேமியா தவறு செய்தவர்களைக் கண்டித்து, அவர்கள் தொடர்ந்து தவறு செய்யாதபடிக்கு ஆலோசனை சொல்லுகிறார். கடன் கொடுத்தவர்கள்மேல் கடினமாக இராதபடிக்கும், வட்டி வாங்குவதை நிறுத்தும்படிக்கும் ஆலோசனை சொல்லுகிறார். மக்களும் நெகேமியாவின் சத்தத்திற்கு செவிகொடுத்து, கர்த்தருக்குப் பயந்து வாழ சம்மதம் தெரிவித்தார்கள். நெகேமியா தனக்கு முன்னிருந்த அதிபதிகள் எப்படியெல்லாம் தவறு செய்தார்கள் என்பதை உணர்ந்து, தான் கர்த்தருக்குப் பயந்ததினால் அவ்வாறாக செய்யவில்லை என்பதையும் இங்கே சாட்சியாகக் கூறுவதைக் காண்கிறோம். நெகேமியாவிடம் காணப்பட்ட இந்த குணாதிசயம், இன்று அவர் பணி செய்யும் நம்மில் காணப்படுகிறதா என்பது சிந்திக்கவேண்டிய விஷயம்.
பிரியமானவர்களே, நாமும் நமது ஊழியப் பணிகளில், பணித்தளங்களில் இதேபோல தேவனுக்குப் பயந்த மக்களாய் பணி செய்கிறோமா என்று நம்மை நாமே ஆராய்ந்துப் பார்ப்போம். நமது வாழ்க்கை முறைகளைப் பார்ப்போர் அதனூடாக தேவனையும் அவரது வார்த்தைகள் நமது ஜீவியத்தில் வாழ்வதையும் காண்கிறார்களா? “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்; அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்” (சங்.37:23). நாம் உண்மையிலேயே தேவனுக்குப் பயந்தவர்களானால் அது நமது வாழ்வில் எல்லாப் பகுதிகளிலும் இன்றே பிரதிபலிக்கட்டும்.
ஜெபம்: “எப்போதும் எங்கள்மேல் கண்ணோக்கமாயிருக்கிற தேவனே, நான் சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். ஆமென்.”