ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 20 வெள்ளி
ஏமன் நாட்டிற்காக ஜெபிப்போம். உலகின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக காணப்படும் இங்கே உள்ள பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்காகவும், உள்நாட்டு போர் நீங்கி மக்கள் அமைதியாகவும், நாட்டின் வளம்பெருகி பஞ்சம் நீங்குவதற்கும் வேண்டுதல் செய்வோம்.
கர்த்தர் விடுவிக்கிறார்
தியானம்: 2026 மார்ச் 20 வெள்ளி | வேத வாசிப்பு: சங்கீதம் 34:1-22

கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளையமிறங்கி அவர்களை விடுவிக்கிறார் (சங். 34:7).
34ம் சங்கீதம் அனைவருக்குமே மிகவும் பிடித்தமான சங்கீதம். 84 வயதான ஒரு முதியவர் அடிக்கடி இந்த 7வது வசனத்தை தனக்கு மிகவும் பிடித்தமான வசனம் என்று சொல்லிக்கொள்வார். அவர் கர்த்தருக்குப் பயந்த ஒரு மனிதர். அவர் தூரஇடங்களுக்கெல்லாம் தனது மிதி வண்டியில் சென்று கஷ்டப்பட்ட மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டு வருவார். இலங்கையின் யுத்தகாலங்களில் அவர் வகுப்பு எடுத்துவிட்டு வரும்போது ஹெலிகாப்டரில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டார். மதிலோரமாக ஒதுங்கியபோது, சைக்கிளில் அமர்ந்தவண்ணமாக உயிர் பிரிந்திருந்த நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார். அப்படியானால் அவருக்குப் பிடித்தமான இந்த வசனம் அவருடைய வாழ்வில் பொய்யாயிற்றா என்று நாம் கேட்க முடியுமா? அன்று அவரது உயிர் அப்படியாகப் பிரிந்தது. அதனாலே கர்த்தர் அவரை காப்பாற்றவில்லையே என்று நாம் சொல்ல முடியாது! கர்த்தருடைய வசனம் என்றைக்குமே தவறிப்போகாது. இப்படியான கேள்விகளுக்கு இன்று சரியான பதிலைக் காண நமது அறிவு போதாததாக இருக்கிறது. ஆனால் தேவனோ உண்மையுள்ளவராய் இருக்கிறார். அவருடைய வசனமும் சத்தியமாய் இருக்கிறது என்பதுதான் உண்மை.
யோசேப்பின் வாழ்வில் எத்தனை ஏமாற்றங்கள், கஷ்டங்கள், அவன் விற்கப்பட்ட நிலைமை, செய்யாத குற்றத்துக்காக சிறைவாசம் இப்படியாக எத்தனையோ பல காரியங்களை அவன் சந்தித்தான். அவன் என்ன குற்றம் செய்தான்? எல்லாமே அவனுடைய வாழ்வினூடாக தேவனுடைய மேன்மையான திட்டம் நிறைவேறுவதற்காகவே நடந்தது என்று காண்கிறோம். நமது வாழ்வையும், தேவனுடைய மேன்மையான திட்டம் நிறைவேறும்படிக்காக ஒப்புக்கொடுக்க நாம் ஆயத்தமா? இந்த லெந்து நாட்களின் இறுதியில் ஆண்டவரின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் நாட்களுக்கூடாகக் கடந்து செல்லப்போகிறோம். ஆண்டவர், பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவும் நமக்கான மீட்பின் திட்டத்தை நிறைவேற்றவுமே இந்தப் பாடுகளுக்கூடாகக் கடந்து சென்றார். நாமும் அப்படியே நமது வாழ்வில் தேவனுடைய சித்தம் நிறைவேறும்படிக்கு நம்மை ஒப்புக்கொடுத்துவிடுவோமாக. “ஆகையால் நீங்கள் மதியற்றவர்களாயிராமல் கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள்” (எபே.5:17).
இந்த லெந்து நாட்களில் நமது உள்ளங்களில் இப்படியான மேன்மையான சிந்தனைகளை உருவாக்குவோம். தேவனுடைய மேன்மையான திட்டங்கள் நமது வாழ்வுக்கூடாக நிறைவேற நம்மை அவர் கரங்களில் ஒப்படைப்போம்.
ஜெபம்: கர்த்தாவே, நீர் என் தயாபரர், என் கோட்டை, என் உயர்ந்த அடைக்கலம், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், என் நம்பிக்கையுமாயிருக்கிறீர். உம் சித்தம் என் வாழ்வில் நிறைவேறட்டும். ஆமென்.