ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 25 புதன்

மிசோரம் மாநிலத்திற்காக ஜெபிப்போம். கல்வித்துறையில் சிறந்து விளங்கும் இம்மாநிலத்தின் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள், தொழில் நுட்ப கல்லூரிகள் இன்னும் மேம்படுத்தப்படுவதற்கும், நடைபெற்றுவரும் சுவிசேஷ பணிகளுக்காகவும், திருச்சபை வளர்ச்சிபெற்று எல்லா பட்டணங்கள், கிராமங்களிலும் சபைகள் கட்டப்பட ஜெபிப்போம்.

தேடினாலும் கிடைக்காது!

தியானம்: 2026 மார்ச் 25 புதன் | வேத வாசிப்பு: ஆமோஸ் 8: 1-14

YouTube video

அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட … அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள் (ஆமோஸ் 8:12).

ஒரு 92 வயதுள்ள படுத்த படுக்கையிலிருந்த ஒரு தாயாரை சந்திக்க சென்றிருந்தோம். அவரால் இப்போது எழுதவோ வேதத்தை வாசிக்கவோ முடியவில்லை. ஆனால், அவர் வாசித்த வேதாகமம் என்று ஒரு வேதாகமத்தைக் காட்டினார்கள், அதிலே ஒரு இடமும் இல்லாமல் குறிப்புகள் எழுதப்பட்டு, கோடிடப்பட்டு இருந்தது. அத்துடன் அவர் குறிப்புகள் எடுக்கும் காப்பிகள் என்று பல காப்பிகளைக் காட்டினார்கள். முடியுமானபோது அவர்கள் கிரகித்துக்கொண்ட வார்த்தைகள் இப்பொழுது இயலாமல் படுத்திருக்கும்போதும்கூட சிந்திக்கக்கூடிய சிந்தனா சக்தியோடு அவை கலந்திருப்பதைக் கண்டேன். இதைத்தான் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பார்களோ!

இங்கே ஆமோஸ் தீர்க்கதரிசி உரைத்த ஒரு தீர்க்கதரிசனத்தை காண்கிறோம். “தேசத்தின் மீது கொடிய பஞ்சத்தை அனுப்புவேன், அது ஆகாரக் குறைவினால் உண்டான பஞ்சமோ, ஜலக்குறைவினால் உண்டான தாகமோ அல்ல. கர்த்தருடைய வசனத்தைக் கேட்கக்கூடாதபடிக்கு உண்டான பஞ்சம். எல்லா இடமும் தேடினாலும் அது கிடைக்காது. வடதிசை தொடங்கி, கீழ்த்திசை மட்டும் திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள்” என்பதாகும்.

பிரியமானவர்களே, இன்று நம் ஒவ்வொருவர் கையிலும் ஒரு வேதாகமத்தை வைத்துக்கொள்ளும் ஒரு காலத்தில் வாழ்கிறோம். ஆனால், அதைச் சுமந்து செல்லவேண்டாமென்று நமது கையடக்கத் தொலைபேசியிலும் அதைப் போட்டு வைத்துள்ளோம். எந்த நேரத்திலும் அதைப் படிக்கக்கூடிய, தியானிக்கக்கூடிய வசதியுடன் இருக்கிறோம். இவ்வித காலத்தை தவறவிட்டால், இப்படியொரு காலம் இனிக் கிடைக்குமா என்பது சந்தேகமே. நம்மை வழிநடத்தும் ஒரு வெளிச்சம் அது. நாம் நடக்க வேண்டிய பாதையையும், நடக்கவேண்டிய விதத்தையும் கற்றுக்கொடுக்கும் ஒரு ஆசானாக தேவனருளிய பரிசுத்த வேதாகமம் இருக்கிறது. அப்படிப்பட்ட கர்த்தருடைய சத்திய வார்த்தையை நாம் அசட்டை செய்வது எப்படி?

சிலர் லெந்து நாட்களில் அதிகமாக வேதாகமத்தைப் படித்து தியானிப்பார்கள். பின்னர் அந்நாட்கள் முடிந்ததும் அதை விட்டுவிடுவோரும் உண்டு. நாம் அப்படி இருக்கக் கூடாது. வேதவசனம் எப்போதும் நமது தியானமாக இருக்கவேண்டும். எப்போதும் நமது வாயில் இருக்கவேண்டும். எப்போதும் வாழ்க்கையில் பிரதிபலிக்கவேண்டும். நாம் இந்தத் தபசு காலங்களில் அதை ஆரம்பித்து நமது வாழ்நாள் முடியுமட்டும் அதை நமது தியானமாகக் கொள்வோமா. “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாய் இருக்கிறது” (சங்கீதம் 19:7).

ஜெபம்: அன்பின் தேவனே, நாங்கள் நடக்கவேண்டிய வழியை கற்றுக்கொடுக்கும் ஆசானாக பரிசுத்த வேதாகமத்தைத் தந்திருக்கிறீர். உமக்கு ஸ்தோத்திரம். அதை வாசித்து தியானித்துக் கீழ்ப்படிய எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.