வாக்குத்தத்தம்: 2026 மார்ச் 21 சனி

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். (ஏசாயா 53:4)
வேதவாசிப்பு: உபாகமம் 24,25,26 | மாலை: லூக்கா 02:01-35

ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 21 சனி

உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும் .. எச்சரிக்கையாயிருங்கள் (லூக்.21:34) கர்த்தருடைய வருகையைக் குறித்த எண்ணமற்று நிர்விசாரத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்பட, எச்சரிப்பு பெற்று ஆயத்தத்தோடு காணப்பட ஜெபிப்போம்.

மனதை ஒருமுகப்படுத்து

தியானம்: 2026 மார்ச் 21 சனி | வேத வாசிப்பு: சங்கீதம் 86:1-17

YouTube video

கர்த்தாவே, …. உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும் (சங்.86:11).

இருதயத்தை ஒருமுகப்படுத்துவது என்பது சிலருக்குக் கடினமான விஷயம்தான். ஆலயத்திலே, ஜெபத்திலும் இருப்பார்கள்; ஆனால், அவர்களது இருதயமும், சிந்தனைகளும் வேறெங்கோ இருக்கும். ஒருமுறை வீடியோ காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணி, அதிலே மழை பெய்வதைக் கண்டு திடீரென, “ஐயோ துணிகள் வெளியில் போட்டேனே” என்று அவசரமாக எழுந்து ஓடியதைக் கண்டு அனைவரும் சிரித்தனர். “நீங்கள் படத்தைப் பார்க்கிறீர்களா, அல்லது வெளியில் காய்ந்துகொண்டிருக்கும் துணிகளைக்குறித்த சிந்தனையோடு இருந்தீர்களா” என கேலி செய்தனர்.

இங்கே சங்கீதக்காரன், “உமது நாமத்துக்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” என்கிறார். கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை நோக்கி நமது இருதயத்தை ஒருமுகப்படுத்தாதவிடத்து நாம் வழிவிலகிப் போவதைத் தடுக்கமுடியாது. நமது வாழ்க்கைப் பாதையில் அநேக தேவைகள் நம்மைச் சுற்றிலும் வரும். அதை நிறைவேற்ற சில தவறான பாதைகளையும் நாடுகின்ற சந்தர்ப்பங்களும் ஏற்படும். எனவே, எப்போதும் கர்த்தரின் நாமத்துக்குப் பயந்திருக்கும்படிக்கு நமது இருதயத்தை நாம் ஒருமுகப்படுத்தாது போனால் நாமும் தவறிவிடக்கூடும்.

யோபு எல்லாவற்றையும் இழந்தவராய், தனது உடலிலும் பருக்களால் வாதிக்கப்பட்டவராக இருந்தவேளையில்கூட அவர் கர்த்தருக்குப் பயப்பட்டவராய், “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லி திடமாக இருந்ததைக் காண்கிறோம். ஆனால் அந்த நேரத்திலும் அவரது மனைவியாலேயே அவருக்குச் சோதனை வந்தது. அவள் யோபுவின் மனதைச் சோரப்பண்ணும் பொருட்டு பேசுவதைக் காண்கிறோம். “இன்னமும் தேவன்மேல் நம்பிக்கையாய் இருக்கிறீரோ? தேவனை தூஷித்து ஜீவனை விடும்” என்று அவனது இருதயத்தை சோரப்பண்ணி, தேவன்மேலுள்ள விசுவாசத்தைத் தளரப்பண்ணி, கர்த்தருக்குப் பயப்படும் பயத்தைவிட்டு அவனை விலக்கிவிடத்தக்கதாய் பேசினாள். யோபுவோ அவள் பேச்சுக்கு இடங்கொடாமல், “கர்த்தரிடத்தில் இருந்து நன்மையைப் பெற்ற நாம், தீமையையும் பெறவேண்டாமோ” என்று சொல்லி யோபு தனது இருதயத்தைக் கர்த்தருக்குப் பயப்படும் பயத்துடன் ஒருமுகப்படுத்தியதைக் காண்கிறோம்.

எந்த சூழ்நிலையிலும் தேவனுக்குப் பயப்படும் பயத்தை நோக்கியே நமது இருதயத்தை ஒருமுகப்படுத்துவோமாக. “என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப் படுத்துவேன்” (சங்.86:12) என்ற சங்கீதக்காரனைப்போல ஜெபிப்போமா!

ஜெபம்: அன்பின் பிதாவே, எங்கள் சிந்தைகள், எண்ணங்களை ஒருமுகப்படுத்தி ஜெபிக்க எங்களுக்கு உமது வல்லமையைத் தந்தருளும். ஆமென்.