ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 13 திங்கள்
பங்காளர் குடும்பங்களிலே தங்கள் பிள்ளைகளுக்கான வாழ்க்கைத் துணைகளை தெரிவு செய்வதில் பெற்றோர்கள் கர்த்தரைச் சார்ந்து தேவனுடைய நன்மையும் பிரியமுமான சித்தம் மாத்திரம் நிறைவேற முயற்சிக்கவும், திருமணத்திற்கு காத்திருக்கும் பிள்ளைகளும் தங்கள் வாழ்வைக் கட்டும் கர்த்தருக்கு தங்களை அர்ப்பணிக்கிறவர்களாக காணப்பட ஜெபிப்போம்.
மும்முறை
தியானம்: 2026 ஏப்ரல் 13 திங்கள் | வேத வாசிப்பு: யோவான் 21:15-19

மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார் (யோவான் 21:17).
ஆண்டவர் நமக்குள், நமது அந்தரங்கத்துக்குள் நுழையவேண்டுமானால், அத்தனை திறப்புகளையும் நாம் அவரிடம் மனப்பூர்வமாய் ஒப்புவிக்கவேண்டும். “நீர் என்னுள் நுழைய, நான் உமக்குள் நுழைய என்னை நடத்தும்” என்று ஒருவர் ஜெபித்தார். நாம் எங்கே தவறு விடுகிறோமோ, அந்த இடத்திலிருந்து கர்த்தர் நம்மை உணர்த்தி, தூக்கிவிடுகிறவர். அவர் உணர்த்தும்போது உணர்வடைந்து, நம்மை அவருக்கே சமர்ப்பிக்க ஆயத்தமாயிருக்கிறோமா?
தம்மை மூன்று முறை மறுதலித்தவனிடம் மூன்று தடவைகளாக கேள்வி கேட்டு, பேதுருவை மூடியிருந்த மேகத்தை கர்த்தர் நீக்கிவிட்டதைக் கவனிக்கவும். இந்த இடத்தில், “யோனாவின் குமாரனாகிய சீமோனே” என்று பேதுருவின் அசல் பெயரினால் அழைக்கிறார் இயேசு. ஆக, ஆண்டவர் அவசர அவசரமாக பேதுருவுடன் இடைப்பட விரும்பவில்லை. பேதுரு, தான் யார் என்பதை ஏற்றுக்கொண்டு படிப்படியாக உணர்வடைய வேண்டியது அவசியமாயிருந்தது. “நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா” என்று கர்த்தர் கேட்டபோது, கிரேக்க பாஷையில் இது, எதையும் எதிர்பாராத, முற்றிலும் அர்ப்பணிக்கிற “அகாபே” அன்பைக் குறிக்கிறது. அத்துடன், “இவர்களிலும் அதிகமாக” என்று கேட்பதையும் கவனிக்கவும். இரண்டாவது தடவையாக கேட்ட போது, பேதுரு, “நான் உம்மை நேசிக்கிறேன்” என்கிறான். கிரேக்க பாஷையின்படி இது “சகோதரத்துவ அன்பு.” ஆக, இயேசு மூன்றாவது தடவை, “நீ என்னை நேசிக்கிறாயா” என்ற அந்த சகோதரத்துவ அன்பையே கேட்கிறார். இப்போது பேதுரு மனமுடைந்துவிட்டான். பேதுரு தன்னை உணர்ந்த பிற்பாடுதான் கர்த்தர் அவரிடம் பணியை ஒப்படைக்கிறார்.
மனந்திரும்பிய பேதுருவிடம், இயேசு முழுமையான அர்ப்பணிப்பை எதிர்பார்த்தார். இயேசு யார் என்பதை உணர்ந்த பேதுருவின் வாழ்வு மாறியது; தொழில் மாறியது, அவசரக்காரன் என்ற அடையாளம் “கேபா” பாறையாக மாறியது; இயேசுவுடனான அவருடைய உறவும் மாறியது. இயேசுவின் பூரண மன்னிப்பைப் பெற்றுக்கொண்டபோது, இயேசுவின் பாடுகள் மரணம் உயிர்த்தெழுதலின் பெறுமதியை உணர்ந்தார்; இப்போது புதிய மனிதராக, கர்த்தருடைய பணியை ஏற்றுக்கொண்டார் பேதுரு. இன்று நாம் யார்? நமது அடையாளம் என்ன? “நான் உம்மை நேசிக்கிறேன்” என்று மூச்செடுத்துப் பாடுகின்ற நமது நேசம் எப்படிப்பட்டது. அன்று மும்முறை மறுதலித்த பேதுருவிடம் மும்முறை கேள்வி கேட்டு தயார்படுத்தியவர், நம்மையும் நமக்கேற்றபடி தயார்படுத்தி நமது அடையாளத்தையும் மாற்ற வல்லவராக இருக்கிறார். ஆனால், நாம் நம்மை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறோமா?
ஜெபம்: எங்களை தூக்கியெடுக்கும் கர்த்தாவே, எங்கள் வீழ்ச்சியிலும் பின்னடைவிலும் வெறுக்காமல் நேசிக்கிறீர். உமக்கு எங்களை முற்றிலுமாய் அர்ப்பணிக்கிறோம். ஆமென்.