ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 3 வெள்ளி

கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு… (எபி.9:28) புனிதவெள்ளியை அனுசரிக்கும் இந்நாளின் ஆராதனைகள் எல்லா இடங்களிலும் பாதுகாப்போடும் பயபக்தியோடும் ஆசரிக்கப்படுவதற்கும், வழமையான ஆராதனையாக இராமல் அநேகரது வாழ்வில் கிறிஸ்துவுக்குள்ளான புதிய திருப்பத்தை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.

முழுமையும்…

தியானம்: 2026 ஏப்ரல் 3 வெள்ளி | வேத வாசிப்பு: ரோமர் 6:1-6

YouTube video

நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம் (ரோம.6:6).

“என் இயேசு எனக்காகவா இத்தனை பாடுகளை ஏற்று கொடிய சிலுவைக்குத் தம்மை ஒப்புக்கொடுத்தார் என்று உறுத்தப்பட்டு முதன் முதலாகக் கண்ணீர்விட்ட அந்தப் பெரிய வெள்ளி தினத்தை என்னால் மறக்கமுடியாது. அன்றுதான் எனது மனமாற்றத்தின் ஆரம்ப நாள் என்பதை அன்று நான் உணர்ந்திருக்கவில்லை. இந்தப் புதுப்பித்தல் என்னை ஒரு புதிய மனுஷனாகவே மாற்றிவிட்டது.” இந்த இவருடைய மனஉறுத்தல் நம் வாழ்விலும் ஏற்பட்டதுண்டா?

பிறப்பிலிருந்தே பாடுகள் இயேசுவைத் தொடர்ந்தன. ஊழியத்திற்கு வந்ததும் சாத்தானின் சோதனைகள், யூதரின் குற்றச்சாட்டுகள், பரிசேயரின் தொல்லைகள் என்று பல. கூடவே இருந்தவனால் காட்டிக்கொடுத்தல், மறுதலித்தல், தனித்துவிடப்படல் என்றும், பொய்க் குற்றச்சாட்டுகள், சொந்த ஜனத்தினால் புறக்கணிக்கப்படுதல் என்றும் எத்தனை! தசைகளைப் பிய்த்துப்போட்ட கசை அடிகள், துப்பப்பட்ட, குட்டப்பட்ட வேதனை, தண்ணீர் தாகம், தலையிலோ பயங்கர வலிகொடுக்கும் முள்முடி; சிலுவையில் கிடத்தி கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் கடாவப்பட்டு கதறினாரே நமது ஆண்டவர். இது ஒருபுறமிருக்க, அருகில் தொங்கிய கள்வனின் பரிகாசம், நமது பாவம் சுமத்தப்பட்டதால் பிதாவின் முகம் மறைக்கப்பட்ட கொடூரம்! இவை போதாதென்று அவர் இருதயத்தை எட்டுமளவுக்கு ஈட்டியால் விலாப்பகுதியில் குத்தினான் ஒரு போர்வீரன். மொத்தத்தில் தமது முழுமையையும் ஒன்றும் மிச்சமில்லாத சர்வாங்க தகனபலியாக என் பாவத்தின் விலையாக இயேசு தம்மைக் கொடுத்துவிட்டார். இன்னும் நான் எதைக் கேட்பேன்? நாம் இன்று முகங்கொடுக்கின்ற துயரங்கள் அத்தனைக்கும் இயேசு அன்று முன்கூட்டியே முகங்கொடுத்து பாடுபட்டு அவற்றை ஜெயித்துவிட்டார் என்பதை நினைத்தாலே நமது பாடுகள் இலகுவாகிவிடும்.

எனது சரீரத்தின் ஒவ்வொரு அங்கமும், இருதயமும், செய்த, செய்ய நினைத்த என் ஜென்ம பாவசரீரத்தின் அத்தனை பாவங்களையும் என் இயேசு முழுமையாக தம்மீது சுமந்துகொண்டாரே. “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2கொரி.5:21). ஆம், நமது பழைய மனுஷன் கிறிஸ்துவோடேகூட சிலுவையில் அறையப்பட்டாயிற்று. இன்னும் ஏன் பாவத்தைக் கண்டு தடுமாற்றம்? நாம் முன்னர் பாவத்திற்கு அடிமைகள், இப்போது கிறிஸ்துவுக்கான புதிய சிருஷ்டிகள். இந்த விசுவாசமே நமக்குக் கேடயமாக இருக்கும்போது எதைக் கண்டும் அஞ்சத்தேவையில்லை. இந்த முக்கிய நாளிலே கிறிஸ்துவின் முழுமையான பலியை மகிமைப்படுத்துவோமாக.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, என் ஜென்ம கருமபாவங்கள் எல்லாவற்றையும் சிலுவையில் சுமந்து தீர்த்து என்னை புதியமனுஷனாய் மாற்றினீரே. ஸ்தோத்திரம். ஆமென்.