ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 5 ஞாயிறு

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் (மத்.28:6) மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த ஆண்டவரை போற்றிப்பாடி ஆராதிக்கும்படியாக கூடும் அனைத்து திருச்சபை ஆராதனைகளிலும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையால் பிசாசின் வல்லமை தகர்த்தெறியப்படவும், ஆர்ப்பரிப்போடே கர்த்தரின் நாமம் உயர்த்தப்படவும் ஜெபிப்போம்.

கர்த்தர் உயிர்த்தெழுந்தார்

தியானம்: 2026 ஏப்ரல் 5 ஞாயிறு | வேத வாசிப்பு: எபேசியர் 2:1-8

YouTube video

அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக் கூடாதிருந்தது (அப்போஸ்தலர் 2:24).

happy-easter

“கர்த்தர் உயிர்த்தெழுந்தார்”, “உண்மையாகவே கர்த்தர் உயிர்த்தெழுந்தார்.” இதுவே கிறிஸ்துக்குள்ளான வாழ்வின் உறுதியான அஸ்திபாரம். “கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால் …நமது விசுவாசமும் விருதா” நமது விசுவாசம் வீணானதாயிருந்தால், நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.” மேலும், கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே” (1கொரி.15:14,17,18).

லாசரு மரித்தான், அது வியாதியாலுண்டான இயல்பான மரணம்; அவன் உயிர்ப்பிக்கப்பட்டான். நாயீன் ஊர் விதவையின் மகன் மரித்தான், உயிர்ப்பிக்கப்பட்டான். ஆனால், இவை தேவனுடைய அற்புத செயல்கள். இவர்கள் மீண்டும் மரித்தார்கள். ஆனால், இயேசு கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும் வேறுபட்டது. பாவம் என்ற தீயசக்தியையும், அதனாலுண்டான மரணத்தையும் வெற்றிபெற்ற சம்பவங்களே இவை. இயேசு பாவம் செய்யாதவராயிருந்து, நமது பாவங்களையும் அதற்கான தண்டனையையும் தாமே ஏற்றுக்கொண்டு, தாமே சிந்திய தூய இரத்தத்தைப் பலியாகச் செலுத்தியிராவிட்டால், மனுக்குலத்தின் பாவத்திற்கான விலைக்கிரயமாக அவருடைய மரணம் இருந்திராது. அடுத்ததாக, அவர் உயிர்த்தெழுந்திராவிட்டால் நமது உயிர்த்தெழுதலுக்கும் நித்திய வாழ்வுக்குமான நிச்சயம் நமக்குக் கிடைத்திராது. இவை எதுவும் இல்லையானால் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு என்று ஒன்று இருந்திராது. நாமும் நமது பாவத்தில் மாண்டிருப்போம்.

கிறிஸ்து உயிர்த்தெழுந்ததால் நமது சரீரங்களும் உயிரோடே எழுப்பப்படும் என்ற நிச்சயம் கிடைத்திருக்கிறது; அத்துடன் நாம் கிறிஸ்துவின் பிள்ளைகளாக வாழும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறோம். கிறிஸ்துவின் மாபெரும் வெற்றியின் வல்லமையுடன் நாம் இணைக்கப்பட்டிருப்பதால், அவருடன் வாழுகின்ற நித்திய வாழ்வைக்குறித்து நமக்குச் சந்தேகமே கிடையாது. கிறிஸ்து எனக்காக மரித்து உயிர்த்தார் என்று யார் விசுவாசிக்கிறார்களோ, இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன், அக்கிரமங்களில் மரித்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்து, கிருபையினாலே இரட்சித்து, “உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் வைத்தார்” என்று பவுல் முடிந்து விட்ட நிகழ்வாக எழுதியிருப்பதை நம்மால் விசுவாசிக்கக் கூடுமா? இப்படியிருக்க மரித்த ஒருவரைச் சேவிக்கிறவர்கள்போல நமது வாழ்வு காணப்படலாமா? உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமை இன்று நமக்குள் அருளப்பட்டிருக்கிறது. அந்த வல்லமையைக் கொண்டு தீமையை வென்று, சாத்தானை ஜெயித்து, பாவத்தை மேற்கொண்டு நமது வாழ்வில் தேவனுக்கு மகிமை சேர்ப்போமாக!

ஜெபம்: உயிர்த்தெழுந்த நல்ல ஆண்டவரே, உமது வல்லமையாலே நாங்களும் சாத்தானின் கிரியைகளை அழித்துப்போட எங்களுக்குதவும். ஆமென்.