வாக்குத்தத்தம்: 2026 ஏப்ரல் 19 ஞாயிறு

தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். (யோவான் 4:23)
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 1,2 | மாலை: லூக்கா.15

ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 19 ஞாயிறு

என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் (ஏசா.56:7) வடஇந்தியாவில் வன்முறையால் சேதப்படுத்தப்பட்ட ஆலயங்கள் கட்டப்படுவதற்கும், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆலயங்களின் பணிகள் தடைபடாதவாறு விரைவில் கட்டிமுடிக்கப்படவும், ஆலயம் கட்ட அரசுஅனுமதிக்காக காத்திருக்கும் இடங்களில் உள்ள தடைகள் நீங்கி பணிகள் துவங்க ஜெபிப்போம்.

பயத்தினால் முகத்தை மூடினான்

தியானம்: 2026 ஏப்ரல் 19 ஞாயிறு | வேத வாசிப்பு: யாத்திராகமம் 3:1-10

YouTube video

… மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான் (யாத். 3:6).

இலங்கையில் யுத்த சூழலில் மின்சார விளக்கையே காணாமல் இருட்டுக்குள் வளர்ந்த பிள்ளைகள், திடீரென கொழும்புக்கு வந்ததும், வெளிச்சத்தைக் கண்டு, புகைவண்டியைக் கண்டு பயந்து முகத்தை மூடிக்கொண்டதாக பல சம்பவங்களை அந்நாட்களில் அறியக்கூடியதாக இருந்தது. வெளிச்சம் என்பது நல்ல காரியம்தான்; ஆனால் அதற்குப் பழக்கப்படாததால் திடீரென அதைக் கண்டதும் அவர்களுக்குப் பயம் வந்தது. வெளிச்சத்தைத் தாங்கமுடியாமல் முகத்தை மூடிக்கொண்டனர்.

இங்கே மோசேக்கும் அப்படிப்பட்டதான ஒரு சம்பவமே நடக்கிறது. திடீரென முட்செடி பற்றியெரிகிறது; ஆனால், அது வேகாமலும் இருக்கிறது. இது என்ன அதிசயம் என்று கிட்டப்போய் பார்க்க எத்தனித்தபோது, அதற்குள் இருந்து, “மோசே, மோசே” என்று தேவன் கூப்பிடுகிறார். பின்பு தேவன், “கிட்ட வராதே, பாதரட்சையைக் கழற்றிப் போடு, நீ நிற்கிற பூமி பரிசுத்தமுள்ளது” என்கிறார். இந்த சத்தத்தைக் கேட்ட மோசே அதிர்ந்து போனார். பின்பு தாம் யார் என்பதை அறிமுகம் செய்த தேவன், “நான் உன் பிதாக்களின் தேவன்” என்றதும் மோசே பயத்தினால் தன் முகத்தை மூடிக்கொண்டார். இதே மோசேதான் யாத்திராகமம் 33ம் அதிகாரத்தில் தேவனோடு முகமுகமாகப் பேசியவர் என்பது ஆச்சரியமல்லவா (யாத்.33:11). மோசே எவ்வளவாய் தேவனோடுள்ள உறவில் வளர்ந்து வந்திருக்கிறார் என்பது இதில் விளங்குகிறது. தேவன் கொடுத்த பொறுப்பை மோசே செய்துகொண்டு வந்தார். எவ்வளவோ சவால்கள் மத்தியிலும் இஸ்ரவேலரை வழிநடத்தி வந்தார். ஆனாலும், அவருக்கும் தேவனுக்கும் இடையிலான உறவிலே அவர் வளர்ந்து வந்தார். தேவன் அவரை அழைத்தபோது, பயந்து முகத்தை மூடியதுபோல அவர் எப்போதும் செய்யவில்லை. இப்போது தேவனுடன் முகமுகமாய் பேசும் அளவுக்கு தேவனுடனான அவருடைய உறவு வளர்ச்சி கண்டுள்ளது.

இன்று தேவனுடைய பணியைச் செய்யும் அநேகர் தேவனுடனான உறவை விட்டு விட்டு “ஊழியம் ஊழியம்” என்று ஓடி, கடைசியில் வீழ்ச்சியடைவதை நாம் காணலாம். நாம் என்னதான் பணியைச் செய்தாலும், தேவனுடனான உறவைத் தக்கவைத்துக்கொள்வது முக்கியம். சிலர் லெந்து நாட்கள் நாற்பதிலும் தங்களை ஒறுத்து தேவனோடுள்ள உறவில் வளர்ந்துவிட்டு, உயிர்த்த ஞாயிறு முடிந்ததும் மறுபடியும் உலகக் காரியங்களுக்குள் தங்களை ஈடுபடுத்திக்கொள்பவர்களாக இருப்பதுண்டு. இது எவ்விதத்திலும் பிரயோஜ னமற்றது. “எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது” (1யோவா.1:3) இந்த ஐக்கியம் தொடர்ந்து வளருவதாக.

ஜெபம்: கர்த்தாவே, நாங்கள் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி உம்மோடுள்ள உறவிலே வளருகிறவர்களாக காணப்பட கிருபை செய்யும். ஆமென்.