ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 11 சனி
ஆப்கானிஸ்தான் நாட்டிற்காக ஜெபிப்போம். போரின் விளைவுகள் காரணமாக பயங்கரவாதம், வறுமை, குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு நிறைந்துள்ளமையால், கர்த்தர் அந்த நாட்டின் மக்களை நினைத்தருளவும், மனித உரிமை மீறல் தடுக்கப்படவும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் மனமாறுதலுக்காகவும் ஜெபிப்போம்.
காணாதிருந்தும்…
தியானம்: 2026 ஏப்ரல் 11 சனி | வேத வாசிப்பு: யோவான் 20:19; 24-29

அதற்கு இயேசு: ….. காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார் (யோவான் 20:29).
“நான் உம்மையே, உம்மை மட்டிலுமே காணுமாறு என் கண்களை மங்கிப் போகச் செய்தீர்” என்று பிரபல ஆங்கில கவிஞரான மில்டன் தனது கவிதை ஒன்றிலே எழுதி வைத்துள்ளார். எபிரெய ஆசிரியர் “விசுவாசமானது காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” என்கிறார். தேவனுடைய குணாதிசயத்தை, அதாவது தாம் யார் என்று அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறாரோ அதை நம்புவதே விசுவாசத்தின் ஆரம்பப் புள்ளி. அவர் என்ன சொன்னாரோ, சொன்னபடியே செய்வார் என்று அவரது வாக்குறுதிகளை நம்புவதே விசுவாசத்தின் தொடர் புள்ளி. அவர் தந்த வாக்குறுதிகளின் தோற்றங்களை நாம் கண்களால் காணாவிட்டாலும், அவர் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நாம் நம்பி முன்செல்லும்போது நாம் விசுவாசத்தை செயல்முறைப்படுத்துகிறோம்.
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையதினம் சாயங்காலத்திலே சீஷர்கள் பயத்துடன் பூட்டப்பட்ட அறைக்குள் இருந்தனர். அங்கே இயேசு வந்து சமாதானம் கூறினார். அப்போது தோமா அங்கே இராதபடியால், சீஷர்கள் சொன்னதை அவனால் நம்பமுடியவில்லை. எட்டு நாட்களுக்குப் பின்னர் யாவரும் இருந்த நேரத்தில் பூட்டிய அறைக்குள் மீண்டும் வந்து சமாதானம் கூறிய ஆண்டவர், தோமா விரும்பியபடியே, தமது காயங்களைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார். தொடர்ந்து, “அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு” என்றார். மற்ற சீஷர்கள் இயேசுவைக் கண்டார்கள், பேசியதைக் கேட்டார்கள். அதனால் நம்புவது கடினமாக இருக்கவில்லை. அந்த சமயம் தோமா இல்லாததால் அவன் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினான். ஆனால், அவன் முரண்டுபிடிக்கவில்லை. இயேசு அவனை நேசித்தார்; இல்லையானால் எட்டு நாட்களின் பின்னர் தோமா இருந்த சமயம் பார்த்து இயேசு, பூட்டப்பட்டிருந்த அறைக்குள் மீண்டும் வந்து அவர்களுக்கு சமாதானம் கூறியிருப்பாரா? உண்மையில் இயேசு தோமாவைப் பெலப்படுத்தியதையே இங்கே காண்கிறோம்.
தமது காயங்களைத் தொட்டுப் பார்க்க இயேசு சொன்னதும், “என் ஆண்டவரே! என் தேவனே!” என்றான். இதே தோமாதான் பின்னர் சுவிசேஷத்தை இலங்கை இந்தியாவிற்கு கொண்டுவந்தார். நமக்கு சில ஆதாரங்கள் இல்லாமல் எதையும் நம்புவது கடினம். ஆனால், இயேசு ஏற்கனவே சகலவற்றையும் கூறிவிட்டார். சந்தேகங்கள் வருமானால் கடந்த காலங்களில் கர்த்தர் சொன்னதை, செய்ததை நினைத்துபார்த்தால் நமது சந்தேகங்கள் பறந்துவிடும். இன்று நம்மில் எவரும் இயேசுவைக் கண்டதுமில்லை, அவரைத் தொட்டதுமில்லை, அவர் குரல் கேட்டதுமில்லை. ஆனால், நாம் எப்படி அவரை விசுவாசிக்கிறோம்; அதுதான் தேவகிருபை.
ஜெபம்: தகப்பனே, இன்று நாங்கள் தியானித்ததுபோல நீர் எங்களுக்கு அளித்த கிருபைகளை சிந்திக்கும்போதே சந்தேகங்கள் நீங்குகிறது. உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.