ஜெபக்குறிப்பு: ஜனவரி 1 வெள்ளி
“..பூர்வகாலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்” (புலம்பல்.5:21) புதிய காரியத்தைச் செய்கிற கர்த்தர்தாமே இந்த வருடத்தின் ஒவ்வொரு நாட்களிலும் நம் பட்சமாக நின்று கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் நம்மை நடத்தும்படியாக அர்ப்பணித்து ஜெபம் செய்வோம்.
நமக்கு ஒரு நம்பிக்கையுண்டு!
தியானம்: ஜனவரி 1 வெள்ளி; வேத வாசிப்பு: ரோமர் : 16:17-20
“சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்… ஆமென்” (ரோமர் 16:20).
‘அனுதினமும் கிறிஸ்துவுடன்’ வாசகர்கள் மற்றும் பங்காளர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் அன்பின் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்! அழிவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மக்களை ஆண்டவரின் அன்பிற்குள் வழிநடத்த இவ்வாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைவோமாக!
இந்தத் தியானத்தை எழுதிக்கொண்டிருக்கையில், நான்கு வயதுள்ள அழகிய ஆண் குழந்தையை, இனம் தெரியாதோர் வீடு புகுந்து பெற்றோரை அடித்துவிட்டுத் தூக்கிச்சென்ற சம்பவமொன்று அறியக் கிடைத்தது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னையில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம் ஆகிய இயற்கை சீற்றங்களினால் மக்கள் அடைந்த சொல்லொண்ண துயரத்தையும் அவலங்களையும் நாம் அறிந்ததே. புதிய ஆண்டின் முதல் நாளில் துக்கமான செய்தியையா வாசிக்க வேண்டுமென நீங்கள் எண்ணலாம். ஆனால், இதுவே இன்றைய யதார்த்த நிலை!
இப்படிப்பட்ட காலப்பகுதியில் நம்பிக்கையின் செய்தியை அறிவிக்கவும், மக்களை ஆண்டவரிடம் வழிநடத்தவும், நாம் ஒருமனப்பட்டுச் செயற்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். எனவே பிரிவினைகளையும் இடறல்களையும் உருவாக்குகிறவர்களுக்கு இடமளிக்கக்கூடாது. மட்டுமல்ல, சமாதானம் எனக் கூறி ஏமாற்றுகிறவர்களுக்கும் இது எச்சரிக்கை! உலகம் கூறும் சமாதானம் மனிதனுக்கு மெய்சமாதானத்தைத் தராது. சமாதானம் தேவனிடத்திலிருந்து வர வேண்டும். தேவசமாதானம் என்பது உலகிற்குக் கொடுக்கப்படுவது இல்லை. உலகை வெல்லுவதற்குப் தரப்படுகின்றது. ஆண்டவர் சாத்தானின் வல்லமையைத் தோற்கடித்து ஜெயம் பெறுவதாலே, சமாதானம் நிலை நிறுத்தப்படுகின்றது. அந்த நம்பிக்கையைத் தேவன் நமக்குத் தந்திருக்கிறார். நமது தேவன் கிரியையின் தேவனாயிருக்க, நாம் கிரியை செய்யாமல் இருக்கலாமா?
ஒரு இராட்சதக் கழுகு தன் கால்களில் பாம்பு ஒன்றை இறுகப் பிடித்தவாறு தன் செட்டைகளை விரித்து மேலெழுந்து பறப்பது போன்ற ஒரு புத்தக அடையாள அட்டையில் ரோம.16:20ம் வசனம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆம்! சூழ்நிலைகள் பாதகமாக, பயமுறுத்துவதாக இருந்தாலும், அவற்றைச் சிறைப் பிடித்துக் கொண்டு மேலெழும்பிப் பறப்போமாக. சமாதானத்தின் தேவன் நமக்கு வெற்றி தருவார். இந்த நம்பிக்கையின் செய்தியை இந்தப் புதிய ஆண்டில் நாம் ஒருமனப்பட்டு உலகிற்குள் எடுத்துச்செல்லுவோமாக.
“….நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனே கூட இருப்பதாக. ஆமென்” (ரோமர் 16: 20).
சிந்தனைக்கு: குடும்பம், சபை, ஸ்தாபன ஊழியம் எந்த இடமானாலும், நமது சமாதானத்தைக் குழப்பிய காரியங்கள் எவை? அவற்றை எதிர்த்து, ஒன்றிணைந்து நம்பிக்கையின் செய்தியை மக்களுக்கு எடுத்துச்செல்ல நாம் ஆயத்தமா?
தேவனுக்கு அர்ப்பணித்தல்!
அதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2016)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி:ஆதியாகமம் 32:22-32
“அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார்.
அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய
உம்மைப் போகவிடேன் என்றான்” (ஆதி. 32:26).
யாக்கோபு மிகவும் இக்கட்டான சூழலில் தன்னுடைய இரண்டு மாபெரும் எதிரிகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டார். அவருக்குப் பின்னாக பேராசைக்காரரான அவரது மாமனார் லாபான் துரத்திவர, முன்னே பழிவாங்கக் காத்திருக்கும் அவருடைய சகோதரன் ஏசா, இவ்விருவரிடமும் யாக்கோபுக்கு பேச்சு வார்த்தை கிடையாது. லாபானின் வீட்டைவிட்டு திருடனைப்போல வாக்குப்பண்ணின தேசத்துக்குக் கிளம்பி வந்தார். மிஸ்பாவில் இருவரும் பண்ணின உடன்படிக்கையை (ஆதி.31:49) லாபான் மதிப்பாரா என்ற நிச்சயம் அவருக்கு இல்லை. லாபானுக்கு பயப்படாவிட்டாலும் ஏசாவுக்கு அதிகமாக பயந்தார்.
தமது வாழ்வின் ஆரம்பகாலத்தில் தனது இரட்டை சகோதரனிடமிருந்து யாக்கோபு தந்திரமாக அவனுடைய சேஷ்டபுத்திரபாகத்தையும் தங்கள் தகப்பனுடைய ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான். இருபது ஆண்டுகள் கழித்துதான் தவறு இழைத்த தனது சகோதரனைச் சந்திக்க வருகிறான். இடைப்பட்ட இக்காலத்தில் ஏதோம் தேசத்திலே சேயீர் மலையில் ஏசா ஒரு பலசாலியாக மாறியிருந்தான். தனது சகோதரன் திரும்பிவிட்டான் என்பதைக் கேட்டால் அவர் எவ்வாறு செயல்படுவார்? யாக்கோபு தனது வருகையை தன் சகோதரனுக்கு ஆட்களிடம் சொல்லியனுப்பினார். அவர்கள் திரும்பி வந்து ஏசா நானூறு பேருடன் எதிர்கொண்டு வருகிறார் என்று சொன்னார்கள். அதனைக் கேட்ட யாக்கோபு மிகவும் பயந்தார்.
அவருடைய அச்சம் அதிகரித்ததால் தேவனைத் தேட ஆரம்பித்தார். தேவனுடைய தயவுக்கு தான் பாத்திரனல்லன் என்றும் தனது சகோதரன் கைக்கு தன்னைத் தப்புவிக்கும்படியாகவும் விண்ணப்பம் பண்ணினார். ஜெபத்திற்குப் பின்னர் தனது சகோதரன் ஏசாவுக்கு தனது மந்தையிலிருந்து வெகுமானங்களை அனுப்பினார். இருட்டோடே தனது மனைவிகளையும் அவர்களது பதினோரு மகன்களையும் பாதுகாப்பாக ஆற்றைக் கடந்து அனுப்பி விட்டார்.
பின்னர் யாப்போக்கின் ஆற்றங்கரையில் யாக்கோபு தனியாக விடப்பட்டார். ஒருவேளை அது நடு இரவின் பின்பகுதியாக இருந்திருக்கலாம். அதிகமான இருட்டு. யாக்கோபு ஜெபிக்க ஆயத்தமான பொழுது அவ்விருட்டில் ஒருமனிதர் திடீரென்று அவரைத் தாக்கினார். தனது சகோதரனாகிய ஏசாவே தன்னைப் பழிவாங்குவதற்காகத் தாக்குகிறார் என்று யாக்கோபு முதலில் எண்ணியிருக்க வேண்டும். எனவே இருவரும் மல்யுத்தம் பண்ணினர். அதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்று காணப்பட்டது. இருவரில் யார் வெற்றி பெறுவது என்று கண்டறிய முடியாத நிலை. இது அந்த இரவு முழுவதும் தொடர்ந்தது. பொழுது விடியும் வேளையில் அவனை மேற் கொள்ளாததைக் கண்டு, அம்மனிதர் யாக்கோபுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச் சந்து சுளுக்கிற்று (ஆதி. 32:25). தன்னை எதிர்ப்பவர் ஒரு சாதாரண மனிதன் அல்ல; அவர் ஒரு தூதன் என்று யாக்கோபு கண்டு கொண்டார். தனது பலம் அல்ல, தேவனுடைய கிருபையே இந்த யுத்தத்தை இவ்வாறு நீட்டித்தது எனவும் அவர் அறிந்துகொண்டார்.
பல ஆண்டுகளாக யாக்கோபுடன் ஆண்டவர் இடைப்பட்டுக்கொண்டிருந்தார். ஆனால் யாக்கோபோ திட்டமிட்டு தனது தந்திரங்களையும் ஏமாற்றுதலையும் உபயோகித்து தேவனுடைய ஆசீர்வாதத்தைத் தேடினார். அவர் இருமனதுள்ளவராய் இருந்தார். தேவனை நம்பி தன் வாழ்வை அவரிடம் ஒப்படைக்க விரும்பினார். ஆனாலும் தனது மனித உபாயங்களிலேயே சார்ந்திருந்தார். அர்ப்பணிக்கப்படாத நோக்கங்களால் அதிருப்தியான வாழ்வே கிடைக்கும் என்பதை அவர் அறிந்து கொள்ளாத பரிதாபத்தில் இருந்தார்.
ஆனால் பொழுது விடியும் வேளையில் மல்யுத்தப் போட்டி முடிவுக்கு வந்தது. அவர் ஆண்டவரைப் போகவிடுமுன் பெத்தேலில் தனக்குக் கிடைத்த ஆசீர்வாதத்தை மீண்டும் நிலைநிறுத்த வாஞ்சித்தார். ஏசா தன்னை சந்திக்கும் முன்பாக தானே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட வாரிசு என்பதை அறிந்துகொள்வது அவருக்கு முக்கியமாகத் தோன்றியது. இந்த வேளையில்தானே அப் பரலோக மல்யுத்த வீரர், “உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடு மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்”. மல்யுத்த வீரருடன் யாக்கோபு நடத்திய போராட்டத்தில் சரீரப்பிரகாரமாக யாக்கோபு தோற்றாலும் ஆத்துமாவில் வெற்றியைப் பெற்றார். தனது சுயசித்தத்தை விட்டொழித்து, தனது சரீர பலத்தால் வெற்றியைப்பெற முடியாததை அறிந்துகொண்டார். வெறுமையான பாத்திரத்தில் மாத்திரமே தேவன் தமது ஆசீர்வாதத்தை ஊற்றுவார் என்பது உண்மையன்றோ?
பொழுது விடிந்ததும் யாக்கோபு தேவனை முகமுகமாய்த் தரிசித்த பெனியேலைக் கடந்து சென்றார். அவருடைய தொடைச்சந்து சுளுக்கியதால் அவர் நொண்டி நொண்டி நடந்தார். கர்த்தருடைய தூதனுடன் போரிட்டதற்கு நினைவாக அவர் வாழ்நாள் முழுவதும் அச்சரீர குறைவுடன் இருக்க வேண்டியதாயிற்று.
தேவனுடன் ஜெபத்தில் போராடும் பொழுது நம்முடைய வாழ்விலே சில அடையாளங்களை நாமும் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க நேரிடலாம். ஆனால் அது சிறந்ததே. தேவனைப் பிரியப்படுத்த நம்முடைய பலத்தில் நூறு ஆண்டுகள் நாம் போராடினாலும் அவருக்கு அர்ப்பணிக்கும் ஒருநாள் சிறந்ததாகும்.
“ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராய் இருக்கிறார்” (பிலி.. 2:13)
அதிகாலைப் பாடல்:
அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவ ஆறாய் பெருகும்
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை
அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (ஜனவரி-பிப்ரவரி 2016)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்
தமிழ் வேதாகமத்தின் வரலாறு
புனிதவேதாகமத்தின் புதுமை வரலாற்றில், அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு தனித்துவமான தொன்றாகும். இன்று நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் நீண்டகால சரித்திரத்தைக் கொண்டுள்ளது. இது தனி ஒரு மனிதனது முயற்சியினால் உருவான மொழிபெயர்ப்பல்ல. தமிழில் வேதாகமத்தை மொழி பெயர்க்கும் பணியில் பலர் ஈடுபட்டிருந்தனர். ஆரம்பத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் வேதாகமம் பிற்காலத்தில் திருத்தி மொழிபெயர்க்கப்பட்டது. 250 வருடகாலத்தில் புதிய ஏற்பாடு 8 தடவைகளும் முழுவேதாகமமும் 6 தடவைகளும் திருத்தப்பட்டுள்ளன. தமிழ் வேதாகமம் ஆரம்பத்தில் ‘சத்தியவேதம்’ எனும் பெயரிலேயே வெளிவந்தது. பிற்காலத்திலேயே ‘பரிசுத்த வேதாகமம்’ எனும் பெயரைப் பெற்றது. இதன் தனித்துவமான வரலாற்றை இப்பகுதியில் பார்ப்போம்.
இந்திய இலக்கிய வரலாற்றில் தமிழ்மொழி சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம் இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சிடப்பட்ட புத்தகம், தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்டுள்ளது. போர்த்துக்கேயர் இந்தியாவில் கிறிஸ்தவ மார்க்கத்தைப் பரப்பும் காலத்தில் தமிழ் மக்களது உபயோகத்திற்காக 1554 ஆம் ஆண்டு, ஐரோப்பாவிலுள்ள ‘லிஸ்பன்’ எனும் நகரில் ஒரு கிறிஸ்தவ வினா விடை புத்தகம் தமிழில் வெளியிடப்பட்டது. இதன் பின்னர் 1577 ஆம் ஆண்டு இயேசு சங்கம் எனும் மிஷனரி இயக்கத்தைச் சேர்ந்த கொன்சல்வெஸ் என்பவர் முதல் தடவையாக இந்தியாவிலுள்ள கொல்லம் என்ற இடத்தில் தமிழ் அச்செழுத்துக்களை வார்த்தெடுத்தார். இச்சங்கத்தைச் சேர்ந்த ஹென்றிக்ஸ் என்பவர் 1578 இல், தம்பிரான் வணக்கம் எனும் பெயரில் ஒரு கிறிஸ்தவ புத்தகத்தை கொல்லம் எனுமிடத்தில் அச்சிட்டு வெளியிட்டார். 16 பக்கங்களைக் கொண்டிருந்த இப்புத்தகத்தில் கர்த்தருடைய ஜெபமும், பத்துக் கற்பனைகளும், அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணமும், சில ஜெபங்களும் தமிழில் அச்சிடப்பட்டிருந்தன. இதுவே இந்தியாவில் அச்சிடப்பட்ட முதலாவது புத்தகமாகும். இது மறுபடியுமாக 1579 இல் 112 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளிவந்தது. இவற்றில், தமிழ் எழுத்துக்கள் அக்காலத்து முறைப்படி இருப்பதை கவனிக்கலாம். அக்காலத்தில் மெய்யெழுத்துக்களின் மேல் புள்ளியிடும் வழக்கம் இருக்கவில்லை. உதாரணமாக, ‘க்’ எனும் எழுத்து ‘க’ என்றே எழுதப்பட்டது. அத்தோடு, ர கரத்துக்கு கீழே கால் இருப்பதில்லை. அதாவது ‘ர’ அக்காலத்தில் ‘ா’ என்றே எழுதப்படும். அதேபோல, இரட்டைக்கொம்பு உபயோகிக்கப்படவில்லை. அதாவது, நேசம் என்பது ‘நெசம்’ என்றே எழுதப்பட்டது. மேலும், ‘ற’ எனும் எழுத்து ‘அ’ எனும் எழுத்து கீழ் வயிறு இல்லாமல் எழுதப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவிலேயே, ‘கொன்ஸ்டன்டைன் பெஸ்கி’ எனும் போர்த்துக்கேய மிஷனரி மெய்யெழுத்தின் மேல் புள்ளியிடும் முறையையும், ரகரத்துக்கு கீழே கால் அமைக்கும் முறையையும், ஏகார ஓகார உயிர்மெய் எழுத்துக்களுக்கு இரட்டைக்கொம்பு உபயோகிக்கும் முறையையும், அறிமுகப்படுத்தினார். அக்காலத்தில் இந்தியாவில் இருந்த போர்த்துக்கேய மிஷனரிகள் பல தமிழ்ப் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ள போதிலும், அவர்கள் ஒருசில வேதப்பகுதிகளை மட்டுமே தமிழில் மொழிபெயர்த்தனர். முழுவேதாகமத்தையும் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகளில் அவர்கள் அப்போது ஈடுபடவில்லை.
வேதாகமத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு முதன்முதலில் இலங்கையில்தான் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், 16 ஆம் நூற்றாண்டில் இலங்கை வந்த ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் 1566 இல், இலங்கையின் வட மேற்குப்பகுதியிலுள்ள மன்னார் தீவில் அச்சகமொன்றை உருவாக்கி சில தமிழ்ப் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டபோதிலும், அவர்களும் வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகளில் ஈடுபடவில்லை. 17ஆம் நூற்றாண்டில் இலங்கை வந்த ஒல்லாந்து நாட்டு சீர் திருத்த சபையைச் சேர்ந்த மிஷனரிகளே முதல் முதலில் தமிழில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் முயற்சிகளை இலங்கையில் ஆரம்பித்தவர்களாவர். இவர்களுள் யாழ்ப்பாணத்திலிருந்த ஒல்லாந்து சீர்திருத்த சபையில் பணியாற்றிய பிலிப்புஸ் பல்தேயுஸ் என்பவர், 1660 அளவில் மத்தேயுவின் சுவிசேஷத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். இம்மொழிபெயர்ப்பு அச்சிடப்பட்ட புத்தகமாகாதபோதிலும், பனை ஓலை ஏடுகளில் எழுதப்பட்ட இதன் பிரதிகள் யாழ்ப்பாண கிறிஸ்தவர்களால் உபயோகிக்கப்பட்டுள்ளன. பிலிப்புஸ் பல்தேயுஸ் கர்த்தருடைய ஜெபம், பத்துக் கற்பனைகள், விசுவாசப்பிரமாணம் என்பவற்றையும் தமிழில் மொழி பெயர்த்திருந்தார். இவர் தன் சொந்த நாட்டுக்குச் சென்ற பின் அவற்றை ஒரு சிறு துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார். பின்னர் கீழ்த்திசை நாடுகளில் தனக்கேற்பட்ட அனுபவங்களைப் பற்றி அவர் எழுதிய நூலிலும் அவற்றையும் சேர்த்துள்ளார்.
இலங்கையை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் (17ஆம் நூற்றாண்டில்) வேதாகமத்தைத் தமிழில் மொழி பெயர்க்க அவர்கள் எடுத்த முயற்சிகள் முழுமையாக வெற்றி பெறவில்லை. 1665இல் பிலிப்புஸ் பல்தேயுஸ் இலங்கையை விட்டுச் செல்ல வேண்டியிருந்தமையினால் அவரால் ஆரம்பிக்கப்பட்ட புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு முயற்சி மத்தேயு சுவிசேஷத்தோடு நின்றுவிட்டது. 1692 இல், ஏட்ரியான்ஸ் டீ மே எனும் ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த மிஷனரி, யாழ்ப்பாணத்தில் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது மொழிபெயர்ப்பும் அச்சிடப்பட்ட புத்தகமாகவில்லை. அதன் பின்னர், 1694இல் ஒல்லாந்து அரசாங்கம் பழைய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்க எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்தன. 1736இல், இம்ஹொஃப் என்பவர் ஒல்லாந்தின் தேசாதிபதியாக இலங்கையில் பணியாற்றியபோது, வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும்படி கிராமர் எனும் மிஷனரிக்குக் கட்டளையிட்டார். எனினும், புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கிய இவர் சடுதியாக மரணமடைந்தமையினால், இம் மொழிபெயர்ப்புப் பணியும் தடைப்பட்டது. 1741இல் கிராமர் மொழி பெயர்த்த மத்தேயு சுவிசேஷம் மட்டும் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் பின்னர் 1742இல் நான்கு சுவிசேஷப் புத்தகங்களும் தமிழில் அச்சிடப்பட்டன. இதன் பிரதி ஒன்று பிரித்தானிய சர்வதேச வேதாகமச் சங்கத்தின் லண்டன் அலுவலகத்தில் உள்ளது. இதன் பின்னர் 1746 இல், பிலிப் டீ மெல்லோ என்பவரது முயற்சியினால் நான்கு சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் 1748இல் கொழும்பில் பிரசுரிக்கப்பட்டது. இதன் பிரதி ஒன்று கொழும்பு நூதனசாலை நூல் நிலையத்தில் இருக்கின்றது. பிலிப் டீ மெல்லோ 1750 அளவில் புதிய ஏற்பாடு முழுவதையும் தமிழில் மொழி பெயர்த்திருந்தார். 1753 இல், சங்கீதப் புத்தகங்கள் தமிழில் தனியாக ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது. 1759 இல் டீ மெல்லோவின் புதிய ஏற்பாடு அச்சிடப்பட்டது.
18ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பிரித்தானியர் ஒல்லாந்தரிடமிருந்து இலங்கையைக் கைப்பற்றினர். அதேசமயம், இலங்கைக்கு வந்த பிரித்தானிய சபைகளின் மிஷனரிகள், ஒல்லாந்தருடைய சீர்திருத்த சபையோடு தம்மை சம்பந்தப் படுத்திக்கொள்ள விரும்பாதமையினால், அவர்கள் ஒல்லாந்தர் வெளியிட்ட புதிய ஏற்பாட்டை உபயோகிக்கவில்லை. இதனால், ஒல்லாந்தருடைய தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகள் அவர்களோடு இலங்கையிலிருந்து இல்லாமல் போய்விட்டன. அவற்றின் ஒரு சில பிரதிகள் மட்டும் இன்று சில நூலகங்களிலும் நூதன சாலைகளிலும் உள்ளன. வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்க இலங்கையில் எடுக்கப்பட்ட ஆரம்ப முயற்சிகள் அனைத்தும் முழுமையாக வெற்றியளிக்காத போதிலும், இந்தியாவில் பல ஆக்கபூர்வமான மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. இன்று நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் 1871 ஆம் ஆண்டு, சென்னை வேதாகமச் சங்கம் வெளியிட்ட ஒன்றிணைப்புப் பதிப்பு எனும் மொழிபெயர்ப்பேயாகும். இது தமிழில் ஐக்கிய பதிப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. எனினும், இதற்கும் முன்பே சில மொழி பெயர்ப்புகள் இந்தியாவில் வெளிவந்துள்ளன. தமிழ்வேதாகமத்தின் தனித்துவமான வரலாற்றில் அம்மொழி பெயர்ப்புகள் முக்கியமானவைகளாகும்.
(தொடரும்)
வாசகர்கள் பேசுகிறார்கள்
(ஜனவரி-பிப்ரவரி 2016)
1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அனதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் மாதப் பிறப்பிற்கு முன்னதாகவே கையில் கிடைக்க கர்த்தர் கிருபை செய்தார். ஒவ்வொரு நாளும் என் உலகப்பிரகாரமான கடமைகளைச் செய்யவும், ஆண்டவரோடு ஐக்கியம் வைத்துக்கொள்ளவும் அனுதினமும் கிறிஸ்துவுடன் நாளின் நற்சிந்தனை உற்காமூட்டும் டானிக் போல் உள்ளது. அநேக நாட்கள் என் மனதில் தோன்றும் எத்தனையோ ஐயங்களுக்கு ஒரு விடையாக அமைந்து திருப்தியடையச் செய்யும். சத்தியவசன ஊழியங்கள் தடையின்றி நடக்க பாரப்பட்டு ஜெபிக்கிறேன்.
Mrs.Rajakumari, Madurai.
2. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. ஒவ்வொருநாள் தியானமும், கருத்துகளும் மிக அருமையாக உள்ளது. நாங்கள் உபயோகித்தபின்பு முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் வாசித்து பயன்பெற்று வருகின்றனர்.
Mrs.Sugirtha Edwin, Trichy.
3. கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள சகோதரருக்கு, இந்தநாள் வரையிலும் தாங்கள் அனுப்பித் தருகிற சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானம் மற்றும் சிறப்பு வெளியீடுகள் அனைத்தையும் படித்து பயன் பெறுகிறோம். மாத்திரமல்ல, SMS வேத வசனங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Mrs.Nalini Prabakar, Vellore.
4. கிறிஸ்துவுக்குள் அன்பான ஐயா, நான் தங்களது சத்தியவசன நிகழ்ச்சியினை தொடர்ந்து பார்த்து வருகிறோம். மிகவும் பிரயோஜனமாக உள்ளது. சகோ.பிரகாஷ் ஏசுவடியான், Dr.தியோடர் வில்லியம்ஸ், Dr.புஷ்பராஜ் ஆகியோர் அளிக்கும் செய்தி அருமையாக உள்ளது. வேதத்தின்படி வேதத்தை தெரிந்துகொள்ள உதவுகிறது.
Mr.Dhana Kumar, Pavoorchathram.
5. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தில் மாதந்தோறும் சிறப்பான தியானங்கள் உள்ளன. ஆசீர்வாதமாக உள்ளன. வாசிக்க வாசிக்க தேனிலும் இனிமையாக உள்ளன. ஊழியர்களுக்கு என் அன்பான தோத்திரம்.தவறாமல் கிடைத்து வருகிறது.
Mr.P.John Solomon, Bangalore.
6. Greetings in Jesus Precious Name. We Praise God for your Ministry and for the Word of God which goes forth powerfully. May everyone we blessed.
Mr.Cecil Coilpillai, Chennai.
7. அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் சஞ்சிகை வாசிப்பது தினந்தோறும் வேதத்தை வாசிப்பதற்கும் ஜெபிப்பதற்கும் ஆசீர்வாதமாக உள்ளது. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் கர்த்தருக்கு பிரியமானவர்களாய் வாழ எங்களுக்காக ஜெபிக்கவும்.
Mrs.Indra, Tirunelveli.
8. தங்களது பத்திரிக்கைகள் கிடைத்தது. செய்திகள் மனதிற்கு ஆறுதலாகவும், ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுபவையாகவும் உள்ளது. தங்களது ஊழியம் நல்ல முறையில் நடைபெறவும் ஜெபிக்கிறோம்.
Mr.Sam Gunalan, Erode.