ஜெபக்குறிப்பு: ஜனவரி 1 ஞாயிறு

“நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்” (2நாளா.20:17) என்ற இவ்வாக்குப்படியே இப்புதிய ஆண்டிலும் கர்த்தர் நமது குடும்பத்திலும் நம்முடைய தேசத்திலும் இரட்சிப்பை கட்டளையிட்டு தேவனுடைய மகிமை பெரிதாய் விளங்கச் செய்ய தேவசமுகத்தில் நம்மை அர்ப்பணம் செய்வோம்.

வாக்குமாறாத தேவன்!

தியானம்: ஜனவரி 1 ஞாயிறு; வேத வாசிப்பு: சங்கீதம் 91:1-16

“அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்: என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்” (சங்.91:14).

மலர்ந்திருக்கும் இப்புதிய ஆண்டின் இந்த முதல் நாளில், இத்தியான வேளையில் வாஞ்சையோடு இணைந்திருக்கும் அன்பான வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பின் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

வருடம் புதிது; அதற்காக, கேள்விகள் புதிதல்ல. இப்புதிய வருடம் எப்படிப்பட்டதாய் அமையுமோ? கடந்த வருடத்தின் வேதனை, பாடுகள், நோய் போன்றவற்றின் நிழல்கள் இவ்வருடத்திலும் என்னைத் தொடருமோ? சத்துருவான சாத்தானின் போராட்டங்களும், காரிருளான சூழ்நிலைகளும் அகன்று, வெளிச்சமான ஒரு விடிவைக் காண்பேனோ? இப்படியான ஏக்கங்களோடும், பயம் நிறைந்த மனநிலையோடும் நம்மில் பலர் இந்த ஆண்டையும் சந்தித்திருக்கலாம். ஆனால், வாக்களித்த தேவன் வாக்குமாறாதவர்.

91ஆம் சங்கீதம் யாரால் எழுதப்பட்டதென்று அறியப்படாவிட்டாலும், இந்த சங்கீதத்தை எழுதியவருடைய வாழ்க்கையில் எதிராளிகளின் எதிர்ப்பு மாபெரும் போராட்டமாகவும், தொடரும் நிழலைப்போன்றும் இருந்திருக்கிறது என்பதை நம்மால் உணரக்கூடியதாக இருக்கிறது. ஆனால், இரவு பகலாக, எல்லாப் பக்கங்களிலும் தான் நெருக்கப்பட்டதை மாத்திரம் சங்கீதக்காரன் எடுத்துக் காட்டவில்லை. அதிலும் மேலாக, தேவனிடத்தில் அதிக வாஞ்சையாயிருப்பவன், தேவனை அறிந்திருப்பவன், தேவனுடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாக வருகிறவன் எவனுக்கும் தேவன் அருளுகின்ற விடுதலை, பாதுகாப்பு, இரட்சிப்பு, நீண்ட ஆயுசு நாட்கள் என்பவற்றைக் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.

இவ்வுலகம் உள்ளவரை போராட்டங்கள், பாடுகள் நம்மைத் தொடரத்தான் செய்யும். அதற்காக நாம் சோர்ந்துபோகவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், விடுதலை, சமாதானம், பாதுகாப்பு வழிநடத்துதல் யாவையும் அருள தேவன் ஆயத்தமாயிருக்கிறார். தேவனை நோக்கிக் கூப்பிடும்போது அவர் மறு உத்தரவு அருளுகின்றார். ஆனால், இந்த சங்கீதக்காரனைப்போல பாடுகளிலும் நாம் இன்னும் தேவனிடத்தில் வாஞ்சையாயிருக்கிறோமா; அவரை அறிகிற அறிவில் வளருகிறோமா என்பதே காரியம். வாக்களித்தவர் வாக்குமாறாதவர். அவரையே பற்றிக்கொண்டு இப்புதிய வருடத்தை ஆரம்பிப்போமாக.

“என்னை நோக்கிக் கூப்பிடு. அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரேமியா 33:3).

ஜெபம்: ஜெபத்தைக் கேட்கிறவரே, கடந்த நாட்கள் கடந்ததாக இருக்கட்டும். எந்த சூழ்நிலையிலும் உம்மையே நோக்கிக் கூப்பிட்டு, உம்மையே சார்ந்து ஜீவிக்க எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.

ஜெபமும் சமாதானமும்!

அதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2017)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: ஏசாயா 26:1-21
என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது ; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும்  உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும் போது பூச்சக்கரத்துக் குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள் (ஏசா.26:9).

தேவனுடன் உறவாடும் மக்களின் இருதயங்களிலே நிலவும் நிலையான சமாதானமே வேதாகமத்தின் முக்கிய கருவாகக் காணப்படுகிறது. ஏசாயா தீர்க்கத்தரிசி “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா. 26:3) என்று கூறியுள்ளார். அதாவது தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கிறவனை அவர் இரட்டிப்பான சமாதானத்துடன் காத்துக்கொள்வார் என்பதே இதன் பொருளாகும்.

புதிய ஏற்பாட்டிலும் இயேசு தம்முடைய சமாதானத்தை தம்முடைய சீஷர்களுக்கு தருவதாக வாக்களித்தார். “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான்14:27) என்றுரைத்தார். மேலும், “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான்.16:33) என்றார்.

அப்போஸ்தலர் பவுலும் தேவன் மீது தமது நம்பிக்கையை வைப்பதால் கிடைக்கும் சமாதானத்தை அறிந்திருந்தார். எனவே கொலோசெய விசுவாசிகளுக்கு, “தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” (கொலோ.3:15) என்று ஆலோசனையை அளித்தார். நமது சிந்தை தேவன்மீது நிலைத்திருக்கும் பொழுது அவரது சமாதானமானது அனைத்தையும் ஆட்கொள்ளும். ஆனால் உலகக் கவலைகள் நமது சிந்தையை நிறைத்திருக்கும் பொழுது தேவனுடைய சமாதானம் நமக்கு எட்டாத தூரத்தில் இருக்கும்.

இக்காரணத்துக்காகவேதான் பிலிப்பிய விசுவாசிகளுக்கு அவர், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலிப்.4:6,7) என்ற ஆலோசனையை அளித்தார். நம்முடைய இருதயத்தையும் சிந்தையையும் தேவனுடைய சமாதானம் ஆட்கொள்ளும்பொழுது வாழ்வின் கவலைகள் நம்மை பாதிக்காது. நம்மை அலைக்கழிக்கும் எண்ணங்களால் நிரப்பப்படுவதோ அல்லது அவற்றிலிருந்து விடுதலை தரும் தேவ வல்லமையால் நிரப்பப்படுவதோ நாம் எடுக்கும் தீர்மானத்திலேயே உள்ளது.

ஏசாயா தீர்க்கத்தரிசி நள்ளிரவில் தேவனைத் தேடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அவருடைய இருதயத்தை கவலை என்னும் மேகங்கள் சூழ்ந்திருந்தபொழுதும் அந்த நாளின் தோல்விகள் அவரைத் துவளச் செய்திருந்தாலும் அவைகளிலேயே உழன்றுவிடாமல் தேவன் தரும் விடுதலையைத் தேடினார். சந்தேகத்தில் அல்ல, தேவன் மீதுள்ள நம்பிக்கையில் அவர் சார்ந்திருந்தார்.

“என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்” (ஏசாயா 26:9) என்று அவர் தொடருகிறார். இரவின் இருளில் தேவனைத் தேடும் அனுபவம் தீர்க்கதரிசியின் சிந்தையை பயத்திலிருந்து விடுதலையாக்கி, ஒரு புதிய நாளை தேவனுடைய சமாதானத்தினால் சந்திக்கக் காத்திருக்கும் ஆர்வத்தை அளித்தது. எனவேதான் அவர் “கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே” (ஏசாயா 26:12) என்ற தமது விண்ணப்பம் நிறைவேற்றப்படும் என்பதில் உறுதியான நம்பிக்கையை வைத்திருந்தார்.

இக்காலத்திலும் உலகத்தில் சவால்களும் பாடுகளும் அதிகமாக உள்ளன. உலகத்திலும் நமக்குள்ளும் தேவனுடைய சமாதானத்துடன் நாம் வாழவே தேவன் திட்டமிட்டுள்ளார். ஆனால் நம்முடைய கவலைகளை அவர்மீது வைத்து, அவருடைய சமாதானத்தைப் பெற்றுக் கொள்வதாலேயே இது சாத்தியமாகும். நேற்றைய துன்பங்களால் இராமுழுதும் உறக்கம் வராமல் இருந்தீர்களானால் அதிகாலையிலேயே அவற்றை தேவனிடம் ஒப்படையுங்கள். அவர் உங்கள் கவலைகளையெல்லாம் மாற்றி தம்முடைய சமாதானத்தினால் நிரப்புவார். தேவனுடைய சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள ஒரே வழி ஜெபமே!

அதிகாலைப் பாடல்:

சமாதானம்! சமாதானம்! பரம தகப்பனே
உமது தூய அன்பின் பிரவாகத்தின்
அற்புத சமாதானம்  என்னை
நித்தமும் நிரப்பிட ஜெபிக்கிறேன்.

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜனவரி-பிப்ரவரி 2017)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(3) ரேனியஸ் மொழிபெயர்ப்பு

தமிழ்மொழியில் சிறப்பான முறையில் பிரசங்கிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்த ரேனியஸ், பல தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் முதன் முதலில் பூமி சாஸ்திரப் பாடப்புத்தகம் இவராலேயே எழுதப்பட்டது. இவர் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். மேலும், வசனத்தமிழை முதன் முதலாகச் சந்தி பிரித்து எளிமையாக்கியவரும் இவரேயாவார். சுவிசேஷம் அறிவிப்பதிலும், பாடசாலைகளையும் சபைகளையும் ஸ்தாபிக்கும் முயற்சியிலும் இவரது பணி மிகவும் பாராட்டப்பட்டுள்ளது. இவர் திருநெல்வேலியில் 300 சபைகளை ஸ்தாபித்துள்ளார். இவர் பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பின் மொழி நடையைத் திருத்தினார். இவரால் திருத்தப்பட்ட சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் 1827இலும், புதிய ஏற்பாடு முழுவதும் 1833இலும் வெளியிடப்பட்டது. 1840இல் இவரது புதிய ஏற்பாடும் பெப்ரீஷியசின் பழைய ஏற்பாடும் ஒன்றாக வெளியிடப்பட்டது.

பெப்ரீஷியசைப் போலவே ரேனியசும் கடவுளுக்குப் பராபரன் எனும் பதத்தை உபயோகித்துள்ள போதிலும், அவர் சில இடங்களில், ‘தேவன்’ எனும் பதத்தையும் குறிப்பிட்டுள்ளார். பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பிலிருந்த சில இலக்கணப் பிழைகளையும் ரேனியஸ் திருத்தியுள்ளார். குறிப்பாக, அஃறிணைப் பன்மை எழுவாய்க்கு, ஒருமைப் பயனிலையே பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் உபயோகிக்கப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், சாதாரண பேச்சு வழக்கில் இவ்விதம் பன்மை எழுவாய், ஒருமைப் பயனிலையுடன் உபயோகிக்கப்பட்டமையேயாகும். உதாரணமாக, விதைப்பவனுடைய உவமையில் விதைகள் விழுந்தது, பறவைகள் பட்சித்தது, அவை முளைத்தது, என்றே பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பில் எழுதப்பட்டிருந்தது. ரேனியஸ் இவ்வாக்கியத்தை இலக்கண முறைப்படி, விதைகள் விழுந்தன, பறவைகள் பட்சித்தன, அவை முளைத்தன என திருத்தினார். பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பில் இதைப்போன்ற பல திருத்தங்கள் செய்யப்பட்டன.

பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பிலிருந்த சில வார்த்தைகளையும் ரேனியஸ் மாற்றியுள்ளார். உதாரணமாக, இந்த லோகம் என்பதை ‘இவ்வுலகம்’ என்றும், வெளிச்சம் என்பதை ‘ஒளி’ என்றும், வானராச்சியம் என்பதை ‘பரலோக ராச்சியம்’ என்றும், பாஷா என்பதை ‘பஸ்கா’ என்றும், சிநேகம் என்பதை ‘அன்பு’ என்றும் ரேனியஸ் மாற்றினார்.

மேலும் 1 கொரிந்தியர் 13 இல் ஓசை தரும் கிண்கிணி என்றிருந்ததை ஓசையிடுகிற கைத்தாளம் என்றும், அப்போஸ்தலர் 1:3 இல் உயிரோடிருக்கிறவராகப் பிரசன்னப்படுத்தினார் என்பதை, உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார் என்றும், 2 தீமோத்தேயு 4:7இல், விசுவாசத்தைக் கைக்கொண்டேன் என்றிருந்ததை விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் என்றும், எபிரேயர் 12:1 இல், சாட்சிகளின் இத்தனை பெரிய மேகம் என்றிருந்ததை மேகம் போல் இத்தனை திரளான சாட்சிகள் என்றும் திருத்தினார். இதிலிருந்து ரேனியசின் திருத்தங்கள் எத்தகையவை என்பதை அறியக்கூடியதாயுள்ளது.

இதைப்போன்று, பெப்ரீஷியசின் மொழி நடையில் ரேனியஸ் பல திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளார். இவர் பெப்ரீஷியசின் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரையிலான புத்தகங்களையும், சங்கீதங்கள், ஏசாயா, தானியேல் எனும் புத்தகங்களையும் திருத்தியுள்ளார். ரேனியஸ் மொழி பெயர்ப்பு இலக்கணத்தில் ஆர்வமிக்கவர்களாய் இருந்தவர்களினாலேயே பாராட்டப்பட்டது. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இவருடைய மொழி பெயர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

(4) பேர்சிவெல் மொழிபெயர்ப்பு

ரேனியசினுடைய மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னர், சில சபைகள் அம்மொழிபெயர்ப்பின் வசனநடை சிறந்ததெனக் கருதி அதை உபயோகிக்கத் தொடங்கினாலும் பெரும்பாலான சபைகள், அது மூலமொழியை விட்டு விலகிச் சென்றுள்ளது எனக் கூறி அம்மொழி பெயர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அச்சபைகள், பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பையே தொடர்ந்தும் உபயோகித்து வந்த போதிலும், அதன் வசனநடை அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், இவ்விரு மொழி பெயர்ப்புகளிலும் உள்ள குறைகள் நீக்கப்பட்டதாகவும், அதேசமயம் இரண்டினதும் சிறப்பம்சங்கள் ஒருங்கே காணப்படுவதுமான ஒரு புதிய மொழிபெயர்ப்பு தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் அனைத்து சபையினராலும் உணரப்பட்டது. அச் சமயம், இத்தகைய ஒரு மொழி பெயர்ப்பைத் தாம் செய்து தருவதாக வட இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மிஷனரிகள் சென்னை வேதாகமச் சங்கத்துக்குத் தெரிவித்தனர். இதனால் யாழ்ப்பாணத்தில் வேதாகம மொழி பெயர்ப்புப் பணிகளைச் செய்வதற்கு ஒரு குழு உருவாக்கப்பட்டது. பீட்டர் பேர்சிவெல் எனும் மிஷனரி இக்குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பீட்டர் பேர்சிவெல் மெதடிஸ்ட் மிஷனைச் சேர்ந்தவராவார். 1826இல் யாழ்ப்பாணத்துக்கு வந்த இவர் தயாரித்த ஆங்கில தமிழ் அகராதி மிகவும் பிரபல்யமானது. யாழ்ப்பாண மொழிபெயர்ப்புக் குபவில் மெதடிஸ்ட் மற்றும் அமெரிக்கன் மிஷன்களைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகித்தனர். இவர்களுக்கு வேதாகம மொழிபெயர்ப்பில் உதவி செய்தவர் தமிழ்ப்புலவர் ஆறுமுக நாவலராவார். உண்மையில், பேர்சிவெல் மொழிபெயர்ப்பின் தமிழ் நடை ஆறுமுக நாவலருடையதாகவே இருந்தது. இம்மொழிபெயர்ப்பின் வேலைகள் 1846 இல் ஆரம்பமானது.

யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் தமது மொழிபெயர்ப்பின் பிரதிகளை சென்னைக்கு அனுப்பியபோது, அது மூலமொழியின் சரியான மொழி பெயர்ப்பு அல்ல என்றும், யாழ்ப்பாணத் தமிழ் இந்தியாவுக்கு ஒத்து வராது என்றும் சென்னை வேதாகமச் சங்கம் தெரிவித்தது. எனினும், இக் குற்றச்சாட்டுகளை யாழ்ப்பாணத்திலிருந்த மிஷனரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆறுமுக நாவலருடைய தமிழ்நடை உயர்வானதாக இருப்பதினாலேயே சென்னை வேதாகமச் சங்கம் இவ்வாறு கூறுவதாக அவர்கள் வாதிட்டனர்.

1848 இல் யாழ்ப்பாண வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு வேலைகள் பூர்த்தியடைந்தன. இம்மொழிபெயர்ப்பிலேயே கடவுளுக்குத் ‘தேவன்’ எனும் பதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரேனியஸ் இப்பதத்தை ஒரு சில இடங்களில் பயன்படுத்தியிருந்தபோதிலும், அவர் பராபரன் எனக் குறிப்பிட்டிருந்த இடங்களிலெல்லாம் பேர்சிவெல் குழுவினர் தேவன் எனும் பதத்தை உபயோகித்தனர். தேவன் எனும் பதம் அக்காலத்தில் பன்மையில் இந்து சமயத்தில் உள்ள தெய்வங்களைக் குறிக்கும் பதமாயிருந்தது. ஒருமையில், அத்தெய்வங்களில் ஏதாவது ஒரு தெய்வத்தைக் குறிக்கும். எனினும், இந்து சமயத்தில் முழுமுதற் கடவுள்களான பிரம்மா, சிவன், விஷ்ணு எனும் தெய்வங்களுக்குத் தேவன் எனும் பதம் அக்காலத்தில் உபயோகிக்கப்படவேயில்லை. முழு முதற்கடவுள்களுக்குக் கீழானவர்களாயுள்ள தேவர்களே தேவன் என அழைக்கப்பட்டனர். இதனால், கிறிஸ்தவ கடவுளை இப்பதத்தால் அழைப்பது முறையல்ல என்று கருதப்படுகின்றது. ஆறுமுக நாவலரே தந்திரமாக இச்சொல்லை வேதாகமத்தில் புகுத்திவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாண மொழிபெயர்ப்பு சிறப்பான மொழிநடையில் மொழி பெயர்க்கப்பட்டிருந்த போதிலும், தென்னிந்தியாவிலிருந்த மிஷனரிகள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அதில் சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்றும், அது தனி ஒரு மனிதனுடைய மொழி பெயர்ப்புப்போலத் தென்படுகிறது என்றும் குற்றஞ் சாட்டினர்.

இம்மொழி பெயர்ப்பு, சாதாரண பாமர மக்களால் விளங்கிக் கொள்ளப்பட முடியாத மொழிநடையில் உள்ள தென்றும் கருதப்பட்டது. இதனால் சென்னை வேதாகமச் சங்கம் இம்மொழிபெயர்ப்பை நிராகரித்துவிட்டது.

(தொடரும்)

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜனவரி-பிப்ரவரி 2017)

1. உங்கள் வானொலி நிகழ்ச்சிகளையும், மற்றும் TV நிகழ்ச்சிகளையும் நாங்கள் தவறாமல் கேட்டு வருகிறோம். நல்ல ஆவிக்குரிய சத்தியங்களை பலவித தலைப்புகளில் ஊழியர்கள் சத்தியத்தை விளக்கி வருகிறதை கேட்டு தேவ ஆசீர்வாதம் பெற்று வருகிறோம் இன்னும் சத்தியத்தை அறிந்து கொள்ள வாஞ்சிக்கிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற தியானபுத்தகத்தை அனுப்பித்தரும்படி கேட்டுக்கொள்கிறோம் இது எங்கள் அன்றாட வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டிய சத்தியங்களை அறிந்துகொள்ள எங்களுக்கு பயன்படுகிறதாக இருக்கும்.

Mr.V.Rajamanickam, Kallaikurichi

2. அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற புத்தகத்தை சமீபத்தில் படிக்க தேவன் எனக்கு கிருபை செய்தார். அதில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தங்களும் விளக்கவுரைகளும் படிக்கும்போது எனது ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனுக்கென்று எழுந்து பிரகாசிக்க, மற்றவர்களுக்கு இயேசுவின் அன்பைப்பற்றி சொல்ல, தேவனுடைய வார்த்தைகள் தெளிவாகவும், எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கிறது.

K.Murugan Manoharan, Tuticorin

3. நான் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் வயது 80, 36 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறேன். நான் அதிகமாக விரும்பி படிக்கும் அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை என் பிள்ளைகள் குடும்பத்திற்கும் மற்றும் அநேகருக்கும் அறிமுகம் செய்திருக்கிறேன். என் ஆவிக்குரிய வாழ்வு வளர உங்கள் தியானங்கள் சாந்திபொன்னு அவர்கள் எழுதும் தியானங்கள் பயனுள்ளதாயிருக்கிறது. ‘விருத்தாப்பியம்’ புத்தகம் மிகவும் பயனுள்ளதாகவும் சமாதானம் அளிப்பதாகவும் உள்ளது.

Mrs.Mercy Sathianathan Neyveli

4. அனுதினமும் கிறிஸ்துவுடன் செப்-அக்2016ன் “துதிஜெப விண்ணப்பம்”-(அக்.2016) 1.10.2016 முதல் நாளில் இருளை வெளிச்சமாக்கி அக்-16 மாதம் முழுவதும் வெளிச்சத்தில் கடந்து வர தேவன்தாமே வல்லவராக இருந்து வந்ததற்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். மாதத்தின் ஒவ்வொரு நாளும் துதி ஜெப விண்ணப்பம் காலை நேரத்தில் வேதவசனத்துடன் சார்ந்து ஜெபித்து வருவதனால் வாக்குத்தத்தின் கர்த்தர் தாமே வாக்கு மாறாமல் எங்கள் துதி ஜெப விண்ணப்பத்திற்கு பதில் அளித்துவருகிறார். இப்பகுதி எங்களின் ஜெப வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜமாக இருந்து வழி நடத்துகிறது.

Mr.M.J.Edwin, Chennai

page 1 of 2