Daily Archives: September 18, 2019

ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 18 புதன்

வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீருற்றுகளுமாகும் (ஏசா.35:7) ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக்கேட்ட பங்காளர் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத் தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துகிற பரிசுத்த ஆவியானவர் தமது ஆற்றலாலும் கிருபையாலும் நிறைத்து வழிநடத்த ஜெபிப்போம்.

உலக ஆசையா?

தியானம்: 2019 செப்டம்பர் 18 புதன் | வேத வாசிப்பு: 1யோவான் 2:15-17

தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் (1யோவான் 2:17).

நமது கிரியைகள் ஒவ்வொன்றுக்கும் பலன் உண்டு. ஆகவே, பலன் நல்லதா, கெட்டதா என்பது நம்மைப் பொறுத்ததாகும். என்றாலும் தமது பிள்ளைகள் தமது சித்தத்தை நிறைவேற்றவேண்டும் என்று விரும்புகிற பரம பிதாவோ, ‘அவன் என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்’ என்று வாக்கு அளித்துள்ளார். இப்படியிருக்க தேவசித்தத்தைச் செய்யாதபடிக்கு நம்மைப் பின்வாங்கச் செய்வது எது? இதற்கு ஒரே பதில் நாம்; உலக சித்தம் செய்வதேயாகும்.

வெளித் தெரிகின்ற நமது வாழ்வு முறையிலேதான் நமக்கிருக்கும் உலக ஆசைகள் வெளிப்படுகிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் உலக ஆசைகள் நமது உள்ளான இருதயத்திலேயே ஆரம்பிக்கிறது. அதனால் இந்த விஷயத்தில் நமது உள்ளான வாழ்வுக்கும் பங்குண்டு. விழுந்துபோன மனிதனுடைய சரீர இச்சைகள், கண்கள் காண்கின்ற சகலத்திலும் ஆசைகொண்டு அவற்றைத் தமக்கே சொந்தமாக்கிக் கொள்ளும் குணம், பொருளாசை என்ற விக்கிரக வணக்கம், தன்னைப்பற்றியும், தனக்குரியவற்றைக் குறித்த பெருமை ஆகிய இவற்றால் இந்த உலக ஆசை நமது உள்ளான இருதயத்தை ஆட்கொள்கிறது. இந்தப் பகுதிகளில்தான் ஏதேன் தோட்டத்திலே ஏவாளையும், வனாந்தரத்திலே இயேசுவையும், சாத்தான் சோதித்தான். உலக ஆசையில் சிக்குண்ட ஏவாள் விழுந்தாள்; தேவ சித்தத்தையே தன் மூச்சாகக்கொண்ட இயேசுவோ வெற்றிகண்டார். இதிலே ஒரு விஷயம் உண்டு. உலக ஆசைகளை உள்ளத்திலே மறைத்துக்கொண்டு உலகத்தை வெறுப்பதுபோல நாம் நடிக்கலாம். அல்லது, இயேசுவைப்போல தேவனுக்கடுத்தவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வாழலாம். முந்தியது உலகத்துக்குரியது என்றால் அடுத்தது தேவனுக்கு ஏற்றது.

அன்பானவர்களே, நமக்குள் வளர்த்துக்கொள்கின்ற உலகத்துக்கடுத்த காரியங்கள் ஒருநாள் நம்மைவிட்டு எடுபட்டுப்போகும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வது கடினமாகத் தெரியலாம். அதேசமயம், தேவசித்தம் செய்பவன் நிலைத்திருப்பான் என்பதை விசுவாசிப்பதும் கடினமாயிருக்கலாம். நாம் வாழும் இந்த உலகத்திற்கடுத்த யாவும் ஒருநாள் அழிந்துவிடும் என்ற எண்ணம் மனதின் ஆழத்தில் பதிந்திருக்குமானால், கட்டுப்பாட்டோடும் சுயவெறுப்போடும் தேவசித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுப்பது நமக்குக் கடினமாயிராது. உண்மைத்துவத்துடன் நம்மைக் குறித்துச் சிந்திப்போம். உலக ஆசையா? தேவசித்தமா?

அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன் (கலா. 6:14 ).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, உலக ஆசைகளிலும் மாயைகளிலும் சிக்கிடாதபடி தேவசித்தமே செய்து வெற்றியுள்ள வாழ்க்கை வாழ எங்களுக்கு உதவும். ஆமென்.

சத்தியவசனம்