ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 23 திங்கள்
நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.23:23) அமெரிக்க தேசத்திலுள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களின் எல்லையை கர்த்தர் விரிவாக்கி அவர்களது தேவைகளை சந்திக்கவும், எழுத்தாளர்களையும் வேதபாடங்களை போதிக்கிற வேத வல்லுநர்களையும் கர்த்தர் தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.
தேவனைப் பிரியப்படுத்து!
தியானம்: 2019 செப்டம்பர் 23 திங்கள் | வேத வாசிப்பு: யோவான் 17:11-26
…உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது (யாக்.1:27).
நமக்குப் பிரியமானவர்களுக்கு நமது அன்பையும் மரியாதையையும் காண்பிக்க எத்தனை முயற்சிகளை எடுக்கிறோம்! அவர்களுக்குப் பிரியமானதைக் கொடுக்கிறோம்; செய்கிறோம்; அவர்களுக்குப் பிரியமாக வாழ முயற்சிக்கிறோம். அப்படியானால், ஆண்டவரை அதிகமாக நேசிக்கின்ற நாம் அவருக்குப் பிரியமானதைச் செய்கிறோமா? அப்படியானால் அவருக்குப் பிரியமானது எது? “உலகத்தால் கறை படாதபடி தன்னைக் காத்துக்கொள்வதே” என்று யாக்கோபு விளக்குகிறார். இதுவே நாம் தேவனில் கொண்டிருக்கிற மாசற்ற அன்புக்கும் பக்திக்கும் அடையாளம். அதாவது நாம் உலகில் இருந்தாலும் உலகிலிருந்து பிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வதுதான் நமது ஆண்டவரைப் பிரியப்படுத்துகிறது. இது துறவற வாழ்க்கையல்ல; தேவனுக்காக வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை; இந்த வாழ்வு வாழும் பொறுப்பு முற்றிலும் நம்மையே சார்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
“பரதேசி” என்ற சொல்லை யாரும் விரும்புவதில்லை. ஆனால், அதற்குள் ஒரு ஆழமான அர்த்தம் உண்டு. நாம் வாழும் இடத்தில் நமக்கு எதுவும் சொந்தமில்லை; எந்த சொத்துரிமையும் கிடையாது. இந்த விளக்கம் உண்மையென்றாலும், இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு. அதாவது, பரதேசிகள் இப்பொழுது தாம் வசிக்கும் தேசத்தில்தான் பரதேசிகளே தவிர, அவர்கள் இன்னொரு தேசத்தின் உரிமையாளர்களாவார்கள். இவ்வுலகில் நாமும் பரதேசிகள்தான். பரலோகவாசிகளாகிய நமக்கு இப்பூவுலகில் என்ன இருக்கிறது? “நீங்கள் உலகத்தாரல்ல” என்பதையே இயேசு தமது சீஷர்களுக்கு வலியுறுத்தினார் எப்படி? “தான் உலகத்தானனல்லாததுபோல…” ஆகவே, நமக்கென்று ஒரு நியமமுண்டு. அது கறைபடாமல் இருக்க வேண்டுமானால், உலகில் வாழ்ந்தாலும் அதனோடு நாம் ஒட்டிவாழ முடியாது. ஏனெனில், இந்த உலகம் நம்மைப் பகைக்கும்; பைத்தியம் என்றும், வாழத் தெரியாதவர்கள் என்றும் சபிக்கும். ஆனாலும் நாம் கறைபடாமல் வாழ வேறு வழியே இல்லை. இதுவே தேவனைப் பிரியப்படுத்தும் வழி! அதை மறந்து தற்பிரியராய், உலகபிரியராய் வாழுவோமானால் அது நமது பரமதகப்பனை விட்டு நம்மைப் பிரித்துப்போடும்.
தேவன், இருளையும் ஒளியையும் வேறுபிரித்தவர். இஸ்ரவேலரையும் எகிப்தியரையும் வேறு வேறாகக் கண்டவர். இப்படியிருக்க கிறிஸ்தவர்களாகிய நாமும் இவ்வுலகத்தாரும் எப்படி ஒன்றாக முடியும்? நாம் இநத உலகத்தால் எப்படிக் கறைப்பட முடியும்?
நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? (2கொரி. 6:14).
ஜெபம்: பரிசுத்தமுள்ள ஆண்டவரே, என் வாழ்வில் மறைவாயிருக்கின்ற கறைகளை உம் இரத்தத்தினால் கழுவி சுத்திகரியும். எங்களை பரிசுத்தப்படுத்தும். ஆமென்.