Daily Archives: September 6, 2019

ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 6 வெள்ளி

பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம் பண்ணி.. கோடை காலத்தையும் மாரி காலத்தையும் உண்டாக்கின (சங்.74:17) சர்வவல்லமையுள்ள தேவன்தாமே பருவ மழைக்காய் காத்திருக்கும் இடங்களுக்கு தவறாமல் அதை பெய்யப்பண்ணவும், விவசாயத்தையேத் தொழிலாகக் கொண்டுள்ள மக்களது துயர்கள் நீங்குவதற்கும் ஜெபிப்போம்.

பெரிய தவறு

தியானம்: 2019 செப்டம்பர் 6 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 6:23-29

..நித்திய ஜீவன் வரைக்கும் நிலை நிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள் (யோவா.6:27).

நமது வாழ்வைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கிறோமா? ஏதோ பிறந்தோம்; வாழ்கிறோம்; நாளை சாவோம் என்பது மாத்திரம்தானா நமது வாழ்வு! இப்படி வாழ்கின்ற படியினால்தான் சில சமயம் வாழ்க்கை நமக்கு பிரச்சனையாகவும் பாரமாகவும் மாறிவிடுகிறது. பல சமயம் நாமே வாழ்க்கைக்கு பிரச்சனையாக மாறிவிடுகிறோம். கடவுளைத் தேடாதவர்கள் இல்லை; ஆனால் எதற்காகத் தேடுகிறோம்? கடவுளைத் தேடுவதற்கு நாம் கொண்டுள்ள முக்கிய நோக்கத்தை அமர்ந்திருந்து சிந்தித்தால் வெட்கப்பட நேரிடும். இன்று காலையில் நீங்கள் ஏறெடுத்த ஜெபத்தைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். எதற்காக ஜெபித்தீர்கள்? எதையெல்லாம் கேட்டீர்கள்? ஞாபகமுண்டா?

திரளான ஜனங்கள் இயேசுவைத் தேடித்தேடி, அவர் இருக்கும் இடத்திற்கே போனார்கள். ‘நாங்கள் அங்கே தேட, நீர் இங்கே இருக்கிறீரே, எப்போது வந்தீர்’ என்றெல்லாம் கரிசனையோடு விசாரித்தார்கள். ஆனால், அந்த மக்களின் கரிசனை ஆண்டவரிலோ அல்லது அவரது வார்த்தையிலோ அல்ல; ஐயாயிரம் பேரை ஆண்டவர் போஷித்தபோது அவர்களும் சாப்பிட்டு திருப்தி அடைந்ததால்தான் தம்மை தொடர்ந்து தேடுகிறார்கள் என்ற அவர்களது உள்ளான நோக்கை ஆண்டவரே சொல்லிவிட்டார். ஏறக்குறைய இன்று நமது நிலைமையும் இதுதான். குழந்தைகளைப்போல நாம் கேட்ட சில காரியங்களை கர்த்தர் சந்தித்துவிட்டதால் அவரிடம் நமக்கு ஒரு பரிவு பாசம். வியாதியில் சுகம் கிடைத்ததால் ஒரு சந்தோஷம். ஆனால் நாளை இன்னும் பெரிய கஷ்டங்கள், வியாதிகள் வந்தால் இதே பரிவும் பாசமும் நமக்குள் தொடந்து வருமா?

அருமையானவர்களே, நாம் செய்யும் பெரிய தவறு இதுதான். இவ்வுலகத்திற்கடுத்த ஆசீர்வாதங்களில் நாம் அதிகம் திருப்தியடைகிறோம். அது நிறைவேறினால் சந்தோஷம், ஸ்தோத்திரம்; நாம் நினைத்தவை தவறிவிட்டால் அந்த ஸ்தோத்திரங்கள் யாவும் பறந்துபோய், துக்கம் தொண்டையை அடைக்கும். இவ்வுலகிற்குரியவர்கள் அல்ல; நாம் நித்தியத்திற்குரியவர்கள். நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் நித்தியத்தோடு ஒப்பிட்டுப்பார்த்து வாழ நாம் கவனம் எடுப்பதில்லை. எதையும் நித்திய வெளிச்சத்தில் வைத்துப்பார்த்து வாழப் பழகிக்கொண்டோமானால் நமது வாழ்வின் முதன்மையானவைகள் என்று நாம் போட்டு வைத்திருக்கும் கணக்கும், முன்னுரிமைப் பட்டியலும் முற்றிலும் மாற்றமடையும். நவீனங்கள், ஆடை அலங்காரங்கள், புகழ், செல்வத்தின் மீதான வாஞ்சை, சகலதும் மாறும். அங்கே ஆண்டவரே முதலிடத்தில் நிற்பார். அதுதான் ஆசீர்வாதம்! அந்தபரம சந்தோஷத்தை நாம் தொலைத்திடலாமா?

நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல ( யோ. 17:16).

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, நாங்கள் இவ்வுலகத்திற்குரியவர்கள் அல்ல என்பதை எங்களோடு திட்டமாய் பேசி உணர்த்தினீர். உமக்கே நன்றி. ஆமென்.

சத்தியவசனம்