ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 26 வியாழன்

ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும் சாலொமோனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளின (1இரா.3:9) தேவன்தாமே நம்முடைய தேசத் தலைவர்கள், உயர் அதிகாரிகள் இராணுவத் தலைவர்கள், அனைத்து மாநிலத்தின் முதன்மந்திரிகள், மாவட்ட ஆட்சியாளர்கள் யாவருக்கும் விசேஷித்த கிருபையையும் பாதுகாப்பையும் தந்து கர்த்தரே வழிநடத்த ஜெபிப்போம்.

கேட்டால் போதாது!

தியானம்: 2019 செப்டம்பர் 26 வியாழன் | வேத வாசிப்பு: யோனா 1:1-3; நாகூம் 3:1-6

”அப்பொழுது யோனா… தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி…’’ (யோனா 1:3).

வீட்டிலே கீழ்ப்படிதலுள்ள நல்ல பிள்ளைகள்போல இருந்துவிட்டு, வீட்டுக்கு வெளியே, வீதியில் தங்கள் இஷ்டப்படி நடக்கின்ற வேறுபிள்ளைகளைக் குறித்து நீங்கள் துக்கப்பட்டுள்ளீர்களா? இப்படியேதான் நாமும் நமது பரமபிதாவை பல தடவைகளில் துக்கப்படுத்தி இருக்கிறோம்.

தேவனிடத்தில் கேட்டு, அதை அப்படியே செய்கின்ற தீர்க்கதரிசிகளில் ஒருவன் யோனா. நினிவே பட்டணத்தாருக்கு வரப்போகும் பெரும் அழிவைப்பற்றி அறிவிப்பதற்காக நினிவேக்குப் போக தேவ கட்டளையைப் பெற்றான் யோனா. அசீரியரின் ஆட்சிக்குட்பட்ட நினிவே பட்டணம் மிகவும் பிரசித்திபெற்றது. ஆனால், அங்குள்ள மக்கள் கர்த்தருக்கு விரோதமாகவே நடந்தனர். அனாதையாக உள்ளவர்களைத் துன்பப்படுத்தி யுத்தங்களை நடப்பித்தனர். வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நினிவே நிறைந்திருந்தது. இஸ்ரவேலுக்கும் நினிவேக்கும் ஆகாதிருந்தது. இந்த இடத்திற்கு கட்டாயம் யோனா சென்றிட வேண்டும். அவன், அசீரியரில் கொண்ட வெறுப்பினாலோ, தேவ அநுக்கிரகம் இஸ்ரவேலுக்கு மாத்திரம்தான் என்று நினைத்ததாலோ, அந்தப் பட்டணத்தார் மனந்திரும்பி விட்டாலோ என்றோ, யோனா, தேவ கட்டளையை மீறி எதிர்திசைக்குப் போகும் கப்பலிலே ஏறி, தப்பிக்கொள்ள எண்ணி, அப்படியே ஏறிப் போனான்.

நாம் தீர்க்கதரிசிகள் அல்ல; ஆனாலும், தம்முடைய வார்த்தைக்கூடாக இன்றும் கர்த்தர் நம்முடன் பேசுகிறார். வார்த்தைமூலம் பணிகளையும் கொடுக்கிறார். அவரது வார்த்தைக்கு நாம் எவ்வளவாகக் கீழ்ப்படிகிறோம்? நம் பெலத்துக்கு மிஞ்சியதைக் கர்த்தர் கேட்கிறார் என்று சாக்குச் சொல்லிக்கொண்டு பயத்தினாலோ அல்லது பிடிவாதக் குணத்தினாலோ எதிர்திசையிலே ஓடிப்போகிறோமா? யோனா கர்த்தருடைய வார்த்தையை விட்டு ஓடியதால் பெரும் ஆபத்தைச் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும், தேவன் அவரை விடவில்லை.

கர்த்தருடைய வார்த்தையை வாசிப்பதற்கு நாம் முதலிடம் கொடுத்திருக்கலாம். அவருடைய சித்தம் செய்ய ஒப்புக்கொடுத்து ஜெபிக்கலாம். ஆனால், அதை முழு மனதுடன் நிறைவேற்றுகிறோமா? சில சமயம் நமக்குப் பிடிக்காத காரியங்களுக்காக நாம் அனுப்பப்படலாம். ஆனால் அனுப்புகிறவர் தேவன் அல்லவா! அவர் நம்மோடு இருப்பாரல்லவா! நம்மை வெறுக்கிறவர்களைச் சந்திக்க வேண்டுமென்றாலும் அதற்குரிய கிருபையைத் தேவன் தருவாரே! கீழ்ப்படியாத யோனாவுக்கு மீன் காத்திருந்தது. நாம் கீழ்ப்படியாவிட்டால் காரியம் என்னவாகுமோ யாரறிவார்?

உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? (சங்.139:7).

ஜெபம்: எங்களை அழைத்த ஆண்டவரே, முழுமனதோடே உம் சித்தத்தை நிறைவேற்றவும், வழிவிலகிப் போய்விடாதபடியும் எங்களைக் காத்தருளும். ஆமென்.