ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 27 வெள்ளி

தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே (ரோம.11:29) சத்தியவசன இலக்கியப்பணியில் மொழியாக்க உதவி செய்துவரும் சகோதர, சகோதரிகளுக்கு தேவன் கொடுத்த ஞானத்திற்காகவும் மொழியாக்கத் திறனுக்காகவும் நன்றிசெலுத்தி தொடர்ந்து கர்த்தர் அவர்களை இப்பணிகளில் வல்லமையாய் உயோகிக்க மன்றாடுவோம்.

தூக்கத்தை விட்டெழும்பு!

தியானம்: 2019 செப்டம்பர் 27 வெள்ளி | வேத வாசிப்பு: யோனா 1:1-17

யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரை பண்ணினான் (யோனா 1:5).

தூக்கம்கூட தேவனுடைய ஈவுதான்! அதிலும் அயர்ந்து உறங்கி எழும்பும்போது அனுபவிக்கின்ற சுகமே தனி. ஆனால், நமக்கு அமைதியான தூக்கம் வருவதால் நாம் செய்வது எல்லாம் சரி, நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லையென்றாகுமா? தேவன் நமக்கென்று தந்த பொறுப்புகளை மறந்து தூக்கத்தில் இன்பங்காணுகின்ற அதே நேரத்தில், எங்கள் பொறுப்பின்மையால் எத்தனை பேர் என்னென்ன பிரச்சனைகளை அனுபவித்து தூங்காமல் இருப்பார்களோ யாரறிவார்?

தேவனுடைய சமுகத்தைவிட்டு விலகியோடிய யோனா, நினிவேக்கு எதிர் புறமாக தர்ஷீசுக்குப் போகும் கப்பலில் ஏறினான். மனதில் எந்தவொரு கலக்கமுமில்லை. எல்லாவற்றையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, யாரும் தொந்தரவு செய்ய முடியாத கீழ்த்தட்டுக்குப் போய்ப் படுத்து, அயர்ந்த நித்திரை கொண்டான். ஆனால், இவனால் கப்பலின் மேல்தட்டிலோ ஒரே கூக்குரல். சமுத்திரத்தில் வீசிய பெருங்காற்றால் கப்பல் அலசடிப்பட்டது. கப்பல் உடையுமென்று நினைக்குமளவுக்கு பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. எல்லாரும் தங்கள் தங்கள் தெய்வங்களிடம் வேண்டுதல் செய்தனர். பாரத்தைக் குறைக்கும்படிக்கு பாரமான சரக்குகளை சமுத்திரத்தில் எறிந்தனர். இத்தனைக்கும் காரணமான யோனாவோ அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். கர்த்தருடைய சமுகத்தைவிட்டு விலகி ஓடிப்போகின்ற பயம்கூட இருக்கவில்லை. யோனாவின் பொறுப்பற்ற செயலினால் அந்தக் கப்பலில் இருந்த அத்தனைபேரும் பாதிக்கப்பட்டார்கள்.

இன்று தேசத்தில் குழப்பம், நமது குடும்பங்களில் சபைகளில் குழப்பம் போதாதற்கு இயற்கையின் சீற்றமும் அதிகரித்துவிட்டது. ஆனால் நாமோ நமது பொறுப்பை மறந்து தூங்கிக்கொண்டிருக்கிறோமா? நாமுண்டு நம்பாடுண்டு என்று வாழுகிறோமா? யோனாவின் குற்றத்தைக் குறித்து பேசுகிற நாம் முதலில் நம்மை ஆராய்ந்து பார்ப்போமாக. தேவன் என்னில் வைத்திருக்கிற நோக்கத்தில், அவரது சமுகத்தில் நான் நிற்கிறேனா? ஜெபிக்கின்றேனா? வேதத்தை வாசித்துத் தியானிக்கிறேனா? உபவாசம் இருக்கின்றேனா? “என் தேசத்துக்கும் என் குடும்பத்துக்கும் என்னால்தான் ஆபத்து என்றால், அவர்களைக் காப்பாற்றும்படி என்னை சமுத்திரத்தில் எறிந்து போடுவதானால் போட்டுவிடும்” என்று நம்மால் ஜெபிக்க முடியுமா?

இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; ….இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக… (2சாமு. 24:17).

ஜெபம்: மன்னிக்கிறதற்கு தயைபெருத்த ஆண்டவரே, உலகத்துக்குமுன் போலியாக வாழ்வதை விடுத்து, எங்களை நாங்களே ஆராய்ந்து பார்த்து குறைகளை அறிக்கையிட, மனந்திரும்ப எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.