Daily Archives: September 14, 2019

ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 14 சனி

அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி… (மாற். 6:50) அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் வாயிலாக கர்த்தர் பேசி நம்மை திடப்படுத்துகிறபடியால் கர்த்தரைத் துதிப்போம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளின் நல்ல சுகத்திற்காகவும், கர்த்தருடைய கரங்களிலே வல்லமையாய் பயன்படுத்தப்படுவதற்கும் ஜெபிப்போம்.

தேவசித்தம்

தியானம்: 2019 செப்டம்பர் 14 சனி | வேத வாசிப்பு: யோவான் 4:31-38

…நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே …போஜனமாயிருக்கிறது (யோவா.4:34).

கிறிஸ்துவுக்குள் முதன்மையானவற்றை நாடி, அவற்றிற்குரிய முதலிடத்தைக் கொடுத்து, அவற்றையே வாழ்வின் மூச்சாகக் கொள்ளும்போது அது நம்மைக் கிறிஸ்துவுக்குள் உறுதியாகக் காத்துக்கொள்ளும். தேவனுடைய பிரசன்னம், தேவனுடைய வார்த்தை, கிறிஸ்துவின் சுவிசேஷம், இவற்றைவிட நமக்கு வாழ்வில் முக்கியமானது எதுவாக இருக்க முடியும்?

இந்த முக்கியமானவைகள் நமது வாழ்வில் கிரியையில் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் நாம் உணருவது முக்கியம். நமது அன்றாட வாழ்வில் நமது பேச்சு, செயல், நடத்தையாவும் கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்துகிறதா என்பதில் நாம் கவனமாய் இருப்பது அவசியம். “சில வேளைகளில் வெளிப்படுத்துகிறோம்; சில இடங்களில் தவறிவிடுகிறோம்” என்று ஒரு சகோதரி இதற்குப் பதிலளித்தார்கள். ஆனால் கிறிஸ்தவ வாழ்வில் ஒன்றில் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதுதான் பதில். அரைகுறை ஜீவியம் இருக்கமுடியாது. இந்த அரைகுறை ஜீவயம்தான் நமது தோல்விகள், திருப்தியற்ற நிலைமைகள் எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம். எத்தனை வேதப்படிப்புகள், ஜெபக்கூட்டங்கள், ஆலய ஆராதனைகள்! இவற்றுக்கூடாக நல்ல ஆவிக்குரிய போஜனம் கிடைத்தாலும் பெலனற்றதொரு வாழ்வு ஏன்? இதற்குரிய பதிலை சில கேள்விகளுக்கூடாகச் சிந்தித்துப் பார்ப்போம். தேவசித்தம் நமது வாழ்வில் எந்த இடத்தில் இருக்கிறது? முன்னிடத்தை வகிக்கவேண்டிய தேவ சித்தத்தை நாம் அறிவதற்கு அவர் பாதம் காத்திருக்கிறோமா? அது நிறைவேறும்வரை எதிர்பார்த்திருக்கிறோமா?

பிதாவின் சித்தத்தை செய்து முடிப்பதொன்றே தம்முடைய போஜனம் என்று சொல்லுமளவிற்கு இயேசுவின் உலக வாழ்வில் பிதாவின் சித்தமே முக்கியத்துவம் வகித்திருந்தது. சோதனைகள் வந்தது; உபத்திரவங்கள் தாக்கின; ஆனால் அதுவே அவருடைய பெலம், சுகம், திருப்தி, யாவுமாயிருந்தது. பிதாவின் சித்தத்தை இயேசு முழுதாகச் செய்துமுடித்தார். நமக்குத் தேவையான பெலன், உண்ணும் உணவினால் மாத்திரமல்ல, தேவசித்தத்தை அறிந்து அதனைச் செயற்படுத்துவதில்தான் கிடைக்கிறது என்பதை ஆண்டவர் உணர்த்தினார். பாடுகளாயினும் தேவ சித்தத்தை நிறைவேற்றும்போது கிடைக்கின்ற திருப்தி வேறெதிலும் நமக்குக் கிடைக்காது. தேவ சித்தத்தின் மையத்தில் நாம் இருப்போமானால் வாழ்வில் எதையும் நம்மால் எதிர்கொள்ள முடியும். ஏனெனில், முடிவு நிச்சயம் ஜெயம்தான்.

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் (1யோ. 2:17).

ஜெபம்: ஆண்டவரே, உம் சித்தம் ஆகட்டும் என்று ஜெபிக்கின்ற நான், உண்மையாகவே உம்முடைய சித்தத்துக்குள் அடங்கியிருக்க என்னை ஒப்புவிக்கிறேன். ஆமென்.

சத்தியவசனம்