Daily Archives: September 8, 2019

ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 8 ஞாயிறு

நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்துவந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றின (யோசுவா 24:17) தேவாதி தேவனை தொழுதுகொள்ளும் இந்த ஆராதனை நாளில் புதிதாய் விசுவாசிகளாகி சபைகளில் சேர்க்கப்பட்டவர்களது விசுவாச வர்த்தனைக்காக, தேவனுக்கென்று சாட்சியுள்ள வாழ்க்கை வாழ கர்த்தருடைய அனுக்கிரகத்திற்காய் ஜெபிப்போம்.

ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை

தியானம்: 2019 செப்டம்பர் 8 ஞாயிறு | வேத வாசிப்பு: யோவான் 8:31-38

..பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (யோ.8:34).

‘பழக்கத்திற்கு அடிமையாகுதல்’ இதற்கு இன்று பலரும் பல விதங்களில் சிறைப்பட்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. முன்னர் போதை வஸ்து, மது என்று இருந்தது; இப்போது நவீன தொலைநுட்பங்களுக்கே மனிதன் அடிமையாகி வருகிறான். நாம் எதற்கு அதிக இடமளித்து, அடிக்கடி அதனிடம் செல்லுகிறோமோ, பின்னர் நாம் நினைத்தாலும் நம்மால் அதை விடமுடியாதிருக்கும். ஏனெனில், அது நம்மைப் பிடித்துவிடும். இதனால் நாம் ஒரு மயக்கநிலைக்குள் தள்ளப்பட்டு விடுகிறோம். அந்த நிலையில் நமது ஆவிக்குரிய பார்வை முற்றிலும் மறைந்து விடுகிறது. அந்தக் காலத்தில் ஒரு அடிமை, தான் ஒரு அடிமை என்று அறியக்கூடிய விதத்திலே அடிமையாகவே நடத்தப்படுவான். ஆனால், நாம் சுதந்திரவாளிபோல விடப்பட்டும், இப்பொழுது பாவத்துக்கு அடிமைகளாகி விடுகிறோம். நாம் பாவத்துக்கு அடிமையாகிவிட்டதையோ, பாவம் நம்மை ஆண்டுகொண்டிருப்பதையோ அறியவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒரு சிறைக்குள்ளே நாம் அடைக்கப்பட்டு விடுகிறோம்.

இதனால் ஒவ்வொருவரும் தம் செயல்களுக்கு ஒரு காரணம், நியாயம் ஆயத்தமாகவே வைத்திருப்பார்கள். கையடக்க தொலைபேசியில் (SMS) அடிக்கடி தன் நண்பர்களோடு பேசுகின்ற மகனை, படிப்பிலே கவனம் செலுத்தும்படி அம்மா கண்டித்தார்கள். அதற்கு மகன், “அம்மா நான் என் நண்பர்களோடு நல்லவற்றைத்தான் பேசுகிறேன்”என்று அதட்டினான். நாளடைவில் பல மாறுபாடான செய்திகளைக் கேலியாகப் பரிமாற்றம் செய்த அவனது தொலைபேசி போலீஸில் அகப்பட்டு, அவன் சிறைக்குச் செல்ல நேரிட்டது. அப்போது அவன், “அம்மா, என் பாதை தவறு என்பதை நீங்கள் உணர்த்தியபோது நான் உணராததால்தான் இன்று எனக்கு இந்த நிலைமை” என்று அழுதான்.

இன்று பிசாசானவன் நமக்குள் விதைத்திருக்கும் தீய விதை என்ன தெரியுமா? பாவத்தை பாவம் என்று உணரமுடியாத பாவ நிலைமைதான். அன்று தாவீது பாவம் செய்தபோது உணர்வற்றிருந்தாலும், உணர்த்தப்பட்டபோது உணர்ந்தார். ஆனால், இன்று உணர்த்தினாலும் உணர்வற்ற தன்மையே காணப்படுகிறது. நம்மை அடக்கி ஆளும் தன்மை பாவத்திற்கு உண்டு. நாம் நடக்க வேண்டிய வழியை அது கட்டளையிடவும் கூடும். இந்த நிலைமைக்குள் அகப்பட்டு அழிந்துவிடாமல், நமது பாவத்துக்காக மரித்த இயேசுவின் கரத்தில் நம் வாழ்வைக் கொடுத்துவிடுவோமாக.

என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும் (சங். 51:2).

ஜெபம்: அன்பின் தேவனே, உம்முடைய சமுகத்தில் என்னை ஆராய்ந்து பார்க்கிறேன். கடினப்பட்ட எங்கள் வாழ்வின் பகுதிகளில் உணர்த்தப்படும்போது உமக்குக் கீழ்ப்படியும் இருதயத்தைத் தயவாய் தந்தருளும். ஆமென்.

சத்தியவசனம்