வாக்குத்தத்தம்: 2022 மே 1 ஞாயிறு

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது  உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு (எபேசியர் 2:8)


நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள் (பிரசங்கி 5:1).
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 29-31 | மாலை: லூக்கா.22:1-27

ஜெபக்குறிப்பு: 2022 மே 1 ஞாயிறு

உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால் என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் (எரேமி. 29:13).


ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார் (ஏசா.54:8) இவ்வாக்கின்படி இம்மாதத்தில் கர்த்தர் நம்மேல் இரக்கமாயிருந்து நடக்கவேண்டிய வழியை நமக்குப் போதித்து காட்டவும், கைகளின் பிரயாசங்களில் கர்த்தருடைய ஆசீர்வாதங்களுக்காகவும் ஜெபிப்போம்.

எல்லையில் சமாதானம்!

தியானம்: 2022 மே 1 ஞாயிறு | வேத வாசிப்பு: சங்கீதம் 147:1-20

அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார் (சங்கீதம் 147:14).

ஒரு புதிய மாதத்தைக் காணச்செய்த தேவாதிதேவனை நாம் ஸ்தோத்திரிப்போம். அவர் நம்மை ஆசீர்வதித்து நமது சகலத் தேவைகளையும் இம்மாதத்தில் சந்தித்து வழிநடத்து வதோடு நமது நடைகளை காத்துக்கொள்ள நமக்கு கிருபை செய்வாராக!

எகிப்து, யோர்தான், சிரியா, லெபனான், பாலஸ்தீன நாடுகளை எல்லையாகக் கொண்ட எருசலேம் நகரம் காலாகாலமாக எல்லைப்போரில் சிக்குண்டது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் யூத ஜனத்தின் தனிப்பட்ட வாழ்வியல் பாதிக்கப்பட்டு, சமாதானம் இழந்து வாழ்ந்த காலத்தைக் குறித்தே சங்கீதம் 147 கூறுகிறது. இதை யார் எழுதியது என்பதைத் திட்டவட்டமாக கூறமுடியாவிட்டாலும், பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பியவர்களால் எருசலேம் திரும்பவுமாகக் கட்டப்படும் காலத்தில் எழுதப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

யூத ஜனங்கள் தாம் இழந்துபோன அனைத்தையும் திரும்பவும் ஒன்றன்பின் ஒன்றாகப் பெற்றுக்கொள்ளும் காலநாட்களில், அவர்கள் தேவனைத் துதிப்பதை மட்டுமல்ல, தாம் இழந்துபோன அனைத்தையும் திரும்பவும் தேவன் மீட்டுத்தருவார் என்ற அவர்களது எதிர்பார்ப்பைக் காண்பிக்கின்றது. “அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்”, இது அவர்களுடைய நாட்டின் எல்லையில் மட்டுமல்ல, அவர்களது வாழ்க்கையின் பொருளாதார தேவைகள் அனைத்திலும் தேவனின் சமாதானமும் ஆசீர்வாதமும் தொடர்ந்தும் உண்டு என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

நாடுகளுக்கான யுத்தங்களும், தொற்றுநோய்களும் அதைத் தொடர்ந்து ஏற்படுகிற பொருளாதார வீழ்ச்சியினால் நாடுகள் மாத்திரமல்ல, மனிதனின் தனிப்பட்ட வாழ்வும் பாதிக்கப்படுவதுண்டு. கடந்த நாட்களில் உலகமே எதிர்பார்த்திராத ‘கொரோனா’ வைரஸினால் ஏற்பட்ட கொள்ளைநோயினால் உலக பொருளாதாரமே சீர்கெட்டுப்போனது. இலட்சக்கணக்கானோர் வேலை இழந்து, வருமானம் இன்றிக் குடும்பங்களை நடத்தத் தவிக்கின்றன. மாத்திரமல்ல, இந்த நோய்த் தாக்கத்தால் மரணித்தவர்களின் குடும்பங்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள்கூட பல நெருக்கங்களுக்கூடாகக் கடந்துசென்றார்கள். அன்றைய யூத இன மக்கள் அனுபவித்த துன்பம் போலவே, இன்றும் நாம் சில காரியங்களைச் சந்தித்திருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இன்று நம்மில் யாராவது இருக்கலாம். ஆனாலும் சோர்ந்துபோக வேண்டாம்! மனிதனின் அனைத்து எல்லைகளையும் ஆளுகை செய்து, சமாதானத்தை அருளும் தேவன் நமக்கிருக்கிறார். பாதிப்புக்களிலிருந்து மீள அவரே உங்களுக்கு உதவிகளைச் செய்ய வல்லவராயிருக்கிறார்.

…எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் (பிலி.4:6).

ஜெபம்: சமாதானத்தின் தேவனே, எங்களுக்கு வந்த பாதிப்புகளில் இருந்து எங்களை மீட்டெடுத்தீர். எதிர்காலத்தையும் பார்த்துக்கொள்வீர் என்ற நிச்சயத்தைக் கொடுத்திருக்கிறீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து…

(மே-ஜுன் 2022)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

பிதாவின் வலது பாரிசத்தில் இருந்து நமக்காக பரிந்துபேசிக் கொண்டிருக்கும் இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இவ்விதழின் வாயிலாக மாத்திரமல்ல, சத்தியவசன இணையதளம், வாட்ஸ் அப், youtube (Audio version) ஆகியவற்றின் வாயிலாகவும் வெளிவரும் இத்தியானங்களினாலே அநேகமாயிரமான மக்கள் பிரயோஜனமடைந்து வருகிறதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். தியானங்களை எழுதும் தேவபிள்ளைகளை தேவன் தமது கரங்களில் எடுத்து உபயோகிக்க வேண்டுதல் செய்வோம்.

நாம் கேள்விப்படும் யுத்த செய்திகள், தொற்றுநோய், இன கலவரங்கள், பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றின் மூலம் கடைசிகாலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. இவைகள் யாவும் தம்முடைய வருகைக்கு அடையாளமாய் இருக்கும் என ஆண்டவர்தாமே கூறிச் சென்றுள்ளார். ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும் (லூக்.21:10). கர்த்தருடைய வருகையை சந்திப்பதற்கு நாமும் நமது குடும்பமும் ஆயத்தமாய் இருப்போம். நற்செய்தியை அறிவித்து மற்றவர்களையும் ஆயத்தப்படுத்த தேவன் நமக்கு கிருபை செய்வாராக. நாங்கள் முன்னறிவித்தபடி Dr.ஜாண் நியூபெல்டு அவர்கள் எழுதிய உங்கள் இரட்சிப்பின் முழுமையான பலனை அனுபவித்தல் என்ற புத்தகத்தைப் பங்காளர்களுக்கு மார்ச்-ஏப்ரல் மாத சத்தியவசன சஞ்சிகையுடன் சேர்த்து அனுப்பியுள்ளோம்.

இவ்விதழில் மே மாத தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும், ஜுன் மாதத்திற்கு நம்முடைய சுபாவங்களிலே கிறிஸ்துவுக்குள்ளாக மாற்றப்பட வேண்டிய காரியங்களைத் தியானங்களாக சகோதரி சாந்தி பொன்னு அவர்களும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் தங்களுக்கு அதிக ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். தாங்கள் பெறும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

வாசகர்கள் பேசுகிறார்கள்

(மே-ஜுன் 2022)

[01]
Dear Brother in Christ, I Praise God for the Sathiavasanam Ministry, especially for Anuthinamum Christhuvudan. I sincerely follow the table which is given to read the word of God systematically everyday. I praise God for enabling me to finish reading the Bible in the year 2021. I have made it a practice to follow this table ever since it was started. My sincere prayers are with the Sathiyavasanam Ministry in the years to come.

Mrs.Nalini Stephenson, Vellore.


[02]
அன்புடையீர், வாழ்த்துக்கள் தங்களின் தியானப்புத்தகம் மற்றும் காலண்டர் கிடைத்தது. மிக்க நன்றி. பத்திரிக்கை பிரயோஜனமாக உள்ளது. குடும்ப ஜெபத்திற்கு பயன்படுத்துகிறோம்.

Mr.S.Gandhiraj,Chengalpattu.


[03]
அன்புள்ள சத்தியவசனத்தாருக்கு, இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள், சத்தியவசனம் மூலமாக நாங்கள் மிகுந்த பயனடைந்து வருகிறோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், உங்கள் ஊழியங்களுக்காக ஜெபித்து வருகிறோம்.

Mrs.Kamala Robert, Coimbatore.


[04]
அழகான மனதிற்கு மகிழ்வூட்டும் அற்புத வாரத்தின் முதல் நாளின் காலைப் பதிவுகள். காலைதோறும் வாழ்த்தும் தேவவாக்குத்தத்தமும் மிக ஆசீர்வாதம் மிக ஆனந்தம். நன்றி. எங்களுக்கு தொடரட்டும் இத்தொண்டும் தோழமையும் அன்பும் ஆசீர்வாதமும்.

Mr.Anthony.


[05]
அன்புள்ள ஐயா அவர்களுக்கு, வணக்கம். நான் தொடர்ந்து சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன். ஆசீர்வாதமாக உள்ளது.

Bro.Murugan Joshua, Nagalapuram.


[06]
Dear Brother in Christ, Greetings to you. By His Mercy, we entered into the new month. I am receiving your magazine and watching your Tv programme regularly.

Mrs.N.Sarah Magadalene, Chennai.

மறைவான சுத்தியல்!

அதிகாலை வேளையில்…
(மே-ஜுன் 2022)
Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: யோபு 7:1-21


 என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது  என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடியற்காலத்திலே
என்னைத் தேடுவீரானால் நான் இரேன் (யோபு 7:21).


யோபுடைய வாழ்வின் அஸ்திபாரம் ஆட்டம் கண்டது. அவருடைய ஆஸ்திகள் யாவும் அழிந்தன; அவனுடைய பிள்ளைகள் அனைவரும் மாண்டனர். வழித்தோன்றல்களுக்கு வாய்ப்பு அற்றுப்போனது. கர்த்தர் யோபுவை சாத்தானுடைய கரத்தில் கொடுத்துவிட்டார். இவற்றின் காரணம் யோபுடன் தொடர்புடையவர்களுக்கு புரியவில்லை. அவரது மனைவியும் “தேவனை தூஷித்து ஜீவனை விடும்” என்று அவருக்கு ஆலோசனை கொடுத்தாள். ஆனால் யோபுவோ “இத்தீங்குகளை தேவன் அனுமதித்தாரானால் அது தனக்கு நன்மையாகவே முடியும்” என முழுவதும் நம்பினார்.

மற்றவர்களுக்கு புத்தி சொல்லி ஆறுதல் அளித்து வந்த யோபு, தற்சமயம் துன்பத்தில் கலங்குவதற்கு இடம் தருவதை கண்டு யோபுடைய நண்பரான எலிப்பாஸ் வியப்படைந்தார். யோபுடைய வழிகள் உத்தமமாய் இருந்தது எனில் அவர் கலங்க வேண்டிய அவசியமில்லை என்ற தவறான முடிவுக்கு வந்தார். பாவத்தின் விளைவே அனைத்து இடர்பாடுகளுக்குக் காரணம் என அவர் புரிந்துகொண்டார். எனவே யோபினுடைய பாவத்தின் விளைவே அவருடைய இத்துன்பங்களுக்குக் காரணம்; வேறு விளக்கங்கள் தேவையல்ல; இதற்குத் தப்பி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள, கசப்புடன் முறையிடாமல் பாவத்தை அறிக்கையிட வேண்டும் என்று அவர் கூறினார். யோபு தன் நண்பரின் பேச்சினால் மன வருத்தம் அடைந்தார். எலிப்பாஸ் யோபுடைய வழக்கைப் பெரியதாக்கி அவருடைய நிலையை இன்னும் மோசமாக்கினார். எவ்வித காரணமும் இல்லாமல் தன்னைச் சுற்றிலும் வாழ்க்கை தரைமட்டமானதை அறிந்த யோபுவின் நிலையை சற்றே சிந்தித்துப் பாருங்கள். தன்னுடைய சூழலை எலிப்பாஸ் தவறாகக் கணித்துவிட்டார் என்பதை யோபு நன்கு உணர்ந்துகொண்டார்.

ஏழாம் அதிகாரத்தில் யோபு மனித வாழ்வைப் பற்றிய தத்துவங்களைத் தெரிவிக்கிறார். இப்பூமியில் மனித வாழ்வு குறைந்த எண்ணிக்கையுடையது. அது கடந்து போகும் மேகத்துக்கு ஒப்பானது. இக்குறுகிய காலத்தில் தனது வாழ்வு வேதனையும் துயரும் நிறைந்துள்ளது. யேகோவா தன்னைப் பற்றி ஏன் கரிசனையுடையவராய் இருக்க வேண்டும்? பின் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவரை விசாரிக்கவும் நிமிஷந்தோறும் அவனை சோதிக்கவும் வேண்டும்? இந்நிலையில் “வாழ்வு இறப்புக்கு ஒத்தது. விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன்” என்று விரும்பினார். யோபுவை சாத்தானின் கையில் ஒப்புக்கொடுக்க தேவன் அனுமதித்தது ஓர் இரக்கமில்லாத செயல். தனது வாழ்வு உத்தமும் நேர்மையுமாய் இருக்கும்பொழுது தேவன் ஏன் இதனை அனுமதித்தார்?

சாமுவேல் சாண்ட்விக் தன்னுடைய இளம்பிராயத்தில் உள்ளூரிலுள்ள ஒரு கொல்லரின் கடைக்குச் செல்வது வழக்கம். அக்கொல்லர் ஒரு பெரிய இரும்புத் துண்டினை இடுக்கியில் பிடித்து, அது வெண்மையாகும்வரை துருத்தியை உபயோகித்து நெருப்பில் வைப்பார். பின்னர் அவ்விரும்புத் துண்டை எடுத்து ஒரு பட்டைக்கல்லின் மீது வைத்து ஒரு சிறு சுத்தியால் தட்டுவார்; அவரது உதவியாளரான மற்றொருவர், அக்கொல்லர் அடித்த அதே இடத்தில் மற்றொரு சுத்தியால் ஓங்கி அடிப்பான். அந்தத் துண்டு அழகாக உடைந்துவிடும். அதனைக் கண்ட சாண்ட்விக் ஆர்வத்துடன், “நீங்கள் அந்த சிறு சுத்திக்கு அதிக வேலை கொடுப்பதில்லையே” என்று கேட்டான். அதற்கு அந்தக் கொல்லர் சிரிப்புடன், “தம்பி, அடுத்த மனிதர் எங்கு அடிக்க வேண்டும் என்று காட்டுவதற்கே நான் தட்டுவேன்” என்று கூறினார்.

யோபுடைய வாழ்வின் அனைத்து ஆதாரங்களும் அழிந்து போயின. அவனுடைய நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூற வந்தனர். இந்த பேரிடர்கள் யாவும் பரலோகில் திட்டமிடப்பட்டது என்பதை அவர்கள் அறியவில்லை. யோபுவை உபத்திரவப்படுத்த சாத்தானுக்கு தேவன் அதிகாரம் கொடுத்ததையும், சாத்தான் தன்னுடைய சுத்தியலை வைத்து யோபுவை அடித்த பொழுது அவை யாவும் பரலோகப் பிதாவின் அன்பின் வழிகாட்டுதலின்படியே நடந்தது என்பதையும் அவர்கள் அறியவில்லை. இரும்பினை எங்கு அடிக்கவேண்டும் என்று கொல்லர் குறிப்பிடுகிறாரோ அதுபோலவே யோபுவையும் எங்கு தாக்க வேண்டுமென்றும் தேவன் கட்டளையிட்டார்.

இன்று நீங்களும் அநியாயமான விமரிசனம், தேவையில்லாத உபத்திரவங்கள், திருப்பித்தரப்படாத அன்பு இவற்றை அனுப வித்துக்கொண்டிருக்கிறீர்களா? தேவன் அனுமதிக்கும் எல்லையை மீறி சாத்தான் தேவனுடைய பிள்ளைகளை உபத்திரவப்படுத்தமாட்டான். தேவன் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். நண்பர்கள் அநியாயமாய் நம்மைக் குற்றப்படுத்தினாலும் நமது வாழ்வு தேவனுக்கு முன்பாக நீதியாக இருப்பின் சாத்தானின் எதிர்ப்புகளுக்கு நாம் கவலைப்படத் தேவையில்லை.


அதிகாலைப் பாடல்:

அனுதினமும் ஒவ்வொரு நொடியும் தேவகிருபை என்னைத் தாங்கிட,
எந்தன் துன்பத்தை சகிக்க, என் பிதாவின் ஞான நன்மையை நம்புவேன்.
அவருடைய இதயம் அளவில்லா அன்பால் நிறைந்தது.
தமக்கு சிறந்ததெனத் தோன்றியதை ஒவ்வொரு நாளிலும் தருகிறார்.
அதில் இன்பமோ, துன்பமோ, பாடுகள் இருந்தாலும்
நாம் எதைப் பற்றியும் கவலைப்படக் காரணமில்லை

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை