ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 18 சனி

சத்தியவசன இருமாத வெளியீடுகள்- சத்தியவசனம் சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கைகளை தயார் செய்யும் பணிகளுக்காகவும், அதன் அச்சுப்பணிகளில் தேவனுடைய ஒத்தாசை காணப்படவும், அனைவருக்கும் சரியாய் கிடைப்பதற்கு அதை பங்காளர்களுக்கு கொண்டு சேர்க்கும் தபால் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.

மகிழ்ச்சியல்ல இகழ்ச்சி!

தியானம்: 2025 அக்டோபர் 18 சனி | வேதவாசிப்பு: ஆதியாகமம் 9:18-29

YouTube video

மதுபானம் … பளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப் போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும் (நீதி.23:31,32).

வைபவங்களில் குடிப்பது தவறா? கொஞ்சம் குடிக்கலாமா? கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள் என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதியுள்ளாரே. வெறிகொள்ளும் அளவுக்குக் குடிக்கக்கூடாது என்றுதானே 1தீமோத்தேயு 5:23ல் பவுல் எழுதியுள்ளார். இப்படியாக சாக்குப்போக்கு கேள்விகள் எழுப்புகிறவர்கள் பலர்! இராப்போசனத்தில் இயேசு திராட்ச ரசம்தானே பரிமாறினார்; இன்று நாங்களும் திருவிருந்தில் அதைத்தானே குடிக்கிறோம்’ என்று குதர்க்கமாகப் பேசுபவர்களும் உண்டு. இப்படியான கேள்விகள் கேட்பவர்கள் தங்கள் சந்தேகத்தைத் தீர்க்கும் நல்மனப்பாங்கு உடையவர்கள் என்று சொல்ல முடியாது. மாறாக, இவர்கள் குடிப்பதற்கு அனுமதிச் சீட்டுத் தேடுகிறவர்கள்.

மனிதனை ஏன் சிருஷ்டித்தேனென்று தேவன் மனஸ்தாபப்படும் அளவிற்கு மனிதனது பாவம் பெருகியிருந்த காலத்திலே, அத்தனை ஜனங்களுக்கும் மத்தியிலே “நீதிமான், உத்தமன்” என்று பெயர் வாங்கியவர் நோவா. அவர் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தவர். பூமியிலே தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டு சீர்கெட்டுப்போயிருந்த மனிதர் உட்பட சகல தீமைகளும் அழிக்கப்பட்ட பின்னர் எஞ்சி நின்றவர் இந்த நோவாவே. பூமியிலே ஒரு நல்ல சந்ததியை உருவாக்கும் பெரிய பொறுப்பை சுமந்து நின்றவரும் இந்த நோவாதான். இவர் ஒரு பெரிய கதாநாயகன் என்றும் சொல்லலாம். இப்படிப்பட்ட நோவா என்ன செய்தார். “திராட்ச ரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப்படுத்திருந்தான்.” இது எவ்வளவு துக்கத்துக்குரியது! மொத்தத்தில் பிறர் முன்னிலையில் ஒரு தேவபிள்ளை, தன் சாட்சியை இழந்தார். இந்தக் காரியம் அவரது பிள்ளைகளைத்தான் பாதித்தது.

வெளிநாடுகளில் உணவோடுகூட தண்ணீருக்குப் பதிலாக குடிவகையைப் உபயோகிப்பது வழக்கம். ஆனால், இந்த வழக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள்தான் ஏராளம். “புகைப்பதும் குடிப்பதும் நம்மையும் பிறரையும் பாதிக்கும். அவையிரண்டும் சமூக, ஆன்மீகத் தீங்குகள்” என்று சகோ.ஸ்டான்லி எழுதியுள்ளார். இரவு குடித்துவிட்டு, காலையில் திருவிருந்துக்குப் போய் கை நீட்டுகிறவர்கள் எத்தனை பேர்! எத்தனை துணிவு! இன்று பெண்களும் அந்தப் போதையை நாடுவது அருவருப்பாயிருக்கிறது. மதுபானத்தைப் பாராதே என்று எழுதிய சாலொமோனுக்கு, தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தேவபிள்ளையே, வீண் தர்க்கங்கள் வேண்டாம். “வெறியர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” (1கொரி.6:10). போதை உண்டாக்கும் எல்லாமே மகிழ்ச்சியை அல்ல, இகழ்ச்சியையே உண்டாக்கும். இது தேவைதானா?

ஜெபம்: தூயாதி தூயவரே, சமூக ஆன்மீகத் தீங்குகளை விளைவிக்கிற மதுபானம், புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி துணிகரமான பாவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் விசுவாசிகள் உணர்த்தப்பட, அந்தப் பாவங்களிலிருந்து விடுதலையாக கிருபை செய்தருளும். ஆமென்.