சகோதரி சாந்தி பொன்னு
(மே-ஜுன் 2022)
தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்கு கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான் (அப்.9:10).

சகோதரி சாந்தி பொன்னு
உலகில் பெயர் புகழுடன் வாழவேண்டும், எல்லாராலும் அறியப்பட்டிருக்கவேண்டும், வாழ்வின் உச்சநிலையை அடையவேண்டும் என்றெல்லாம் மனிதன் விரும்புவது இயல்பு, அது தவறும் அல்ல. உலகத்தாரால் நாம் அறியப்பட வேண்டுமென்றால், முன்னிலை மனிதனாக, பிரசித்தி பெற்றவனாக, எதையாவது சாதித்தவனாக, விரும்பப்படத் தக்கவனாக (விரும்பத்தகாதவர்களும் உலகினால் அறியப்பட்டவர்களாக இருக்கிறார்கள்), உயர்நிலை வகிக்கிறவனாக, இன்னும் சொன்னால் ஒரு பெயர்பெற்ற நடிகனாக, பாடகனாக, அல்லது, கிறிஸ்தவ சமுதாயத்தில் ஒரு பிரசித்தி பெற்ற ஊழியனாக, குணமளிக்கும் ஒருவராக, பிஷப்பாக, பெயர்பெற்ற ஒரு ஸ்தாபனத்தின் உயர் தலைவனாக இருந்துதான் ஆகவேண்டும். ஒரு சாதாரண மனுஷனை, அவன் தேவபயமுள்ளவனாக, நற்காரியங்களைச் செய்கிறவனாக, உத்தமனாக வாழுகிறவனாயிருந்தாலும், உலகம் பொதுவாக அவனைத் தன் கணக்கில் வைப்பதில்லை. அதற்காகவே, பலர் பல காரியங்களில் சுயமாகவே ஈடுபாடு செலுத்தித் தம்மை உலகம் அறிந்துகொள்ள முயற்சிப்பதுமுண்டு.
இந்த உலகம் நாளை மாறிப்போகும். ஆனால், என்றும் மாறாத கர்த்தர் என்னைக் குறித்து வைத்திருக்கிற கணக்கு என்ன? கர்த்தருடைய பார்வையில் நான் யார்? உலகத்தைப் பொறுத்தளவில் நான் வெகு சாதாரணமான ஒரு பிரஜையாக இருந்தாலும், உலகத்தாருக்கு நான் ஒன்றுமே இல்லாவிட்டாலும், என் குடும்ப வட்டத்தினுள் நான் ஒரு பொருட்டாக கருதப்படாதவனாக இருந்தாலும்கூட, கர்த்தரைப் பொறுத்தளவில் அவர் என்னை எவ்விதமாக நோக்குகிறார் என்பதே நம்மை நாம் கேட்கவேண்டிய முக்கிய கேள்வி. அதற்கு ஏதாவது தகுதி தராதரம் வேண்டுமா? பெரிய ஊழியனாக வேண்டுமா? பிரசங்கியாக வேண்டுமா? சபையிலே பதவி வகிக்கவேண்டுமா? இவை எதுவும் இல்லையே என்று மனம் சோர்ந்திருக்கிறவர்களும் அநேகர். இந்தக் கட்டுரையைப் படிக்கிற யாராவது இந்த மனநிலையில் சோர்வுற்றிருப்பீர்களென்றால், இன்று கர்த்தர் உங்களுடன் பேசுவாராக!
அவன் வெறுமனே ஒரு சீஷன்
வேதாகமத்திலே அதிகம் பேசப்பட்டிருக்கிறவர்கள் அநேகர்; இவர்களில் தேவனுக்குச் சாட்சியாய் வாழ்ந்தவர்கள் அநேகர்; அதேசமயம் அழிவைச் சந்தித்தவர்களும் உண்டு. அநேக பெண்களின் பெயர்கள்கூட குறிப்பிடப்பட்டுள்ளது, அவற்றுள் சாராளின் பெயர் அதிகமாகப் பதியப்பட்டுள்ளது. மறுபக்கத்தில், பெயர் குறிப்பிடப்படாதவர்களும் அநேகர். மேலும், தேவனுக்குப் பயந்து வாழ்ந்த சிலரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதிகமாகப் பேசப்படாதவர்களுமான அநேகரும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் இந்த செய்தியில் சந்திக்கப்போகிறோம்.
பவுல் தனது மூன்றாவது மிஷனெரிப் பணியை முடித்துக்கொண்டு, எபேசு சபையாரை அழைப்பித்து, விடைபெற்றுக்கொண்டு, தடுத்தும் கேட்காமல் எருசலேமுக்குப் பயணமாகி, அங்கே வந்துசேர்ந்தார். பவுலைத் தேவாலயத்திலே கண்ட சில யூதர்கள் கலகம்பண்ணி, பவுலைப் பிடித்துக் கொலை செய்ய எத்தனித்தபோது, சேனாபதி வந்து பவுலை அவர்கள் கையிலிருந்து மீட்டு, சங்கிலியினால் கட்டி, கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி படிகளில் ஏறினான். அப்பொழுது பவுல் தான் யூதன் என்றும் ஜனங்களுடன் பேசுவதற்கு உத்தரவாக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உத்தரவானபோது, எருசலேமுக்கு வெளியே, கோட்டைப் படிகளிலே நின்றபடி பவுல் பெரிய பிரசங்கம் செய்யவில்லை; மாறாக, தனது சாட்சியையே தெளிவாகவும் விரிவாகவும் பகிர்ந்து கொண்டார். எபிரெயு பாஷையில் பவுல் பேசிய தால் ஜனங்களும் அமைதலாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். தனது முந்திய வாழ்வு எப்படியிருந்தது என்றும், வைராக்கியமுள்ள யூதனாக கிறிஸ்தவ மார்க்கத்தாரைக் கட்டியிழுத்து வரும்படிக்கு தமஸ்குவுக்குத் தான் பிரயாணம் மேற்கொண்டதையும் கூறி, தமஸ்குவைச் சமீபித்தபோது, மத்தியான வேளையிலே சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி தன்னைச் சுற்றிலும் பிரகாசித்தது என்று தனக்கு நேரிட்டதைப் பவுல் சாட்சியாக அறிவித்தார். மேலும், தனக்கும் கிறிஸ்துவுக்கும் நடந்த சம்பாஷணையையும், அந்த மகிமையான ஒளியைக் கண்டதினால் பார்வையற்றவனாகி தமஸ்குவுக்கு வழி நடத்தப்ட்டதையும் கூறிய பவுல், தமஸ்குவில் தான் தங்கியிருந்த போது தன்னை வந்து ஒருவர் சந்தித்ததாகக் கூறுகிறார். இவர்தான் அனனியா.
அனனியா என்ற பெயரில் ஏறத்தாழ பத்துப் பேர்கள் வேதாகமத்திலே குறிப்பிடப்பட்டிருந்தாலும், நாம் கவனிக்கப்போகின்ற அனனியா என்பவர் அப்.9:10-17, 22:12 ஆகிய இரண்டு இடங்களில் மாத்திரமே குறிப்பிடப்பட்டவராவார். இவரைக் குறித்து,”வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சி பெற்றவனுமாகிய “அனனியா என்னும் ஒருவன்” (அப்.22:12) என்று பவுலடியார் அற்புதமான சாட்சி ஒன்றைக் கூறியுள்ளார். “அனனியா என்னும் ஒருவன்” என்பதைக் கவனிக்கவும். இந்த அனனியாவை முதன்முதலாக அப்போஸ்தலர் 9ஆம் அதிகாரத்தில் நாம் சந்திக்கிறோம். இந்த முதல் அறிமுகத்தில், “அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன்” என்று மாத்திரமே இவர் குறிப்பிடப்படுகிறார். என்ன அருமையான அறிமுகம்! இவர் ஒரு சாதாரண சீஷன் மாத்திரமே! ஒரு அப்போஸ்தலர் என்றோ, தீர்க்கதரிசி, பாஸ்டர், சுவிசேஷகர், போதகர் என்றோ இவர் அறிமுகப்படுத்தப்படவில்லை. தமஸ்குவில் அவர் ஏதாவது பதவியில் இருந்தாரா என்பதுவும் தெரியவில்லை. ஒரு பெரிய வேலைக்காக அனுப்புவதற்கென்று கர்த்தர் இந்த அனனியாவை அழைக்கவுமில்லை. இவர் “ஒரு சீஷன்”, இயேசுவைப் பின்பற்றுகின்ற ஒரு சீஷன் மாத்திரமே.
ஆயத்தமாயிருந்த அனனியா
வெறுமனே ஒரு சீஷனாயிருந்தவனை தன் பணிக்குப் பயன்படுத்த விரும்பிய கர்த்தர், அவனை எப்படி அணுகினார் என்பது முக்கிய விஷயம். ஆம், கர்த்தர், அனனியாவுக்குத் தரிசனமாகி, அவனுடன் பேசினார். ஒரு சாதாரண சீஷனுக்கு கர்த்தர் தரிசனமானார் என்றால் அது எவ்வளவு ஆச்சரியம்! மாத்திரமல்ல, “அனனியாவே” என்று பெயர் சொல்லியே கர்த்தர் அழைத்தார். அனனியாவும், “ஆண்டவரே, இதோ அடியேன்” என்கிறான்.
கர்த்தர் தம்முடைய ஒவ்வொரு பிள்ளையையும் அறிந்திருக்கிறவர் என்பது ஒன்று; அடுத்த முக்கிய விஷயம், கர்த்தருடைய குரலை அடையாளங் காணவும், குரல் கேட்டதும், “ஆண்டவரே” என்று அடிபணியவும் அனனியா அறிந்திருந்தான் என்றால், கர்த்தரோடு அவன் கொண்டிருந்த உறவு எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பது நமக்கு மிகவும் முக்கியம். “அனனியா” என்று அழைத்த கர்த்தர், “நீ கர்த்தருக்குப் பயப்படுகிறவன், என் சித்தம் செய்கிறவன்” என்று எந்தவொரு முகவரியும் கொடுக்கவில்லை; நேரிடையாகவே அவனுக்கான பணியை அறிவிக்கிறார்; அப்படியானால் எந்த நேரமும் கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்ற ஆயத்தமாயிருந்த ஒரு பாத்திரமாகவே இந்த அனனியா காணப்பட்டான் என்பது தெளிவு.
பிரியமானவர்களே, இந்த செய்தியை எழுதிக் கொண்டிருந்தபோது, ஒரு தேவஅடியான் அனுப்பிய ஒரு சிந்தனை என்னிடம் வந்து சேர்ந்தது. அது இதுதான்: “தேவன் பரிபூரணமுள்ள பாத்திரங்களையல்ல; அர்ப்பணிப்புள்ள ஆயத்தமுள்ள பாத்திரங்களையே தேடுகிறார்.” ஆம். கர்த்தருக்குக் கீழ்ப்படிந்திருப்பதற்கு, கிறிஸ்துவின் சீஷனாயிருப்பதற்கு நமக்கு எந்தவித விசேஷித்த வரங்களோ, பதவிகளோ, தகுதிகளோ அவசியமே இல்லை. “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்றார் இயேசு. நாம் தேவனுடைய பிள்ளைகளென்றால், அவர் நமது கவனத்தை ஈர்க்க விரும்பும் போதெல்லாம் அதை உணருகின்ற உணர்வு, அதற்கான ஆயத்தம் நம்மிடம் உண்டா என்பதே முக்கியம். நாம் தேவனுடைய பிள்ளைகளாக, இயேசுவின் சீஷராக, அவரை மாத்திரமே பிரியப்படுத்தி, அவருடைய சத்தத்துக்குச் செவிசாய்க்க எந்த நேரத்திலும் ஆயத்தமாய் இருப்போமானால், நம்மைக்கொண்டும் கர்த்தர் தமது காரியங்களை நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
கர்த்தரும் அனனியாவும்
“ஆண்டவரே” என்று அழைத்த அனனியா, தன்னை அழைத்தவரின் ஆளுமையை அனு பவிக்கின்ற ஒருவனாக வாழ்ந்தான் என்பது தெளிவு. அடுத்தாற்போல், “இதோ அடியேன்” என்கிறான். கர்த்தர் என்ன சொன்னாலும் அதை நிறைவேற்றுகின்ற கர்த்தரின் அடிமையே தான் என்று அறிக்கை பண்ணுகிறான். கர்த்தரும், உட னடியாகவே,”நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப் போய், யூதாவின் வீட்டிலே தர்சு பட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்” என்றும்,”அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான்” என்றும் கர்த்தர் துல்லியமாகவே விளக்கி, அந்தப் பணியைக் கொடுக்கிறார்.
கர்த்தர் சொன்னார் என்றால் புறப்பட வேண்டியதுதானே அவன் கடமை. ஆனால் அனனியாவோ, முதலில் “ஆண்டவரே” என்று அழைத்து, கர்த்தருடைய ஆளுமையை மறுபடியும் அறிக்கை பண்ணிவிட்டு, தனது மனதிலுள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்துகிறான். தான் என்ன செய்யவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்பதைத் தெளிவாக அறிந்தும், அதைச் செயற்படுத்துவதிலுள்ள தனது தயக்கத்தையும், பிரச்சனையையும் அனனியா வெளிப்படையாகக் கூறுகிறாரே, இந்தத் துணிவு எப்படி வந்தது? “ஆண்டவரே, இந்த மனுஷனைத் தெரியாதா? இவன்தானே உமது பரிசுத்தவான்களை எருசலேமில் வேதனைப் படுத்தியவன். இங்கேயும் உமது பிள்ளைகளைக் கட்டி இழுத்துப்போகத்தானே வந்திருக்கிறானே. இவனுக்குப் போய், கண்களுக்குப் பார்வையா?” அனனியா தன் மனதிலுள்ளதைக் கொட்டி விடுகிறான். கர்த்தரோ கோபப்படவே இல்லை. மாறாக, சவுலின்மீது தாம் வைத்திருக்கும் திட்டத்தைத் தெளிவுபடுத்தி, “நீ போ” என்கிறார். ஆம், கர்த்தர், அனனியாவை நன்கு அறிந்திருந்தார்.
கர்த்தருடைய திட்டத்தை அறிந்திருந்தும், அதைச் செயற்படுத்தமுடியாமல் நாம் தடுமாறுவதற்கு முக்கிய காரணம் பயம்! அனனியாவுக்கும் பவுலைக் குறித்து ஒரு பயம் இருந்தது. நியாயாதிபதிகள் புத்தகத்தில் சந்திக்கும் கிதியோனுக்கு, தான் பலமற்றவன் என்ற பயம் இருந்தது. யோனாவோ, கர்த்தர் என்ன செய்வார் என்பதை அறிந்தவனாக, பயந்து வேறுபாதையில் ஓடினான். தேவனுடைய பணியை அவர் சொன்னபடி செய்யும்போது நமக்கு என்னென்ன அவமானம் அவதூறு ஏற்படும் என்று கணக்கிடும்போதுதான் நம்மைப் பயம் தடுக்கிறது. பயத்தைத் தவிர வேறு காரணங்களும் உண்டு.
ஆனால் அனனியாவோ, தன் மனதிலுள்ளதை, தன் தயக்கத்தை, தன் பயத்தை நேரடியாகவே கர்த்தரிடம் எடுத்துக்கூற தயங்கவுமில்லை, எதையும் மறைக்கவுமில்லை. கர்த்தரிடம் தன் மனதிலுள்ளதைத் திறப்பது தனக்கு அளிக்கப்பட்ட தனிச்சுதந்திரம் என்று உணர்ந்திருந்தான். ஆகையால்தான் கர்த்தருடன் பேசினான். இது அவனுடைய வாக்குவாதம் அல்ல; ஏனெனில், கர்த்தருடைய ஆளுமையை அறிக்கை பண்ணி, அவரைக் கனப்படுத்திவிட்டே பேசினான். இந்த சம்பாஷணையானது, கர்த்தருக்கும் அனனியாவுக்குமுள்ள நெருக்கமான உறவை எடுத்துக்காட்டுகிறது.
73ஆம் சங்கீதத்தைப் பாடிவைத்த ஆசாபின் சங்கீதத்திலும், ஆசாபின் இப்படிப்பட்ட மனநிலைமையையே காண்கிறோம். துன்மார்க்கர் செழித் தோங்குவதைக் கண்ட ஆசாப், “நான் விருதாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்” என்று புலம்புகிறார். ஆனால், கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்துள் பிரவேசித்து, கர்த்தருடைய கண்ணோட்டத்தில் தனது பார்வையை நிலைநிறுத்தி பார்த்தபோது, “…நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்” என்கிறார்.
தம்முடன் நல்லுறவில் நாம் இருக்கவேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம்; ஆனால் அதே சமயம் அவர் ஆண்டவர் என்பதை நாம் மறக்கவும் கூடாது; அவருக்குக் கொடுக்கவேண்டிய கனத்தையும் மகிமையையும் செலுத்த ஒருபோதும் தவற வும்கூடாது. தேவ சந்நிதியில் நமது மனதை உள்ளது உள்ளபடி திறக்கும்போது, நமது எந்தக் குழப்பநிலைக்கும் தேவையான அமைதியையும் சமாதானத்தையும் தர அவர் ஆவலாயிருக்கிறார்.
கீழ்ப்படிந்த அனனியா
அனனியாவுடன் கர்த்தர் பேசி, காரியங்களை விளங்கவைத்தபோது, உடனேயே அவன் செயற்பட்டான். அனனியா போய் வீட்டுக்குள் பிரவே சித்து, சவுலின்மேல் கையை வைத்து, “சகோதரனாகிய சவுலே” என்கிறான். இந்த வாழ்த்து நிச்சயம் சவுலைத் திடுக்கிடச் செய்திருக்கும். “உனக்குத் தரிசனமானவரே என்னை உன்னிடத்தில் அனுப்பினார்” என்று அனனியா தன்னை அறிமுகப் படுத்தியதும் பவுலுக்கு ஆச்சரியமாயிருந்திருக்கும். பார்வையற்றிருந்த சவுலின் கண்களிலிருந்து செதில்கள் விழுந்து கண்கள் பார்வை பெற்றபோது, இனியும் சவுலினால் சிந்தித்துக் கொண்டிருந்திருக்க முடியாதிருந்திருக்கும். “தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று” பிரசங்கிக்க ஆரம்பித்தபோது, இந்தக் கிறிஸ்தவர்களே தன்னை நம்பமாட்டார்களே என்ற தயக்கம்கூட சவுலுக்கு இருக்கவில்லை.
இனி சவுலுக்கு யூத வாழ்த்துதல் இல்லை; பரிசேய கூட்டுறவும் இல்லை. சனகரிப் சங்கத்தின் பதவியும் இலலை. கர்த்தருக்குள் ஒரு புதிய மனிதனாக, கர்த்தருடைய பிள்ளைகளின் சகோதரனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு புதிய வாழ்வுக்குள் சவுல் கடந்துவந்திருந்தார். பின்னால் உலகத்தைக் கலக்கப்போகிற, உலகின் கடைசிவரை பேசப் படவிருந்த வல்லமைமிக்க நிருபங்களை எழுத கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவர்தான் இந்த சவுல் என்பதை சவுலோ அல்லது அனனியாவோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஒரு மனுஷனைத் தூக்கிவிட்டு, ஞானஸ்நானம் கொடுத்து, பரிசுத்தாவியானவரின் நிரப்பு தலுக்குள் வழிநடத்தி, கிறிஸ்துவுக்குள்ளான குடும் பத்தின் சகோதரனாக வழிநடத்த கர்த்தர் தெரிந்தெடுத்தது “வெறுமனே ஒரு சீஷனை” என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
அதிலும், கர்த்தருடைய பிள்ளைகளைத் துன்புறுத்துகிறவன் என்று அறியப்பட்டவனை, “முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய் மொழியைக் கேட்கவும், அவருக்கே சாட்சியாயிருக்கவும் கர்த்தர் அழைக்கிறார்” என்ற செய்தியை சவுலுக்கு அறிவித்தவனும் இந்த அனனியாவே. மாத்திரமல்ல,”நீ போ, அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரம் இவனே” என்றும், “அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றும் கர்த்தர் கூறியவுடனேயே, எந்தத் தாமதமுமின்றி அனனியா உடனே எழுந்து போய், கர்த்தர் பணித்த பணியை செவ்வனே செய்தானே, இந்தக் கீழ்ப்படிதலுள்ள சிந்தைதான், அனனியா ஒரு சாதாரண சீஷனாக இருந்தாலும், ஒரு மிஷனெரியை எழுப்பி, அனுப்புவதற்கு அனனியாவைத் தகுதிப்படுத்தியிருந்தது. கர்த்தர் இந்த ஒரு சாதாரண சீஷனைத்தான் இதற்குத் தெரிந்தெடுத்திருந்தார். இது இன்று நம்மைச் சிந்திக்கவைக்கட்டும்.
இன்று நான் யார்?
“நான் ஒரு தகுதியுமற்ற சாதாரணமான ஒருவன்தானே” என்ற மனப்பான்மையை மாற்றிக்கொள்வோம். உலகமோ, சபையோ என்னைக் கணக்கில் வைக்கவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் வேண்டாம். உண்மைத்துவமும் கீழ்ப்படிதலுமுள்ள சிந்தையும், எனக்குரிய சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவைப் பின்பற்றுகின்ற சீஷத்துவமும் இருக்குமானால், கர்த்தருடைய கண்கள் நம்மை நோக்குவதற்கு வேறெந்த தகுதி தராதரமும் அவசியமே இல்லை.
அடுத்ததாக, எதையும் மறைக்காமல், மனதின் உணர்வுகளையும் சிந்தனைகளையும் உள்ளது உள்ளபடியே கர்த்தரிடத்தில் எடுத்துச்செல்லத் தயக்கமற்ற, ஒளிவு மறைவற்ற தூய இருதயம் இருந்தாலே, கர்த்தர் தமது சித்தத்தை நமக்கு அறியத்தருவதற்கு, அது போதுமானது.
மேலும், அன்று சவுலுக்குரிய பணியை அறிவிக்க வெறுமனே ஒரு சீஷனான அனனியா, அழைக்கப்பட்டான். இன்று கர்த்தராகிய கிறிஸ்துவே தமது பணியை நமக்குக் கட்டளையாகவே கொடுத்திருக்கிறார். நாம் பவுல் அல்ல; ஆனால், கர்த்தர் நம்மில் கொண்டிருக்கிற நோக்கம் திட்டம் மேலானது என்பதில் சந்தேகம் வேண்டாம். கர்த்தருடைய அழைப்பின் குரலை உணரக்கூடிய அன்பின் ஐக்கியமும், அவரது கட்டளையை நிறைவேற்றும் கீழ்ப்படிதலும் இருக்குமானால் எழுந்து, புறப்பட்டுப்போய், காண்கிறவர்கள் கடந்துபோகிறவர்கள் யாவருக்கும் தடையின்றி சுவிசேஷத்தை அறிவிக்க நமக்கு என்ன தடை! “வெறுமனே நான் ஒரு சீஷன்தான்; ஆனால் விலைமதிக்க முடியாத கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட பெறுமதியான சீஷன்” என்பதை நாம் ஒவ்வொரு வரும் மறக்கக்கூடாது. எழுந்து செல்லுவோம். ஆமென்.