பேராசிரியர் S.C.எடிசன்
(மார்ச்-ஏப்ரல் 2022)

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் (யோவான் 11:25).


பேராசிரியர் S.C.எடிசன்

இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் சத்திய வசன நேயர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். இருக்கிறவராகவே இருக்கிறேன்! (I am That, I am) புதிய ஏற்பாட்டிலே இயேசுகிறிஸ்து நானே, என்று சொன்ன அநேக காரியங்களை பார்த்து வருகிறோம்.

இயேசு சொன்னார்: நானே உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன். நானே வாசல், நானே நல்ல மேய்ப்பன் என்று பிதாவை வெளிப்படுத்தும் வண்ணமாக தான் எப்படிப்பட்டவர் என்பதை இயேசு அந்த யூதர்களுக்கும், நமக்கும் அவர் சொல்லிக்காட்டுகிறார். “நானே” என்றால் நான் தேவனாய் இருக்கிறேன் என்று சொல்வதற்கு அர்த்தமாகும். அதிலே வல்லமை உண்டு. கெத்செமனே தோட்டத்தில் இயேசுவை பிடிக்கவந்தவர்கள், தீவட்டிகளோடும் தடிகளோடும் வந்தனர். இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார் (லூக்.18:4). அவர்கள் இயேசுவைத் தேடுகிறோம் என்றனர். அதற்கு இயேசு: “நான்தான்” என்றார். அப்படியே அவர்கள் அனைவரும் கீழே விழுந்துவிட்டனர். எனவே இயேசுகிறிஸ்து கூறிய “நானே” என்பது தேவனுடைய வல்லமை நிறைந்த வார்த்தையாக இருக்கிறது.

யோவான் 11ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள சம்பவம் நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். மார்த்தாள், மரியாள் ஆகியோரின் சகோதரன் லாசரு மரித்துப்போனான். நான்கு நாட்களுக்கு அப்புறம் இயேசு யூதேயாவுக்கு திரும்பிவருகிறார், மார்த்தாள், மரியாள் வீட்டிற்கு இயேசு வரும்போது மார்த்தாள் அவருக்கு எதிர்கொண்டு ஓடி வருகிறாள். ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால், என் சகோதரன் மரித்திருக்க மாட்டான் என்று இயேசுவிடம் கூறுகிறாள். அதற்கு இயேசு உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்று சொல்லுகிறார். அந்நேரத்தில் மார்த்தாள், உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் என் சகோதரனும் எழும்புவான் என்பது எனக்குத் தெரியும் என்று கூறினாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள் (யோவான் 11:25-27).

சகோதரனே! சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த அவர் இன்றைக்கும் ஜீவிக்கிறவராயிருக்கிறார். இது மறுக்கப்படாத ஒரு உண்மையாகும். இது ரோம அரசாங்கத்தால் நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை!

இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்ததினால் நமக்கு என்ன பலன்? ஒன்றை இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமக்கு தெளிவாகக் காட்டி யது. உயிர்த்தெழுந்த பின் 40 நாட்கள் தன்னை உயிரோடிருக்கிறவராக அநேகருக்கு தன்னை உயிருள்ளவராக காண்பித்து, அவர்களோடு பேசினார், அவர்களோடு போஜனம் பண்ணினார், அவர்களைத் திடப்படுத்தினார். ஆகவே அவரை கண்டு தரிசித்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும், ஒரு நிச்சயம் உண்டானது. அது என்னவென்றால், மரணம் முடிவல்ல! மனிதன் கல்லறையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான், கல்லறையோடு அவனுடைய வாழ்க்கை முடிந்தது என்று இந்த உலகத்தார் சொல்லுவதுண்டு. ஆனால், அவ்வாறு இல்லை, இயேசுவின் உயிர்த்தெழுதலானது மரணம் ஒரு முடிவல்ல; அதுவொரு வாசல் என்ற உண்மையை இந்த உலகத்திற்குக் காண்பித்தது. மறுமை வாழ்விற்குள் நம்மை அழைத்துச்செல்லும் ஒரு வாசல்தான் இந்த மரணம் என்பதை இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமக்குப் போதிக்கிறது, நமக்கு காட்டுகிறது, நமக்கு சாட்சியிடுகிறது.

அப்படியென்றால், மரித்த பின்னதாக, பூமியிலே புதைக்கப்பட்டு அப்படியே அழிந்து போக மாட்டோமா? நமது சரீரம் மரிக்கும்பொழுது, நமது ஆவி ஆத்துமாவும் தேவனிடத்திற்கு செல்லுகிறது. லாசரு-ஐசுவரியவான் சரித்திரத்திலே, ஐசுவரியவான் ஆபிரகாமை அடையாளம் காண்கிறான், அப்படியென்றால் அவனும் மரித்தபின்னதாக, உயிரோடுதான் இருக்கிறான். அவனுடைய ஆவியும் இளைப்பாறிக் கொண்டுதான் இருக்கிறது. அவனை அடக்கம் பண்ணின அந்த இடத்திலே அவனுடைய சரீரம் புழுக்கள் தின்று அழிந்து போயிற்று, ஆனாலும், அவனுடைய ஆவி உயிரோடு இருக்கிறது. அந்த ஆவியிலே அவன் வேதனைப்படுகிறான்.

சகோதரனே, லாசருவும் உயிரோடிருந்தான், ஆனால், அவன் ஆபிரகாம் மடியிலே தேற்றப்படுகிறான். ஐசுவரியவானோ நரகத்தில் வேதனைப்படுகிறான். நமது மரணத்திற்கு பின்பதாக ஒரு வாழ்க்கை உண்டு என்பதை இந்த லாசரு-ஐசுவரியவான் நிகழ்வு தெளிவாக நமக்குக் காண்பிக்கிறது.

ஒரு மாணவனை சந்தித்தபொழுது, உன் வாழ்க்கையிலே நீ என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவன்: சார், நான் பி.எஸ்.சி படிக்கிறேன், அதற்கு அடுத்து M.Sc படிக்கணும். அதற்கு அப்புறம் ஏதாவது ஒரு வேலையைத் தேடணும். அதற்கு அப்புறம் என்ன வென்று கேட்டதற்கு எனக்கு கலியாணம் கட்டி வைப்பாங்க, அதற்கு அப்புறம் எனக்கு பிள்ளைகள் பிறக்கும், அந்த பிள்ளைகளை நான் வளர்க்கணும், அதற்கு அப்புறம் என்று கேட்டதற்கு அவன் யோசித்தான். அதற்குபின் ஒருநாளில் நான் மரித்துப்போவேன்; அதற்கு அப்புறம் என்ன இருக்கு? அதற்கு அப்புறம் ஒன்னுமே இல்லையென்றான்? மரணத்திற்குப் பின்புதான் நீடிய வாழ்வு உண்டு என்பதை அவன் அறியவில்லை. அந்த முடிவில்லாத வாழ்வை நித்திய ஜீவன் என்று அழைக்கிறோம். நித்திய வாழ்வு என்பதில் இரண்டு விதம் உண்டு, ஒன்று, ஐசுவரியவான் அனுபவித்த வேதனையான இடமாகும். இரண்டாவது, லாசரு அனுபவித்த அந்த சந்தோஷமான இடமான தேற்றப்படுகிற இடமாகும். இதைத்தான் நாம் மோட்சம், நரகம் என்று சொல்லுகிறோம்.

கடைசி உயிர்த்தெழுதலில் நாம் உயிர்த்தெழுந்த பின்னதாக ஒன்று நாம் மோட்சத்தில் இருப்போம், அல்லது நரகத்தில் இருப்போம். இதைத்தவிர நமக்கு வேறொரு இடமுமே கிடையாது. பிரசங்கி 8:8இன்படி ஆவியை விடாதிருக்க, மரணத்தின்மேல் ஒருவனுக்கும் அதிகாரம் கிடையாது. நான் சாகாமல் இருக்க ஆவி எப்போதும் என் உடலுக்குள்ளேதான் இருக்கு மென்று ஒருவரும் சொல்லவே முடியாது. அதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. தேவனுக்குத்தான் அந்த அதிகாரம் உண்டு. ஒருவனும் என் உயிரை எடுத்துக்கொள்கிறதில்லை, நானே அதைக் கொடுக்கிறேன், மறுபடியும் நானே அதை எடுத்துக்கொள்ளவும் செய்கிறேன். பிதா எனக்கு இந்த அதிகாரத்தை கொடுத்திருக்கிறார் என்றார் இயேசு.

அன்பானவர்களே, நம்முடைய மரணத்தின் மேல் நமக்கு அதிகாரம் கிடையாது. என்றைக்கு நம்மை மரணம் சந்திக்கிறதோ, அன்றைக்கு நாம் போய்தான் ஆகவேண்டும். எங்கே போகப் போகிறோம் என்பதுதான் கேள்வி? யோசித்துப்பார்ப்போம், இந்தப் பூமியிலுள்ள வாழ்க்கை எப்படிப்பட்டது? ஒருவனுடைய வாழ்வு 70 வருடங்கள், பெலத்தின் மிகுதியால் 80 வருடங்களாய் இருந்தாலும், அதில் மிகுந்த வேதனையும், சஞ்சலமும்தான் இருக்கும். ஒருவேளை மிஞ்சி போனால் 100 வருடங்கள்கூட இருப்போம். அதற்கு அப்புறம், நாம் எல்லாருக்கும் ஒரு முடிவில்லாத வாழ்க்கை உண்டு. ஒருநாளில் நாம் அனைவரும் உயிர்த்தெழுவோம், இயேசுவுக்கு முன்னால் நியாயத்தீர்ப்படைய நிற்போம். தன்னை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கும் விசுவாசியாதவர்களுக்கும் அவர் நியாயத்தீர்ப்பளித்து நரகத்தில் தள்ளுவார்.

தன்னை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்களை, பரலோகத்திற்கு அழைத்துச்செல்வார். இது நிச்சயம் நடக்கும், அதனால்தான் வேதம் ஒரேதரம் மரிப்பதும், நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லுகிறது. அப்படியென்றால் நான் உயிர்த்தெழுந்ததற்கு பின்பு, எனக்கு மரணமே கிடையாதா? கிடையாது. இந்த மார்த்தாளின் சகோதரன் லாசருவை உயிரோடு எழுப்பினாரே, அது உயிர்த்தெழுதலா? இல்லை. அவனுடைய ஜீவனைக் கொடுத்தார் அவ்வளவுதான். அவனும் மறுபடியும் மரித்தான்.

சகோதரனே, இன்றைக்கும் ஒரு சிலர் மருத்துவப்படி செத்துவிடுகின்றனர். ஆனால், அடக்கம் பண்ணும் முன்னதாக உயிரோடு எழுந்து வருகிற சம்பவங்களைக் கேட்கிறோம். இது உயிர்த்தெழுதல் அல்ல. இறுதியிலே இயேசுவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்பதற்காக நாம் அனைவரும் எழுப்பப்படுவோம். அதுதான் உயிர்த்தெழுதல்! நமது உடல்தான் அழுகிப்போயிற்றே, கல்லறையில் ஒன்றுமே இல்லையே, எப்படி நான் அங்கே வந்து நிற்பேன். எல்லாருக்கும் ஒரு அழிவற்ற சரீரம், அதாவது மகிமையுள்ள சரீரம் கொடுக்கப்படும். கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், கனமுள்ளதாய் எழுந்திருக்கும், அப்படியென்றால் நரகத்தில் ஒருவன் இந்த அழிவில்லாத சரீரத்தோடு போகிறான். அங்கே அக்கினியும் கந்தகமும் எரிகிறது, அதற்குள் இவன் கிடந்தால், இவன் என்னத்தைத் தேடுவான், சாவைத் தேடுவான். நான் செத்து இந்த வேதனை முடியணும் என்று நினைப்பான்; ஆனால் அதுதான் அங்கு நடக்காது. அந்த ஆவியின் சரீரம் அழியவே அழியாது. வேதனை ஒழியவே ஒழியாது. இவ்வளவு கொடுரமான வேதனைக்குள், போகவா நீங்கள் இப்பொழுது வாழுகிறீர்கள்?

அந்த மறுமையின் வாழ்விற்கு தற்போது நாம் வாழும் இந்த வாழ்வு ஒரு ஆயத்த வாழ்வாகும். ஆகவே, அந்த உயிர்த்தெழுதலின்போது நீங்கள் தேவனுடைய பக்கத்தில் நிற்கவேண்டும். அப்பொழுதுதான் நித்திய நித்தியமாய் சந்தோஷமாய் நான் வாழமுடியும் என்ற நம்பிக்கை நமக்கு வரும். ஆகையால் இந்த வாழ்க்கையில் இருக்கும் போதே நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து அவர் நம் பாவங்களுக்காக இரத்தம் சிந்தி, சிலுவையில் மரித்தார் என்பதை விசுவாசிக்கவேண்டும். என் பாவங்களுக்காக மரித்தார் என்பதை விசுவாசித்து, அவரிடத்தில் மன்னிப்பு கேட்பவர்களுக்கு பாவமன்னிப்பை அருளுகிறார். இதுதான் இரட்சிப்பு! இந்த இரட்சிப்பு நம்மை நரகத்திலிருந்து பாதுகாத்து, பரலோகத்திற்கு கொண்டுசெல்கிறது.