• சகோதரி சாந்தி பொன்னு •
(மே – ஜுன் 2023)

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; … அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், …நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது (2தீமோத்.3:16,17).

சகோதரி சாந்தி பொன்னு

உலகப்புகழ்பெற்ற எழுத்தாளரும், ஆடை அலங்கார வடிவமைப்பாளருமாகிய கிறிஸ்டா ரொட்றிகுயிஸ் என்ற பெண்மணி, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மரிப்பதற்கு முன்னதாக எழுதிய கட்டுரையில், தன்னிடம் இருந்த, இருக்கிற செல்வச்செழிப்புகள் யாவையும் விபரித்து, இவை எதுவும் தனது வியாதிக்கு உதவவில்லை என்று எழுதிவிட்டு, இறுதியில் பெறுமதிமிக்க என் செல்வம் பணம் புகழ் எதுவும் என் வலியிலிருந்து எனக்கு விடுதலை கொடுக்கவில்லை; வாழ்வின் உண்மையான அர்த்தமே நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவும், அவரைச் சேவிக்கும் பணியுமேயாகும் என்றும், இயேசுவே எல்லாக் கேள்விகளுக்கும் பதிலாக இருக்கிறார் என்றும் தன் கட்டுரையை முடித்துள்ளாராம். இவர் தனது வாழ்வின் இறுதியிலாவது இதை உணர்ந்து கொண்டார். ஆனால் பவுலடியார், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அது மாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் (பிலி.3:7,8) என்று தான் வாழும்போதே எழுதி விட்டார். நமது காரியம் என்ன?

ஆம், தேவனைத் தேடுவதும், தேவனை அறிகிற அறிவைப் பெற்றுக்கொள்வதும், நமது இயலாமையை உணர்ந்துகொள்வதும், மன்னிப்பைப் பெற்றுக்கொண்டு நமது வாயின் வார்த்தைகளையும் இருதயத்தின் தியானத்தையும் தேவனுக்குப் பிரீதியாகக் காத்துக்கொள்வதும் அல்லாமல் நமக்கு வேறென்ன வேண்டும்?

19ஆம் சங்கீதம்

இந்த சங்கீதம் தாவீதினால் பாடப்பட்ட ஒரு அருமையான சங்கீதம் (எல்லாமே அருமை தான்). இது ஒரு தியானப் பாடல் என்றால் மிகையாகாது. தாவீதின் தியானம் தேவனுடைய சிருஷ்டிப்பில் ஆரம்பித்து, வார்த்தைக்கூடாகச் சென்று, தன்னுடைய சொந்த பாவநிலைக் கூடாகக் கடந்து, இரட்சிப்பில் முடிகிறது.

இந்த சங்கீதத்தின் தியானத்தை நாம் அதன் இறுதி வாக்கியத்திலிருந்து ஆரம்பிப்போமா? முதலில் ஒரு கேள்வி. நமக்குள் எழுகின்ற ஒவ்வொரு சிந்தனையையும், வாயில் புறப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் தேவன் ஆராய்ந்து சோதித்துப்பார்க்கிறார் என்ற உணர்வு நமக்கு உண்டா? இந்த உணர்வு தோன்றுமானால், ஒரு உத்தம கிறிஸ்தவன் தன் வாழ்வை மாற்றியமைக்காமல் இருக்கமாட்டான். இந்த சங்கீதத்தை தாவீது முடிக்கும்போது, என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே! என்று கர்த்தரை அழைக்கிறார். கன்மலை, அது அசைக்கப்பட முடியாதது; மீட்பர், ஆம், கர்த்தரைத் தவிர தன் பாவ நிலையிலிருந்து விடுதலை தர யாருக்கும் முடியாது என்பதை தாவீது அறிக்கை பண்ணுகிறார். இதன் பின்னர் என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக என்று சங்கீதத்தை முடிக்கிறார்.

நாம் சிந்திக்காமலே வாய் வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறோம். இருதய சிந்தனையோ நமது கட்டுப்பாட்டையும் மிஞ்சி சிறகு அடித்து எட்டாத தூரத்துக்குப் பறந்துவிடுகிறது. பின்னர் காரியங்கள் கெட்டுவிட்டது என்று அறியவரும்போது, எதையும் சரிப்படுத்த முடியாத அளவுக்கு காலமும் கடந்து போயிருக்கும். இதுதான் இன்று நமது அடிப்படைப் பிரச்சனை. மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்.12:36) என்று இயேசு தாமே கூறியுள்ளார். மாத்திரமல்ல, இருதயத்தின் நிறைவினால்தான் நமது வாய் பேசும்; எது பானைக்குள் இருக்கிறதோ அதுவேதான் அகப்பையில் வரும் என்பார்கள். அதுதான் உண்மை.

இன்று, முக்கியமாக குடும்பங்களுக்குள், தனிப் பட்ட உறவுகளுக்குள் பிரிவினைகளும் துரோகங்களும், குரோதங்களும் எழும்புவதற்கு முக்கிய காரணம் வாயின் வார்த்தைகள்தான்! ஆனால் அதன் உற்பத்தி இருதயத்தின் சிந்தனை என்பதை மறுக்கமுடியாது. ஆக, நமது வாயின் வார்த்தைகள் சுத்தமாயிருப்பதும், இருதய சுத்தமும், அதன் சிந்தனைகளில் பரிசுத்தமும் உண்டாயிருப்பதுவும் மிகவும் அவசியம். ஒரு வார்த்தையை வெளியே விட்டுவிட்டால் போதும், அதன் தாக்கத்தை நம்மால் தடுத்து நிறுத்தவே முடியாது. ஒருதடவை, “உடையிலும் சாட்சி வேண்டும்” என்று பேச்சுவாக்கில் நான் கூறிய ஒரு வார்த்தை, எனக்கு எதிராகவே திரும்பி, என்னைக் குத்திக் குதறிவிட்டது.

நமது வாயின் வார்த்தைகளின் ஆரோக்கியத்தையும், இருதயத்தின் தியானத்தின் பரிசுத்தத்தையும் நாம் அடிக்கடி இழந்துவிடுவது ஏன்? இதற்கு ஒரே பதில், நாம் யார்? எங்கிருந்து வந்தோம்?˜ எதற்காக இப்பூமியில் வாழுகிறோம்?˜ நமது படைப்பாளி யார்? அவருக்கும் நமக்கும் உள்ள நெருக்கம் என்ன? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் தேட அநேகமானவர்கள் முயலுவதுமில்லை; அதற்கேற்ப தமது வாழ்வை அமைப்பது மில்லை, முக்கியமாக தங்களை மாற்றிக்கொள்ள விரும்புவதுமில்லை.

குற்றம் பேசும் நமது நாவும், மன்னிக்கும் தயை பெருத்த தேவனுடைய வார்த்தையும் சந்திக்கும் போது என்னவாகும்? ஆக, நம்மை உணர்ந்துகொள்ளவும், உறவுகளைக் கெடுத்துப் போடுகின்ற நமது வாயின் வார்த்தைகளையும் நம்மையே கெடுத்துப்போடுகின்ற நமது இருதயத்தின் சிந்தனைகளையும் கர்த்தருக்கு ஏற்புடையதாகவும் சுத்தமாகவும் காத்துக்கொள்ளவும், நம்மையும் பிறரையும் மகிழ்விக்கவும் ஒரே வழி, கர்த்தருடைய வேதமே அன்றி வேறு எதுவுமே உதவாது. நமது தேவன் யார் என்பதை நமக்கு உணர்த்தி, நாம் யார் என்று நம்மை நமக்குக் காட்டும் கண்ணாடி கர்த்தருடைய வேதம் ஒன்றே! நமது அன்றாடக வாழ்வில் நாம் தேவனை ஒவ்வொரு விநாடியும் அனுபவிக்கப் பழகிவிட்டால், நமது வார்த்தை களும் தியானமும் சீராக இருப்பதும் உறுதி.

இயற்கையினூடாக (வச.1-6)

சிலருடைய கண்களுக்குத் தீமை மாத்திரமே தெரியும்; சிலர் கண்களுக்கு குற்றங்கள் மாத்திரமே தெரியும். அப்படியானால் நாம் காண்பதெல்லாமே தீமையும் கெட்டவையுமா? கண்கள் பார்க்கும் பார்வைக்கும் நமது இருதயத்தின் தியானத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. நல்ல சிந்தனையுடன் பார்த்தால், யாவும் நல்லதாகவே தெரியும். சற்று நம்மைச் சுற்றிலும் பார்ப்போம். நம் கண் கள் காண்கின்ற ஒவ்வொரு படைப்பும், எவ்வளவு கொள்ளை அழகு! அவை தாமாக உண்டானவையல்ல; அவை உண்டாக்கப்பட்டவை. அப்படியானால் உண்டாக்கப்பட்ட இந்த அற்புத இயற்கையின் தோற்றத்தில் உண்டாக்கியவரின் அதாவது படைப்பாளியின் கரங்களின் வல்லமையை நம்மால் உணரமுடியாமல், அவற்றைத் தீதாக காண்கிறோமானால் நமது கண்களில் மாத்திரமல்ல; நமது இதயத்திலும் சற்று பிசகு இருக்கிறது என்பதே அர்த்தமாகிவிடும்.

மனுக்குலம் கடவுளை நம்புகிறது, தங்கள் தங்கள் அறிவுக்கு ஏற்றபடி வேறுபட்ட விதங்களில் அவரைத் தேடுகிறது; நாஸ்திகர்கள்கூட தாங்களும் ஒரு தேடலில் இருப்பதை அவர்களே உணருவதில்லை. ஆனால், தம்மை மனுக்குலம் தேடியாகிலும், ஏன், தடவியாகிலும் கண்டுகொள்ளும்படிக்கு தமது சிருஷ்டிப்பிலேயே தேவன் தம்மை தெளிவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதைத்தான் பவுலடியார், “தேவனைக் குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச் சொல்ல இடமில்லை” என்கிறார். மேலும், “அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது” (ரோமர் 1:19-21) என்று தொடருகிறார்.

ஆக, இருதயம் இருளடைந்தால், அந்த இருதயத்தின் தியானமும் இருளாகவேதான் இருக்கும்; அவர்களுடைய வாயின் வார்த்தைகளும் இருளையும், இருளின் கிரியைகளையுமே வெளிப்படுத்துகிறதாக இருக்கும். இந்த வார்த்தைகள் பேசுகிறவர்களுக்கும், அது யாரை நோக்கி அம்பாக எய்யப்படுகிறதோ, எவருக்கும் ஆரோக்கியம் தராது.

சற்று வானத்தை அண்ணாந்து பார்ப்போம் (வச.1-6). தேவனுடைய படைப்பின் கரத்தின் அழகிய காட்சி நம்மைச் சூழ்ந்திருக்கிறதைக் காணலாம். அந்த அற்புத அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது. இருளைக் கிழித்துக்கொண்டு எழுகின்ற சூரியனின் மஞ்சளும் சிவப்பும் கலந்த கதிர்கள், அந்த ஒளி ஊடுருவிப்பாயும்படி தங்கள் கிளைகளை அசைத்தாடுகின்ற அழகான பச்சை இலைகள் நிறைந்த மரங்கள், எப்போது கதிரவன் ஒளி கிடைக்கும் என்று ஏங்கி நின்று அழகாக மெதுவாக ஒற்றை ஒற்றை இதழ்களாக விரிகின்ற பூக்கள், பறவைகளின் இனிய பாடல் ஒலிகள். இன்னும் என்ன சொல்ல! காலையில் ஒரு காட்சி, நடுப்பகலில் இன்னொரு காட்சி, மாலையிலோ வேறொரு வண்ணம்! இவற்றை சற்று கவனித்துப் பாருங்கள். வானங்களின் அதிசயமே தேவனுடைய மகிமையை அறிவிக்கிறது என்கிறார் தாவீது. அவற்றுக்குப் பேச்சில்லை, வார்த்தையில்லை, சத்தமும் இல்லை; ஆனால் அவைகளின் சத்தம் பூமியின் கடையாந்தரங்கள்மட்டும் கேட்கிறது. முழு பிரபஞ்சமும் அந்த மகிமையை அனுபவிக்கிறது.

தேவன் இருக்கிறார் என்றும், அவரது வல்லமையும் அன்பும் கரிசனையும் காருண்யமும் அவருடைய பிள்ளைகளாகிய மனுமக்களுடன் நிறைவாகவே இருக்கிறதென்றும் ஒரு பெரிய செய்தியை இந்த இயற்கை முழுவதும் அனு தினமும் நமக்குத் தந்துகொண்டே இருக்கிறது. இந்த இயற்கையைக் கண்ணோக்கிய தாவீது, தேவனுடைய வல்லமையை மாத்திரமல்லாமல், தனது இயலாமையையும் தான் நிலையற்றவர் என்பதையும் உணருகிறார். நாம் என்ன உணருகிறோம்? இந்த இயற்கையைப் பார்க்கும்போது அதன் படைப்பாளரைத் துதிக்கவேண்டும் போல இல்லையா? அவரைத் துதிக்கத் துதிக்க, அவருடைய மகிமையின் காட்சியால் நமது இருதயம் நிறைய நிறைய நமது தியானம் மாறும். இருதயத்தின் தியான சிந்தனைகள் மாறமாற நமது வாயின் வார்த்தைகளும் மாறும்.

தேவனுடைய வல்லமையையும், அவருடைய முடிவில்லாத தன்மையையும் அன்றாடம் நாம் தியானிப்போமானால், நாம் எவ்வளவு நிலையற்றவர்கள் என்பதை உணர்ந்து, அவரைச் சார்ந்திருக்க, நம்மைநாமே அர்ப்பணிக்க அது ஏதுவாக இருக்கும். நாமோ அன்றாடம் நமது பிரச்சனைகளையே கண்ணோக்கி அவற்றையே நமது தியானமாக கொண்டிருப்பதால்தான் நமக்கு அமைதியோ நிம்மதியோ இருப்பதில்லை. ஒரு விசை கீழ்நோக்கிய நமது கண்களை மேல் நோக்கித் திருப்புவோமாக.

வேதவாக்கியத்தினூடாக (வச.7-11)

இன்று நாம் சமூக வலைத்தளத்தில் சிக்குண்டு இருப்பதை மறுக்கமுடியாது. அது பொய் சொல்கிறதோ மெய் சொல்கிறதோ அதைக் குறித்து நமக்குச் சிரத்தையே இல்லை. இது மாத்திரமல்ல, நட்பு என்பதன் இலக்கணத்தையே மறந்தவர்களாக, முகந்தெரியாத ஏராளமான நண்பர்கள் என்ன சொல்கிறார்கள், அன்றாடக பத்திரிகை என்ன சொல்கிறது என்பதில் காட்டுகின்ற அக்கறை தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது, இன்றைய வாழ்வை எப்படிப் படம்போட்டுக் காட்டுகிறது என்பதைக் குறித்த கவலை இன்று பலருக்கும் இல்லாமல் போய்விட்டது. தேவனுக்காகவே உழைக்கிறவர்கள் ஏராளமான பேர்கள்; ஆனால் அவரது வார்த்தைக்கு முதலிடம் கொடுப்பவர்கள் எத்தனை பேர்!

வேதவாக்கியங்கள், இதுவே நமது உயிர் மூச்சு. ஏனெனில் இவை தேவனுடைய வாக்கு. ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினாலே அருளப்பட்டிருக்கிறது’ (2தீமோ.3:16). இவற்றைப் படிக்கப் படிக்க, தியானிக்கத் தியானிக்க, தேவனுடைய பரிசுத்தத்தை நாம் உணருவதுமல்லாமல், நமது பாவநிலைமையை நாம் அதிகமாக உணரக்கூடியதாக இருக்கிறது. சாதாரணமாக சட்டங்கள், நியாயங்கள், கட்டளைகள் என்று இவற்றைக் குறித்து நாம் எண்ணும்போது, இவை நம்மைப் பயமுறுத்துகின்றன, நாம் சந்தோஷமாக இருப்பதையே இவை தடுக்கின்றன என்ற சிந்தனைதான் நமக்குள் எழுகின்றது. கட்டளையை மீறினால் தண்டனைதான் என்று பயப்படுகிறோம். ஆனால், இங்கே அதற்கு மாறான சிந்தனையை தாவீது தந்திருக்கிறார்.

கர்த்தருடைய வேதம் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது. கர்த்தருடைய சாட்சி பேதையை ஞானியாக்குகிறது. கர்த்தருடைய நியாயங்கள் இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறது. கர்த்தருடைய கற்பனை கண்களைத் தெளிவிக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும் நீதியுமாயிருக்கிறது. அவை தேனைப்பார்க்கிலும் மிகவும் விரும்பப்படத்தக்கது. அவைகளால் நாம் எச்சரிக்கப்படுகிறோம். அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. மாத்திரமல்ல, “தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2தீமோ.3:17) என்கிறார் பவுல்.

மொத்தத்தில் கர்த்தருடைய கட்டளைகள், வேதவாக்கியங்கள் நம்மை அன்றாடம் புதுப்பிக்கிறது; நாம் அதனை உணரும்போதெல்லாம் அந்தப் புதுப்பித்தலில், நமது கண்கள் புதிய வெளிச்சத்தைக் காணுகையில் அதில் நாம் தேவனை அவருடைய வாயின் வார்த்தையின் அதிசயத்தைக் காண்கிறோம் கேட்கிறோம். ஆகவே, தேவனுடைய கட்டளைகள் நமக்கு வழிகாட்டலுக்கும், நமது பாதைக்கு வெளிச்சமாயிருப்பதற்குமே தவிர, அவை நம்மை சங்கிலிகளில் கட்டி வைப்பதற்கு அல்ல. அவை நம்மை எச்சரித்து சரியான பாதையில் நடத்துகின்ற உபாத்தியாய் இருக்கின்றது.

ஆக, தினமும் நாம் வேத வாக்கியங்களை வாசித்துத் தியானிக்கும்போது, நாம் அங்கே தேவனுடைய பிரசன்னத்தை உணருகிறோம். அவர் நம்முடன் நமது ஆழ்மனதில் பேசுவதை உணருகிறோம். இந்த வேதவாக்கிய தியானங்களால் நமது இருதயம் நிறையுமானால், நமது வாயின் வார்த்தைகளும் நமக்கும் பிறருக்கும் ஆரோக்கியமானதாகவே வெளிவரும் என்பதில் துளியேனும் சந்தேகமில்லை. கோபங்கள், பிரச்சனைகள் வரும், வந்தாலும் வேதவாக்கியம் நம்மை அமைதிப்படுத்தி, கிறிஸ்து நம்மில் வெளிப்படும்படி, நம்மைப் பக்குவப்படுத்தும். அங்கே ஆண்டவரை நாம் உணருகிறோம்.

அன்றாடக அனுபவங்களில் (வச.12-13)

அன்றாடக அனுபவங்களில் தேவன் தாம் நம்முடன் கூடவே இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி வருகிறார் என்பதை நம்மால் மறுக்க முடியாது. தாவீது, அதை நன்கு அனுபவித்திருக்கிறார். ஏனெனில் குற்ற உணர்வு, இதனால் பாதிக்கப்பட்டவர் தாவீது. அதனை ஒளித்து வைத்திருந்த மட்டும் அவர் தவித்துப்போயிருந்தார். “நான் அடக்கி வைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்து போயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினாலே என் சாரம் உஷ்ணகால வறட்சி போல வறண்டுபோயிற்று” (சங்.32:3,4) என்கிறார் தாவீது. ஆனால், “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கை யிடுவேன் என்றேன்” என்கிறார். அப்போது நடந் தது என்ன? அவரே கூறுகிறார்: “தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்” என்று.

இதுதான் இன்று நமது அன்றாடக வாழ்வு. அன்றாடம் வார்த்தையினால், மனதால், செயலினால் அறிந்தும் அறியாமலும் நாம் எத்தனை தவறுகளைச் செய்கிறோம். அவற்றை உணரும்போது, ஒருவித குற்ற உணர்வு நம்மைத் தாக்கும். தெரியாமல் தப்புப் பண்ணிவிட்டோமே, சுயநல நோக்குடன் நடந்துகொண்டோமே, செய்ய வேண்டியதைச் செய்யாமல் தப்பிக்கொண்டோமே என்று நம்மில் பலர் நமக்குள் கலங்குவதுண்டு. மேலும், நமக்குள்ளான மாம்சத்திற்குரிய பலவித சிந்தனைப் போராட்டங்களினால் சோதிக்கப்பட்டு, அவற்றைத் தவிர்க்கவும் முடியாமல், செய்யவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் நம்மில் எத்தனை பேர் தடுமாறி நிற்கிறோம்.

தாவீது இரண்டு காரியங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார். ஒன்று, மறைவான குற்றங்கள், அடுத்தது துணிகரமான பாவங்கள். எதுவாயிருந்தாலும், குற்ற உணர்வு ஏற்படுமானால், அதுவே மனந்திரும்புதலின் அடையாளம்; அது நம்மைக் கிறிஸ்துவை நோக்கிப் பார்க்க வைக்கும்; நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டுமே என்ற தாகத்தை உண்டாக்கும்.

ஆனால், அதே குற்ற உணர்வு நம்மைப் பயத்துக்குள்ளாக்கி, தேவனை விட்டே விலக்கிவிடவும் கூடும், அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. ஏனெனில், உண்மையாகவே நாம் விடுதலையை வாஞ்சிக்கும்போது, ஆண்டவர் அருளுகின்ற மன்னிப்பையும், கிருபை நிறைந்த இரட்சிப்பையும் அன்றாடம் நாம் அனுபவிக்கிறோம். அங்கே நாம் ஆண்டவரையே அனுபவிக்கிறோம்.

அன்று தாவீதுக்கு இயேசுவும் இல்லை, சிலுவையும் இல்லை, இயேசு சிந்திய இரத்தமும் இல்லை. ஆனால் இன்று ஒரு சிறிய பொய்யோ, அடுத்தவரைக் கெடுத்துப்போட்ட கேடான ஒரு செயலோ, எதுவாயினும் உண்மையாகவே நம் பிழைகளை உணர்ந்து, அவரை நோக்குவோமானால், நிச்சயம் கர்த்தர் நம்மை மன்னித்து, நாம் செய்யவேண்டியவற்றை உணர்த்தி, நாம் நடக்க வேண்டிய வழியில் நம்மை நடத்துவார். இந்த உள்ளான மாற்றத்தை இந்த உலகமோ, எந்த மனிதனோ, உலக ஆலோசகர்களோ தர முடியாது.

நமது உள்ளான மனிதன் விடுதலையடையும்போது, நமது இருதயம் களிகூரும், நம்மை விடுவிக்கின்ற தேவனைத் தியானிக்கும். அப்போ, நம்மை விரோதிக்கிறவர்களைக்கூட நேசிக்கின்ற அன்பின் வார்த்தைகள் நமது நாவிலிருந்து நிச்சயம் வெளிவரும்.

வார்த்தைகளும் தியானமும்

அது, ஒரு சிறிய வீடு. நம்மை இன்முகத்துடன் வரவேற்ற தாயார், நம்மை வீட்டின் பின்புறத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு கட்டிலில் குடும்பத்தின் தலைவர் படுத்திருந்தார். அவரைப் பார்த்து திகைத்துப்போய் விசாரித்தபோது, பாம்பு ஒன்று கடித்ததிலிருந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாக இவர் படுத்த படுக்கையாகிவிட்டார் என்று மனைவி விபரத்தைக் கூறினார். இரண்டு கைகளும் குறுகியிருந்தது, விரல்கள் முடங்கியிருந்தன. கால்களும் இயங்காது. வாய்ப் பேச்சும் திக்கிவிட்டது, பேசினாலும் விளங்கிக்கொள்வது கடினம். நினைவுகளும் சிந்தனைகளும் மிகவும் துடிப்புடன் இருந்தாலும், அவருடைய சரீரம் எதற்கும் இடங்கொடுக்காமல், அவரைக் கட்டில் கிடையாகப் படுத்திவிட்டிருந்தது. இரண்டு பெண் பிள்ளைகள், இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்த மகளின் ஒரு குறுகிய உழைப்பில்தான் குடும்பம் ஓடுகிறது. இது போதாதென்று இவரின் கடைசி மகள், மூளை வளர்ச்சி குன்றியவளாகத் தோற்றமளித்தாள். இத்தனைக்கும் மத்தியிலும் யாவரும் நம்மை மலர்ந்த முகத்துடன் வரவேற்றார்கள்.

தகப்பனார் நம்மைக் கண்டவுடன் தனக்கே உரிய குரலில், திக்கின மொழியில் சொன்ன முதல் வார்த்தை, “ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்” என்பதுதான். அதிலே தொடங்கியவர், “ஆண்டவர் நல்லவர்”, “அவர் என்னுடைய இருதயத்துள் இருக்கிறார்”, “நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்” என்றார். தொடர்ந்து, “ஆண்டவர் எனக்கு நல்ல மனைவியையும் நல்ல பிள்ளைகளையும் தந்திருக்கிறார்; அவர் என்னைத் தனது கரத்தில் வரைந்து வைத்திருக்கிறார்” என்று இப்படியே அவரது பேச்சு வேத வாக்கியங்களுடன் தொடர்ந்தது. தன் மனைவி பிள்ளைகளுக்காக மூன்று தடவைகள் கர்த்தருக்கு நன்றி சொன்னார். கோணிப்போன அந்த முகத்தில் அத்தனை மகிழ்ச்சி பொங்கிவழித்தது! அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவருடைய இருதயத்திலிருந்து வெளிவந்ததை நாங்கள் உணர்ந்தோம். இதல்லவோ தேவனுக்குப் பிரீதியான வாயின் வார்த்தைகளும் இருதயத்தின் தியானமும்!!

பதினைந்து ஆண்டுகளாக, எந்தவொரு வசதிகளும் இல்லாதவிடத்தும், தங்களால் இயன்ற வரைக்கும் அந்தக் குடும்பம் முழுவதும் தங்கள் தந்தையை முகங்கோணாமல், மனநிறைவுடன், ஒருவித குறையும் பேசாமல், பாராமரிக்கிறார்களே, இது எப்படி அவர்களுக்கு முடிந்தது? இவர்கள் ஒரு வைராக்கியமான புறமதத்திலிருந்து தேவ கிருபையால் ஆண்டவரை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு வந்தவர்கள். அவர்களிடமிருந்தும் எதிர்மறையான எந்தவொரு பேச்சும் இல்லை. இதுவல்லவோ தேவனுக்குப் பிரீதியான வாயின் வார்த்தைகளும் இருதயத்தின் தியானமும்!!

ஆக, இயற்கையில். தேவனுடைய வார்த்தையில், அன்றாடக அனுபவங்களில் தேவனை உணர்ந்து, அவருடன் உறவாட கற்றுக்கொள்வோமானால், நமக்கும் நம்மைச் சுற்றியிருக்கிறவர்களுக்கும் எத்தனை ஆசீர்வாதமாயிருக்கும்! தன்னுடைய வார்த்தைகளையும், இருதயத்தின் தியானங்களையும் அவற்றின் பிரதிபலிப்புகளையும், பலிபீடத்தின் காணிக்கைகளாக ஏற்றுக்கொள்ளும்படி ஜெபிக்கிறார் தாவீது. நாமும் தினமும் நமது வாயின் வார்த்தைகளையும் இருதயத்தின் தியானத்தையும், கர்த்தருடைய மாறாத அன்பு வழிநடத்தும் என்ற நிச்சயத்துடன் பலிபீடத்தில் படைப்போமா! தினமும் கர்த்தருடன் ஆரம்பித்து, கர்த்தருடன் நடந்து, கர்த்தரை இன்னமும் அதிகமாக அறிந்துகொண்டு, கர்த்தருக்குள் நாளை முடிப்பது எத்தனை பாக்கியம்! ஆமென்.

உங்களுக்குத் தெரியுமா?

இயேசுகிறிஸ்து காட்டும் இன்பத்தின் பாதையும் இவ்வுலகத்துக் காரியங்களிருந்து நாம் இன்பத்தைப் பெற்றுக்கொள்ளும் முறையும் ஒன்றுக்கொன்று முரணானது!