• Dr.எம்.எஸ்.வசந்தகுமார் •
(மே – ஜுன் 2023)

Dr.எம்.எஸ்.வசந்தகுமார்

1829 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் டஃப் (Alexander Duff) எனும் நற்செய்திப் பணியாளர், தான் அதுவரை காலமும் சேகரித்த 800 அருமையான புத்தகங்களுடன், “லேடி ஹொலன்ட்” (Lady Holland) எனும் கப்பலில் இந்தியாவுக்குப் புறப்பட்டார். எனினும் இடையில், அக்கப்பல் சேதமடைந்தமையால் பெறுமதிப்புமிக்க அந்த 800 புத்தகங்களையும் அவர் இழக்கநேரிட்டது. அந்த விபத்திலிருந்து தப்பிக் கரைசேர்ந்தவர்கள் சேதமடைந்த கப்பலில் உடைந்த பகுதிகள் அல்லது தங்கள் உடமைகளில் ஏதாவது தென்படுகிறதா என கரையிலிருந்தவாறே சுற்றும் முற்றும் பார்வையிட்டனர். ஆனால், அவர்கள் கண்களில் ஒரேயொரு சிறிய பொருள் மட்டுமே தென்பட்டது. அலைகளினால் கரையில் கொண்டு வந்து போடப்பட்டிருந்த அந்த பொருள் என்னவென்பதை அறிய ஆவலுடன் சென்றவர்கள், நற்செய்திப் பணியாளரின் வேதாகமத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். வேதாகமமானது, பலவிதமான எதிர்ப்பலைகளினால் அலைக்கழிக்கப்பட்டும் இன்றுவரை அழிந்தொழிந்து போகாமல் இருப்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணமாயுள்ளது என்பதை வொய்ச்சக் என்பார் சுட்டிக்காட்டுகிறார்.

உண்மையில், இன்றுவரை அழியாமல் நிலைத்திருக்கும் மிகப் பழைய நூல் வேதாகமம் மட்டுமே. எத்தனையோ இலக்கியப் படைப்புகள் இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிட்டன.

ஆனால் வேதாகமமோ, மற்றைய நூல்களைப் போலல்லாது இன்றுவரை நிலைத்துள்ளது. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படுவதற்கும் எத்தனையோ ஆண்டுகளுக்கும் முன்பு ஓலைச் சுவடிகளிலும் தோலேடுகளிலும் கைகளினால் எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தைகள் இன்றும்கூட அழியாமல் அப்படியே உள்ளன. ஆதிகால எழுத்தேடுகள் நீண்ட காலங்களுக்கு நிலைத்திருக்கக் கூடியவைகள் அல்ல. ஆனாலும், தேவனுடைய வார்த்தையோ இத்தகைய இயற்கை அழிவையும் மீறி அழிந்துவிடாமல் உள்ளது. பேர்னாட் ரேம் என் பார், 13000 புராதன புதிய ஏற்பாட்டுப் பிரதிகள் இப்போது நம் வசம் இருப்பதாக அறியத் தருகிறார். மட்டுமல்ல, வேறு எந்த ஒரு புராதன இலக்கியமும் இந்தளவுக்கு பாதுகாக்கப்படவில்லை. இவ்வாறு இன்றுவரை நிலைத்திருக்கும் தன்மை, வேதாகமம் தேவனு டைய வார்த்தை என்பதற்கான சான்றாக அமைகிறது.

வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை (மத்.24:35) என இயேசுகிறிஸ்து வாக்களித்த வண்ணம், தமது வார்த்தையை இன்றுவரை பாதுகாத்துள்ளார். உலகிலுள்ள அனைத்தும் அழிந்துவிட்டாலும் கர்த்தருடைய வசனமோ அழியாமல் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (1பேதுரு 1:25). ஏனெனில், அது என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்து (1பேதுரு1:23). வேதாகமம் தம்முடைய வார்த்தை என்பதனாலேயே தேவன் அதைமட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பலவிதமான அழிவுகளில் இருந்தும் பாதுகாத்துள்ளார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

(அ) பரிமாற்றம் செய்யப்படுகையில் பரிசுத்த வேதாகமம் அழியாமல் இருந்தது.

தேவனுடைய வார்த்தையான வேதாகமமானது, சுமார் 3000 ஆண்டு காலமாக அதாவது மோசேயின் காலம் முதல் அச்சியந்திரம் கண்டு பிடிக்கப்படும் வரை கைகளினாலேயே பிரதி பண்ணப்பட்டு வந்தது. இவ்வாறு ஒரு பிரதியிலிருந்து இன்னுமொரு பிரதிக்கு தேவனுடைய வார்த்தை பரிமாற்றம் செய்யப்படும்போது, எந்தவொரு பகுதியும் தவறவிடப்பட்டு விடவில்லை. கைகளினால் பிரதிபண்ணும்போது பொதுவாக ஏற்படும் எந்தவொரு பிழையும் வேதாகமப் பிரதிகளில் ஏற்படவில்லை. அது தேவனுடைய வார்த்தையாயிருந்தமையினால், தேவனே அதன் பரிமாற்ற செயலையும் கவனித்து வந்துள்ளார். தேவன் பிரதி பண்ணியவர்களோடிருந்து அவர்கள் எதையும் தவறவிட்டு விடாதபடி கருத்துடன் தங்கள் பணியை மேற்கொள்ள அவர்களுக்கு உதவினார். உண்மையில், இயேசுகிறிஸ்து தெரிவித்ததுபோல, அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகவில்லை, ஒழிந்துபோவதுமில்லை (மத். 5:18).

வேதாகமத்தின் மூலப்பிரதிகளில் இருந்து நகல் பிரதிகளைத் தயாரித்தவர்கள் வேதபாரகர்களாவர். இப்பணியைச் சரிவரச் செய்வதற்கு இவர்கள் சிறப்பாக தேர்ச்சியுடையவர்களாயிருந்தார்கள். மட்டுமல்ல, தாங்கள் பிரதி பண்ணுவது தேவனுடைய வார்த்தை என்பதை நன்கறிந்திருந்தமையால், பயபக்தியுடனும் அதிக சிரத்தையுடனுமே பிரதி பண்ணினர். உண்மையில், எந்தவொரு புராதன இலக்கியமும் இந்த அளவு கவனத்துடன் பிரதி பண்ணப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.

வேதபாரகர்கள், தேவனுடைய வார்த்தையைப் பிரதி பண்ணும்போது, ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள வசனங்கள் எழுத்துக்கள் என்பவற்றின் எண்ணிக்கை, பலமுறை வரும் பதங்கள் சொற்றொடர்கள், நடு எழுத்து, நடு வசனம் நடு வாக்கியம் என்பவைகளைக் குறித்துக்கொள்வது வழக்கம். பிரதி பண்ணிய பின், தாங்கள் எதையுமே தவற விட்டுவிடாமல், பிழையற பிரதி பண்ணியுள்ளோமா என்பதைப் பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொள்ள அவர்கள் கையாண்ட முறை இதுவேயாகும். மேலும், பிரதிபண்ணிக் கொண்டிருக்கும்போது ஒரு சிறு பிழை ஏற்பட்டால்கூட அதை வெட்டித்திருத்தி எழுதுவது அவர்களது பழக்கமாயிருக்கவில்லை. மாறாக, அந்த பக்கத்தை அப்படியே நிராகரித்துவிட்டு. மறுபடியுமாக புதிய ஏடொன்றில் ஆரம்பத்திலிருந்து எழுதத் தொடங்குவார்கள். அத்தோடு, மெளனமாக அமர்ந்திருந்து மூலப்பிரதியைப் பார்த்து நகல் பிரதியை அவர்கள் தயாரிக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு சொல்லையும் ஓரளவுக்கு உரத்த சத்தத்துடன் உச்சரித்த வண்ணமாகவே எழுதினார்கள். இதனால், கர்த்தர் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை (யோசுவா 21:45).

மூவாயிரம் ஆண்டுகளாக, ஆயிரக்கணக்கான நகல் பிரதிகள் கைகளினாலேயே பிரதிபண்ணப்பட்டு வந்தும்கூட தேவன் மக்களுக்கு கொடுத்த வார்த்தைளில் ஒன்றுகூட அழிந்துவிடவில்லை. கைவசமுள்ள 13,000 புதிய ஏற்பாட்டு புராதன கையெழுத்துப் பிரதிகள் அனைத்தையும் பல ஆண்டுகளாக ஆராய்ந்து பார்த்த ஏ.டி.ராபர்ட்சன் என்பார், “8000 புராதன லத்தீன் மொழிப்பிரதிகளும் 1000 ஏனைய பழைய பிரதிகளும் 4000 கிரேக்க மொழி பிரதிகளும் இப்போதும் உள்ளன. ஆனால், இவைகளில் எந்தவொரு பிரதியும், மற்ற எந்தவொரு பிரதியையும் எவ்விதத்திலும் முரண்படுத்துவதாயில்லை” என அறியத்தருகிறார்.

“அதேபோல, அங்கீகரிக்கப்பட்ட பழைய ஏற்பாட்டு பிரதி (Mesoretic Text) கி.பி.500 அளவில் பிரதி பண்ணப்பட்டதாகும். இது கி.பி 1947இல் சாக்கடலுக்கருகில் கண்டெடுக்கப்பட்ட கி.மு.800 அல்லது 900 ஆண்டுகாலப் பகுதியில் பிரதி பண்ணப்பட்டவைகளுடன் இணங்குகின்றன” என ஜாண் மெக்காத்தர் சுட்டிக்காட்டுகிறார். கைகளினால் பிரதி பண்ணப்பட்ட பிரதிகளுக்கிடையே 1000 வருடகால இடைவெளி இருந்தபோதிலும், அவைகளுக்கிடையேயுள்ள ஒற்றுமையானது, தேவனுடைய வார்த்தையில் ஒரு சொல்கூட அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதை நமக்கு சுட்டிக்காட்டுகின்றது. பல வருடங்களாக மூலப்பிரதிகளை ஆராய்ந்துவரும் பண்டிதர்கள், மூலப்பிரதிகளில் இருந்த தேவனுடைய வார்த்தை எவ்வித பிழைகளுமின்றி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்” என லேமான் ஸ்ட்ராவுஸ் அறியத் தருகிறார். இதனாலேயே பிரட்ரிக் கென்யன் என்பவர், “நம் கையிலுள்ள வேதாகமம், எவ்வித இழப்புகளும் அழிவுகளும் இன்றி தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையைக் கொண்டுள்ளது” என சாட்சி பகிர்ந்துள்ளார். உண்மையில், இது அற்புதமானதொரு செயலேயாகும்! தேவனுடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை (1இராஜா.8:56). ஏனெனில், அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போக விடவில்லை (1சாமு.3:19).

(ஆ) பகைவர்களின் செயல்களின்போதும் பரிசுத்த வேதாகமம் அழியாமலிருந்தது.

வேதாகமமானது, பரிமாற்ற செயல் முறையின் போது மட்டுமல்ல, பகைவர்கள் அதை அழிக்க முயற்சித்தபோதெல்லாம், அற்புதமான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. உண்மையில், வேதபுத்தகத்தைப்போல வேறு எந்த ஒரு புத்தகமும் மக்களது வெறுப்புக்குள்ளாகியதில்லை. வேதத்தை முற்றாக உலகிலிருந்து அகற்றிட பலர் முயற்சித்தனர். ஆனால் எவ்வளவு முயன்றும், எவராலுமே அதை அழித்துவிட முடியவில்லை. “மனிதர்களுடைய சகலவிதமான தாக்குதல்களையும் சமாளிக்கக் கூடிய வல்லமை பொருந்திய புத்தகம் நமது வேதாகமம்” என பெருமிதங்கொள்ளும் கிறிஸ்வெல், “ஒவ்வொருமுறையும் மக்கள் அதை அழிக்கும்போது மறுபடியுமாக உயிர்பெற்று வந்துவிடுகிறது” என்று சுட்டிக்காட்டுகிறார். உண்மையில், போனாட் ரேம் குறிப்பிட்டது போல, புத்தகங்களில் இரத்தசாட்சி நமது வேதாகமமே! ஆனால், ஒவ்வொரு முறையும், தொடர்ந்தும் ஜீவிப்பதற்காக தனது இரத்த வெள்ளத்திலிருந்து எழுந்து விடுகிறது. வேதபுத்தகத்தைப்போல சித்திரவதைக்குட்பட்ட புத்தகம் எதுவுமே இல்லை. ஆனால், அவை யாவற்றையுமே வேதபுத்தகம் மேற்கொண்டு வருகிறது. உறி ரிம்மர் குறிப்பிட்டது போல, “உலகின் மிகப் பழைமை வாய்ந்த புத்தகமான வேதாகமம் அனைத்து எதிர்ப்புச் சக்திகளையும் ஜெயித்து இன்றுவரை அழியாமலுள்ளது”.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேதாகமத்தை அழிக்க அநேகர் முயற்சித்தபோதிலும் டயோக்ளிசியன் ரோம சக்கரவர்த்தியாக இருந்தபோது நடைபெற்ற வேத ஒழிப்பு முயற்சியே மிகவும் கொடூரமானது. இந்த வேதாமத்திற்கு விரோதமாக இருந்த இந்த அரசன் தனது அரசியல் பலத்தையும் இராணுவ பலத்தையும் கொண்டு, வேதாகமத்தை முற்றாக அழித்துவிட முயற்சித்தான். கி.பி.303 இல், இவன் வேதாகமத்தை அழிப்பதற்கான அரச ஆணையொன்றைப் பிறப்பித்தான். கிறிஸ்தவர்களையும் அவர்களிடமிருந்த வேதபுத்தகத்தையும் அழிப்பதற்கான அரச ஆணையைப் பெற்ற இராணுவம், ரோம சாம்ராட்சியம் முழுவதும் சுறுசுறுப்புடன் செயற்பட்டு, வீடுவீடாக சென்று கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்ததோடு, ஆயிரக்கணக்கான வேதாகமங்களையும் எரித்து சாம்பலாக்கியது. வேதத்தின் ஒரு சிறுபகுதியை வைத்திருந்தவர்கள்கூட கொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு இரண்டு வருடகால கடும் முயற்சியின் பின்பதாக வேதாகமத்தை முற்றாக அழித்து விட்டதாக அரசன் பெருமிதங்கொண்டான்.

ஆனால், அவனுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற கான்ஸ்டன்ட்டைன் கிறிஸ்தவ மதத்தை தழுவிய போது, அவனுக்கு வேதாகமப் பிரதிகள் தேவைப்பட்டன. டயோக்ளிசியன் அநேகமாக எல்லா வேதாகமங்களையும் எரித்துவிட்டமையால், எங்காவது தனக்கு ஒரு வேதாகமப் பிரதியைத் தேடிக்கொண்டு வருபவர்களுக்கு அரச பொற்களஞ்சியத்திலிருந்து வெகுமதி அளிப்பதாக வாக்களித்தான். என்ன ஆச்சரியம்! 25 மணி நேரத்திற்குள் ரோம சாம்ராஜ்ஜிய எல்லைக்குள் இருந்தே 50 வேதாகமப் பிரதிகள் அரசனிடம் கொண்டுவரப்பட்டன. இரண்டு வருட காலமாக, டயோக்ளிசியன் தீவிரமாக முயற்சித்தும் தன்னுடைய ராட்சிய எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்துகூட வேதாகமத்தை முற்றாக ஒழித்துவிட முடியாமல் போய்விட்டது.

வேதாகமமானது, எத்தனையோ முறை பகைவர்களினால் கிழித்தெறியப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக அக்கினிக்கிரையாக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் எவராலுமே முற்றாக அதை அழித்துவிட முடியாமலுள்ளது. எந்த அளவுக்கு அழிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டதோ. அதைவிட பல மடங்கு வேதாகமங்கள் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளன. 1778இல் மரணமடைந்த பிரான்சு நாட்டு பிரபல வேதாகம விரோதி வொல்ட்டயர், பரி.வேதாகமத்தை ஒழிக்க தான் எடுத்த முயற்சிகள் வெற்றியடைந்துவிடும் என்ற நம்பிக்கையில், இன்னும் நூறு ஆண்டுகளில் கிறிஸ்தவம் பூண்டோடு அழிந்துவிடும் என பெருமிதங்கொண்டான். ஆனால் அவன், அழிந்து ஒழிந்து இருந்த இடமே தெரியாமல் போனானேயொழிய, அவன் அழிக்க முயற்சித்த வேதாகமமோ இன்றுவரை அழியாமலேயே உள்ளது. லேமான் ஸ்ட்ராவுஸ் சுட்டிக் காட்டியதுபோல, “சகலவிதமான எதிர்ப்புகளையும் மேற்கொண்டு, இன்னமும் சிதைக்கமுடியாத கன்மலையாக வேதாகமம் உள்ளது. அதை அழிக்க மக்கள் கொடூரமான முறைகளைக் கையாண்டும் அவர்களால் அதை அழிக்கமுடியாமல் போனது மட்டுமல்ல, அவர்கள் அதனாலேயே அழிந்தும் போனார்கள்”. ஏனெனில், வேதாகமத்தை அழிக்க முயற்சிப்பது, தனக்குத்தானே அழிவை வரவழைத்துக்கொள்வதாகும். இதனால்தான் சிட்னி கொலிட் என்பவர், “வேதாகமத்தை உலகிலிருந்து அகற்ற முயல்வது, தீச்சுவாலையை முதுகினால் மறைக்க முயல்வதற்குச் சமானமானது” என்றார். உண்மையில், வேதாகமத்தை எந்த ஒரு மனிதனாலும் அழிக்க முடியாது.

(இ) படித்தவர்களின் சொல் அம்புகளினால் அழியாமல் இருந்தது.

வேதாகமமானது படித்தவர்களின் சொல் அம்புகளினாலும் பலமுறை தாக்கப்பட்டது; வேதாகமம் பிழையானது, அது நம்பகமற்றது. அது விஞ்ஞானத்தை முரண்படுத்துவதாயுள்ளது என்றும், கொஞ்ச காலத்தில் வேதாகமம் இக்காலத்திற்கு உதவாத ஒரு புத்தகமாகிவிடும் என கருதும் அறிவாளிகளை நாம் ஒவ்வொரு நூற்றாண்டிலும் காணலாம். எனினும் இவர்களுடைய அறிவியல் தர்க்கங்களாலும் வேதாகமத்தை அழிக்கமுடியவில்லை. 1800ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு பல்கலைக்கழகம் வேதாகமத்திலுள்ள 82 பிழைகளைப்பற்றிய அறிக்கையொன்றை வெளியிட்டு “இப்பிழைகள் கிறிஸ்தவ மார்க்கத்தை அழித்துவிடும்” என தெரிவித்தது. ஆனால் ஜோண் மெக்ஆத்தர் சுட்டிக்காட்டியதுபோல, “இன்று அந்த 82 பிழைகள் மட்டுமல்ல, அந்த பல்கலைக் கழகமும் அழிந்து போய்விட்டது. ஆனால் வேதாகமமோ, கிறிஸ்தவமோ அழிந்துவிடவில்லை”.

அதேபோல 1861ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டு பல்கலைக்கழக விஞ்ஞானபீடம் 51 நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை வெளியிட்டது. இவை ஒவ்வொன்றும், வேதாகமத்தின் பல பகுதிகள் பிழையென சுட்டிக்காட்டின. ஆனால், ஜாண் பிளஞ்சார்ட் குறிப்பிட்டதுபோல, “இன்று எந்தவொரு விஞ்ஞானியும் 1861ஆம் ஆண்டின் விஞ்ஞான உண்மைகளில் ஒன்றையும் நம்புவதில்லை” காரணம், அதற்குப் பின்பாக கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள், ஆரம்ப கண்டுபிடிப்புகள் பிழை என நிரூபித்துவிட்டன. ஆனால், அந்த 51 விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் வேதத்தில் பிழை என சுட்டிக்காட்டிய பகுதிகள் பிழைகள் அல்ல என்றும் பிற்கால விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஒத்துக்கொண்டுள்ளன. உண்மையில், லொறேன் போயிட்னர் கூறியது போல, “அன்று முதல் இன்றுவரை வேதாகமம் மாற்றமேதுமின்றி அப்படியே இருக்கின்றது. ஆனால், அந்த 51 விஞ்ஞான உண்மைகளும் பிழைகளாக மாறிவிட்டன”. ஜோண் மெக்ஆத்தரும். “வேதத்தில் அன்று கண்டுபிடிக்கப்பட்ட 15 பிழைகளில் ஒன்றுகூட இன்று இல்லை. மட்டுமல்ல. அந்த விஞ்ஞான பீடமும் இன்று இல்லை” என அறியத் தருகிறார்.

அறிவியலாளர்களின் தர்க்கங்களால்கூட வேதாகமத்தை அழிக்கமுடியவில்லை என்பது முற்றிலும் உண்மை. இரண்டு நூற்றாண்டு களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளியிடப்பட்ட (The Age of Reason) எனும் நூல் மிகவும் பிரபல்யம் பெற்று விளங்கியது. போற்றிப்புகழப்பட்ட நூலின் ஆசிரியரான தாமஸ் பெயின் என்பார், உலகிலேயே மிகச்சிறந்த அறிவியலாளராக கருதப்பட்டார். அவருக்கு நிகராக எவரும் இருந்ததில்லை என்றே அனைவரும் எண்ணினர். தன்னுடைய அறிவியல் வாதங்களின்மீது அபார நம்பிக்கை கொண்டிருந்த தாமஸ் பெயின், “தனது தர்க்கங்கள் அனைத்தும் வேதாகமம் நம்பகமற்றது என்பதை நிரூபித்துவிடும். அதன்பிறகு யாருமே வேதத்தை நம்பி அதை வாசிக்க மாட்டார்கள். வேதாகமம் அச்சிடப்படுவதும் நிறுத்தப்பட்டுவிடும் என அறிவித்தார். மட்டுமல்ல, தனது அறிவியல் தர்க்கங்கள் வெற்றியடைந்த பிறகு அமெரிக்காவில் ஐந்து வேதாகமங்கள்கூட இருக்காது என சவால்விட்டார். தோமஸ் பெயின் இவ்வாறு சவால்விட்டு 200 வருடங்களுக்கு மேலாக கடந்துவிட்டன. இன்று அவருடைய புத்தகத்தின் பிரதிகள் ஐந்தைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகமிக கஷ்டம். ஆனால், வேதாகமமோ ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன. அவர் வாதிட்டது போல, அவருடைய தர்க்கங்கள். வேதாகமத்தை அழித்து விடவில்லை. மாறாக, அவருடைய வாதங்களே இன்று அறிவீனமான கருத்துக்களாகிவிட்டன. ஏனெனில், வேதாகமம் சிறந்த ஞானமுடைய தேவனுடைய வார்த்தையாயிருப்பதனால், எந்தவொரு மனிதனுடைய அறிவாலும் அதை அழித்துவிட முடியாது.

18ஆம் நூற்றாண்டில் டார்வினுடைய பரிணாமக் கொள்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது வேதாகமத்தின் சிருஷ்டிப்பு விவரணம் கற்பனை கதையாக கருதப்பட்டது. மட்டுமல்ல. இக்கொள்கை, வேதாகமம் பொய், உண்மைக்கு முரணானது என நிரூபித்துவிடும். எனவே, வேதாகமம் பிரயோஜனமற்ற ஒரு புத்தகமாகி கடைசியில் இல்லாமலே போய்விடும் என எண்ணினார்கள். ஆனால், இன்று டார்வினுடைய கொள்கையை விஞ்ஞானிகள்கூட ஏற்றுக்கொள்வதில்லை. அதேசமயம், வேதாகமமோ, தேவனுடைய வார்த்தை, அது உண்மையானது என விஞ்ஞானிகளே ஏற்றுக்கொண்டுள்ளனர். எந்த அறிவு ஞானத்தினாலும் வேதாகமத்தை அழித்து விடமுடியவில்லை, பழைய விஞ்ஞான நூல்கள் பிரயோஜனமற்றவைகளாகியது போல, வேதபுத்தகம் தேவையற்ற புத்தகமாகிவிடவில்லை.

“பாரீஸ் நகரத்து புகழ்பெற்ற லூவர் நூலகத்திலுள்ள விஞ்ஞான புத்தகங்களில் இக்காலத்திற்கு உதவாத புத்தகங்களை வரிசையாக அடுக்கினால் மூன்றரை மைல் நீளமான இடம் தேவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என அறியத்தரும் கிறிஸ் வெல், “இவைகள் இன்று எந்தவொரு விஞ்ஞானியாலும் உபயோகிக்கப்படுவதில்லை” என்றும் சுட்டிக்காட்டுகிறார். பிரைன் எட்வர்ட்டும், “50 வரு டங்களுக்கு முன்பு, ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த விதிகளைப் பற்றி எல்லோரும் நம்பிக்கையுடன் பேசினர். ஆனால், ஐயன்ஸ்டீன் அவைகளில் பலவற்றை பிழை என நிரூபித்துள்ளார்” என அறியத் தருகிறார். அதேபோல அணு பகுக்கப்பட முடியாததொன்று என முன்பு விஞ்ஞானிகள் கருதினார்கள். ஆனால் இன்று, அது பகுக்கப்படுவதனால் பெற்றுக்கொள்ளக்கூடிய சக்தியை நாம் அனைவரும் நன்கறிவோம். விஞ்ஞானக் கல்வியானது அபிவிருத்தியடைந்து வரும் ஒரு ஆராய்ச்சித் துறையாகும். காலத்துக்கு காலம் அது வேதாகமத்தைத் தாக்கி அதை அழிக்க முயற்சித்தது. ஆனால், அவைகளால் வேதாகமத்தை அழித்துவிட முடியவில்லை. இயேசுகிறிஸ்து தெரிவித்ததுபோல, வேதவாக்கியம் தவறாததாயிருக்கின்றமையால் (யோவான் 10:35) எந்த ஒரு அறிவியல் துறையாலும் அதை அழித்துவிட முடியாதுள்ளது.

வேதாகமம் தேவனுடைய வார்த்தையாய் இராதிருந்தால், மக்கள் அதை எப்பொழுதோ அழித்திருப்பார்கள். ஆனால் அது, மனிதர்களுடைய வார்த்தையாயிராமல், தேவனுடைய வார்த்தையாயிருந்தமையினால், அவர்கள் எத்தனையோ தடவைகள் முயற்சித்தும், அதை அழிக்கமுடியாமல் போய்விட்டது. அதை அழிக்க முயற்சித்தவர்கள் அனைவரும் அழிந்து விட்டனர். ஆனால், வேதாகமமோ இன்றும் அழியாமல் ஜீவனுள்ள வார்த்தையாய் உள்ளது (1பேதுரு 1:23). ஏனென் றால் தேவன், அதை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்திருக்கிறார் (சங். 119:152). ஆம், அவருடைய வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது (சங்.119:89). நமது தேவனுடைய வசனம் என்றென்றைக்கும் நிற்கும் (ஏசா. 40:8). தேவன் எவ்வாறு நித்தியமானவராக இருக்கிறாரோ, அதைப்போலவே. அவருடைய வார்த்தையும் நித்தியமானது.

எனவே, வேதாகமம் இன்றுவரை அழியாமல் நிலைத்திருப்பது, அது தேவனுடைய வார்த்தை என்பதற்கான உறுதியான சான்றாக உள்ளது.

நினைவுகூருங்கள்!

அன்பு கொடுக்கப்படும்போது அது இழக்கப்பட்டு விடாது; மாறாக அது அதிகரிக்கும்!