• பழைய ஏற்பாட்டு வேதபாடம்
• Dr.உட்ரோ குரோல்
(மே – ஜுன் 2023)

தானியேல்

12 ஆம் அதிகாரம்

Dr.உட்ரோ குரோல்

இது ஒரு அன்பின் காவியம். ஒரு நேசர் தன்னுடைய மனதிற்கினியவளைத் தெரிந்தெடுத்தார். ஆரம்பத்தில் அவர்களது அன்பு சிறப்பாக இருந்தது. ஆனால் நாட்கள் கடந்த பின்னர் அவள் தனது முதல் அன்பை மறந்து, உண்மையற்றவளாகி அவரைவிட்டு தூரமாய்ச் சென்றுவிடுகிறாள். ஆனால் நேசரோ பொறுமையுடனும் உண்மையுடனும் காத்திருந்து தங்களுடைய எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார். அவர் யேகோவா தேவன்; இஸ்ரேல் அவரது அன்பிற்குரியவள்.

ஒரு யூதனுடைய வாழ்க்கை எளிதானதல்ல என்பதை தானியேல் அனுபவித்திருந்தார். அவர் இளைஞனாக இருந்தபொழுது ஒரு போர்க்கைதியாகவும், இஸ்ரவேலின் எதிரிகளிடம் அடிமையாகவும் இருந்தார். அவருடைய பெரும்பான்மையான வாழ்க்கை எதிர்மறையான விசுவாசமும், கலாச்சாரமும் உள்ள மக்களிடையே கழிந்தது. ஆனால் அவருடைய வாழ்வின் இறுதியில் தம்முடைய தெரிந்தெடுக்கப்பட்ட மக்களின் எதிர் காலத்திட்டத்தைப் பற்றிய தரிசனத்தை அவருக்கு தேவன் கொடுத்தார்.

தானியேலைப் பற்றிய நம்முடைய வேத பாடம் இத்துடன் முடிவடைகிறது. அதில் யூதமக்களின் எதிர்காலத்தைப்பற்றி தேவன் தானியேலுக்கு வெளிப்படுத்தியதை நாம் ஆராய்வோம்.

யூத மக்களை அவர்களது மத நம்பிக்கை கண்ணோட்டத்துடன் நாம் பார்க்கக் கூடாது. அவர்கள் தேவனுடைய மக்கள், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஆனால், அவர்கள் முரட்டாட்டம் உடையவர்கள். அவர்களுக்கு ஒரு மேசியாவும் இரட்சகரும் அதிக அவசியம்!

தானியேல் 12ஆம் அதிகாரம் நம்மை உற்சாகப்படுத்தும் ஓர் அதிகாரமாகும். ஏனெனில், அது இஸ்ரேலின் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுகிறது. இப்புத்தகத்தின் இறுதியில் இரு தீர்க்கதரிசனங்களால் தானியேலை ஒரு தூதன் ஆறுதல்படுத்துகிறார். முதலாவதாக தேவனுடைய மக்கள் விடுதலையடைவார்கள்! ஏனெனில் இஸ்ரேல் தேசத்தின் மீது தேவன் அக்கறையுடையவராய் இருக்கிறார். இரண்டாவதாக, கொல்லப்பட்ட தேவ ஜனங்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்!

தானியேல் 12:1இல் மகா உபத்திரவத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம் கூறப்படுகிறது. உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்; யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். தேவனுடைய வார்த்தையில் இரண்டு காரியங்கள் உள்ளன. ஒன்று, தேவன் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிட்டுவிடவில்லை. இரண்டு, அவர் தம்முடைய ஜனங்களை விடுவிப்பார். மிகாவேல் தூதன் தேவஜனங்களாகிய இஸ்ரவேலுக்கு பாதுகாப்பாக இருப்பார். அக்காலத்தில் ஓர் உபத்திரவகாலம் உண்டாகும். சாத்தான் யூதர்களை முழுவதுமாய் ஒழிக்க முயற்சிப்பான் (வெளி. 12:15). யாக்கோபின் உபத்திரவத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு காட்டுவான். அவை யாவும் தானியேல் 12ஆம் அதிகாரத்தில் முதலாம் வசனத்தில் முன்கூறப்பட்டுள்ளது.

இதைக் குறித்து இயேசுகிறிஸ்து கூறுவதை நீங்கள் அறிய வேண்டுமெனில், மத்தேயு 24ஆம் அதிகாரத்தை வாசியுங்கள். தேவன் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலை நேசிப்பதால் அவர்கள் படும் உபத்திரவங்களிலிருந்து அவர்களை விடுதலையாக்குவார் என்று அவர் முன்னறிவித்தார்.

12:1இன் பின்பகுதி, இந்த மக்கள் அனுபவிக்கும் விடுதலையைப்பற்றிக் கூறுகிறது. அது இஸ்ரேல் தேசத்துக்கு மாத்திரமல்ல, அது தனித்துவமுடையது. இதுவரை இஸ்ரேல் தேசத்துக்கு தேவன் செய்ததைப்போல் அது இராது. ரோமர் 10இல் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என நாம் அறிகிறோம். அதாவது, இயேசுவை விசுவாசித்து அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு யூதனும் இரட்சிக்கப்படுவான். மேலும் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற ஒவ்வொருவரும் விடுதலையாக்கப்படுவார்கள் என்றும் வாசிக்கிறோம். நீங்களும் நானும் இதுவரை காணாத யூத எழுச்சி அக்காலத்தில் தோன்றும்.

வசனம் 2, 3இல் சில உயிர்த்தெழுதலைப் பற்றி அவர் பேசுகிறார். மகா உபத்திரவகாலத்தில் அநேக யூதர்கள் வாழ்வார்கள் (இதனை நாம் 11ஆம் அதி காரத்தில் வாசித்தோம்). பூமியில் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் அவர்கள் கொல்லப்படுவார்கள்.

வசனம் 2இல் பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர்; … எழுந்திருப்பார்கள் என்று வாசிக்கிறோம். தூளிலே நித்திரை பண்ணுகிறவர்கள் என்பது சுய நினைவின்றி இருப்பவர்களை அல்ல; மரணித்தவர்களையே குறிக்கிறது. அது இறந்த சரீரம் ஆகும்; ஆவியல்ல. எனவேதான், “பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர்; நித்திய ஜீவனுக்கும் சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்” என்று கூறுகிறார்.

அப்படியெனில், உபத்திரவகாலத்தில் யூத விசுவாசிகளும் சில யூத அவிசுவாசிகளும் கொல்லப்படுவார்கள் என்று பொருள்படுமா? ஆம். சாத்தானும் அந்திக்கிறிஸ்துவும், இரட்சிக்கப்பட்டவர்களை மாத்திரமல்ல, அந்த காலத்தில் இருந்த யூதர்களையும் பிடிப்பார்கள். மேசியாவை நம்புகிறவர் களாயிருந்தாலும், நம்பாதவர்களாயிருந்தாலும் அநேக யூதர்களைக் கொல்லுவார்கள். அவர்களில் சிலர் நித்திய ஜீவனுக்கும் சிலர் நித்திய நிந்தைக்கும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

இதில் காணப்படும் வேறுபாடு யாது? புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள் நித்திய ஜீவனுக்கு எழுந்திருப்பார்கள். இங்கே யூதனென்றும் இல்லை, புறஜாதியென்றும் இல்லை. உங்களுடைய பெயர் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தால் நீங்கள் மரித்த பின்னர் நித்திய ஜீவனுக்கென்று உயிர்த்தெழுவீர்கள். அதில் இல்லை என்றால் மிருகம், கள்ள தீர்க்கதரிசி மற்றும் சாத்தான் ஆகியோருக்கு நேரும் கதியே உங்களுக்கும் நிகழும். ஆனால் யூதர்களுக்கு அற்புதமான விடுதலையும் அற்புதமான உயிர்த்தெழுதலும் நிகழ வாய்ப்பு உண்டு.

வசனம் 3 ஐ கவனியுங்கள்: ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் பிரகாசிப்பார்கள். அநேகர் நாம் கூறும் இயேசுவே மேசியா என அறிந்து கொள்வார்கள்.

வசனம் 4லிருந்து இறுதி வசனம் வரைக்கும் நாம் வாசிக்கலாம். தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு. அனைத்து மறைபொருளையும் தனக்கு வெளிப்படுத்த தானியேல் தேவனிடத்தில் கேட்டதாக நாம் முன்னர் வாசித்தோம். அப்பொழுது அவர் ஒருசில வெளிப்பாடுகளைப் பெற்றுக்கொண்டார். இப்பொழுதோ இப்புஸ்தகத்தை முடிவுகாலமட்டும் முத்திரைப்போடு என்கிறார். தானியேலே உனக்கு நான் கூற இருப்பது அவ்வளவு தான். இப்புத்தகத்தை முத்திரைப் போட்டு மூடு. ஏனெனில் நீ இப்பொழுது அறியாததை மக்கள் முடிவுகாலத்தில் அறிந்துகொள்வார்கள் என்றார். தானியேல் அன்று அறிய முடியாதவற்றை உபத்திரவ காலத்தில் மக்கள் எவ்வாறு அறிவார்கள்? விடை எளிதானதே. ஏனெனில் தானியேல் புஸ்தகத்தில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தை விளக்கும் வரலாற்றுச் சான்றுகள் நமக்கு உண்டு. அவர்கள் அந்திக்கிறிஸ்துவை சந்திப்பார்கள். தானியேல் கூறிய அனைத்தும் அந்திக்கிறிஸ்துவுக்கு முழுவதும் பொருந்துவதைக் காண்பார்கள்.

தேவன் கொடுத்த யாவையும் தானியேல் புரிந்து கொள்ளாவிட்டாலும் முடிவுகாலத்தில் தானியேல் புத்தகத்தை வாசிக்கும்பொழுது அன்றைய செய்தித்தாளை வாசிப்பது போன்று அனைத்து மக்களும் உணர்வார்கள். தேவன் நமக்கு பதில் அளிக்காத பொழுது அவருக்குக் காத்திருப்பது மிகவும் கடினமான காரியமாகும். இவை யாவும் நிறைவேற காத்திருப்பது உங்களுக்குக் கடினமாகத் தோன்றலாம். தேவனுடைய தன்மையை தற்போது விசுவாசித்து காத்திருப்பது, பின்னர் வெளிப்படுத்தும் அவருடைய தன்மைக்காக காத்திருப்பதாகும். தானியேல் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. அவருக்கு அது விருப்பமில்லையெனினும் அது அவசியம்.

ஆஸ்வால்ட் சேம்பர் என்பவர், துரிதமான முடிவுக்கு வராதீர்கள். அநேக காரியங்கள் தீர்க்கப்படாமல் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக தேவன் தம்மை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவார் என்று கூறியுள்ளார். இதில் மிகப் பெரிய ஞானம் அடங்கியுள்ளது.

தேவனுக்காக நாம் நீண்ட நாட்கள் பொறுமையுடன் காத்திருக்கவேண்டும், காற்றிலும், மழையிலும், இடியிலும், மின்னலிலும், குளிரிலும், இருளிலும் நாம் காத்திருப்பது அவசியம். காத்திருங்கள், அவர் நிச்சயம் வருவார் என்று Faith of Our Fathers என்ற பாடலை எழுதிய ஃபிரடெரிக் ஃபேபர் என்ற கவிஞர் எழுதியுள்ளார். வரலாற்றின் பக்கங்களில் இவை யாவும் வெளிப்படுத்தப்படும் காலம் வரைக்கும் தானியேல் காத்திருக்கவேண்டும். அப்பொழுது அவர் எழுதிய தீர்க்கதரிசனத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள். ஆண்டவர் தம்மை நமக்கு வெளிப்படுத்தவும் தேவனிடமிருந்து பதிலைப் பெற்றுக்கொள்ளவும் நாமும் காத்திருக்கிறோம்.

நம்முடைய வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளிலும் தேவன் தம்மை வெளிப்படுத்த நாம் காத்திருக்கவேண்டும். உங்களுடைய வாழ்வில் அவர் கிரியை செய்துவருகிறார். இவை ஏன் எனக்கு சம்பவிக்கிறது என கவலைப்படுகிறீர்களா? எனது குடும்பத்தில் மனநலிவு நோய் உடைய குழந்தை ஏன் பிறந்தது? என் கணவரை தேவன் ஏன் எடுத்துக்கொண்டார்? என் வீடு ஏன் எரிந்து போனது? என் தெருவில் ஏன் வெள்ளம் வந்தது? என் பிள்ளைகள் ஏன் தேவனை விட்டு தூரம் போகின்றனர்? இக்கேள்விகளுக்கெல்லாம் தேவன் பதில் தருவாரா என காத்திருக்கிறீர்களா?

தேவனின் பதிலுக்காகக் காத்திருக்கும் பகுதி, அவரை விசுவாசிப்பதின் கடினமான பகுதியென்று தானியேலும் தேவனிடமிருந்து கற்றுக்கொண்டார். ஆனால், அவரை விசுவாசிப்பதில் எளிதான பகுதி, அவரது தன்மையைப் புரிந்துகொள்ளுதலாகும். தானியேலுக்கு தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தவர் அதனுடைய பொருளை அறிந்துகொள்ள தானியேலைக் காத்திருக்கச் சொன்னவர் மாறாத தன்மையுடையவர்!

காத்திருப்பது எளிதானதல்ல. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்காக நீங்களும் நானும் இன்று காத்திருக்கிறோம். அவருடைய வருகை மிகச்சமீபம் என்று ஒவ்வொரு அடையாளத்தையும் நாம் கணித்து, கவனித்துக்கொள்கிறோம். ஆனால் நண்பர்களே, அடையாளத்தை எதிர்பார்க்காதீர்கள். தேவனுடைய தன்மையைப் பாருங்கள். அடையாளங்களில் நீங்கள் தவறு செய்யலாம். ஆனால், தேவனுடைய தன்மையை விசுவாசிப்பதில் நீங்கள் ஒருபோதும் தவறவே கூடாது.

என்னுடைய குமாரனை நான் உங்களிடத்துக்கு அனுப்பப்போகிறேன் என்று தேவன் கூறினார். அவருடைய குமாரனை நமக்கு மீண்டும் அனுப்புவார். நான் மீண்டும் வருகிறேன்; ஆயத்தமாகுங்கள் என்று இயேசு கூறியுள்ளார். ஆம், ஆயத்தமாகுங்கள். அப்.1:11இல் தேவதூதர்கள் அவருடைய சீடர்களை நோக்கி, கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். ஆம், தேவனுடைய வாக்குறுதி நமக்கு உண்டு, கிறிஸ்துவின் வாக்குறுதியும், தேவதூதர்களின் வாக்குறுதியும் நமக்கு தரப்பட்டுள்ளது. இங்கு தானியேலின் வாக்குறுதியும் நமக்கு எழுதப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மகத்தான நற்பெயரையுடையவர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விசுவாசித்து காத்திருப்பதே.

இப்புத்தகத்தின் இறுதியில் தேவனுடைய கால அட்டவணையைப் பற்றிய இன்னும் சில கருத்துக்கள் நமக்குக் கிடைக்கின்றன. “இக்காலத்தைப் பற்றிய சிலவற்றை நான் உனக்குக் காட்டுகிறேன். இதை நீ முழுவதும் அறியமாட்டாய். இறுதியாக ஒன்றைமட்டும் உனக்கு வெளிப்படுத்துகிறேன்” என்றார். வசனம் 5 – 6 ஐ வாசியுங்கள்: அப்பொழுது, தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு அக்கரையில் ஒருவனுமாகிய வேறே இரண்டுபேர் நிற்கக்கண்டேன். சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவு வர எவ்வளவு காலம் செல்லும் என்றுகேட்டான்.

நீங்களும் நானும் இதே கேள்வியைத்தான் கேட்கிறோம். அடுத்த வசனத்தில் இதற்கான விடையை நாம் வாசிக்கலாம். வசனம் 7: அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலது கரத்தையும் தம்முடைய இடது கரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன்.

இது ஒரு தீர்க்தரிசனம்; இதற்கு சில விளக்கங் கள் தேவை. ஒரு காலமும் காலங்களும் அரைக் காலமும் என்பது, மூன்றரை ஆண்டு மகா உபத்திரவ காலத்தைக் குறிக்கிறது. உபத்திரவ காலத்தின் முதல்பகுதியில் அந்திக்கிறிஸ்து சிறப்பானவனாக இருப்பான்; சிறந்த ஆளுகையும் செய்து இஸ்ரவேலுடன் ஒப்புரவாக இருப்பான். அவர்களிடையே சமாதானம் இருக்கும். அந்திக்கிறிஸ்து இஸ்ரவேலின் சிறந்த நண்பனாகத் தோன்றுவான்.

ஆனால் உபத்திரவ காலத்தின் மத்தியில் அவன் இஸ்ரவேலுடன் உண்டான உடன்படிக்கையை முறித்துப்போடுவான் என்று தானியேல் 9:27இல் காண்கிறோம். மூன்றரை ஆண்டுகள் (காலம் என்பது ஒரு ஆண்டு, காலங்கள் என்பது இரு ஆண்டுகள், அரைக்காலம் ஆக மூன்றரை ஆண்டுகள்) இஸ்ரவேலுக்கு விரோதமாக மாறி விடுவான். தன்னுடைய காழ்ப்புணர்ச்சி, பயங்கர வாதம் அனைத்தையும் இஸ்ரவேலின் மீது காட்டுவான். “இதுவரை நீ அறிந்ததுபோதும். அந்திக்கிறிஸ்து தன்னை வெளிப்படுத்தி, இஸ்ரவேலின் மீது தன்னுடைய எதிர்ப்பைக் காட்டுவதற்கு நீ மூன்றரை காலம் காத்திருக்க வேண்டும்” என்று தூதன் கூறினார்.

அக்காலத்தின் முடிவில் என்ன நடக்கும்? தானியேல் புத்தகத்தின் இறுதி வசனம், நீயோ வென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக் கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான்.

நீ இளைப்பாறுவாய், நீ உயிர்த்தெழுவாய், உன்னுடைய வெகுமானத்தைப் பெறுவாய். இதுவே உயிர்த்தெழுதல்! நீங்கள் உயிர்த்தெழும்பொழுது தேவனுடைய தன்மையை நம்பினதற்கான உங்கள் வெகுமானத்தை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். இவ்விதமான மூன்று சொற்கள் இலக்கிய நயத்தில் அமைந்திருந்தால் அருகில் ஒரு பாடல் இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

இன்றைக்கும் முடிவு காலத்துக்கும் இடையில் அநேக ஆண்டுகள் இருக்கலாம். தேவன் உங்களை அதிகமாக நேசிக்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அவருடைய ஜனங்களான இஸ்ரவேலரை அதிகமதிகமாக நேசிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? அவர் தமது ஜனங்களைப் பாதுகாப்பார். நாம் காத்திருக்க வேண்டும். இது கடவுளின் வெளிப்பாடுகளின் ஒரு புத்தகமாகும். அதாவது, அது சில காரியங்களை நமக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்திக்கிறிஸ்து யார் என்றும், எங்கு வாழ்வார் என்றும், எப்பொழுது வருவார் என்றும் அது கூறுகிறது.

இவை அனைத்தையும் நான் உங்களுக்குக் கூறிவிட்டால் நீங்கள் காத்திருக்க மாட்டீர்கள். நீங்கள் என்னை நம்பவேண்டும்; காத்திருக்க வேண்டும்; உங்கள் வாழ்வின் இருண்டவேளையிலும், நான் அதிகாரமுடையவராய் இருக்கிறேன். பரலோகமே ஆளுகை செய்கிறது. தானியேல் 4: 26 என்பதே இப்புத்தகத்தின் திறவுகோல் வசனமாகும். ஆளுகை தேவனுடையது. இறையாண்மை அவருடையது. அவர் காத்திருக்கச் சொல்லும்பொழுது, “என்னுடைய காலக்கருவி நான் விரும்பியபடிதான் செயல்படுகிறது. நீங்கள் பொறுமையுடன் காத்திருக்கவேண்டும்.” தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்.

1580இல் ஸ்பெயின் நாட்டு அரசரான இரண்டாம் பிலிப் தங்களுடைய எதிரியான இங்கிலாந்தை ஆக்கிரமிக்க எண்ணினார். எனவே 1588ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் இங்கிலாந்து நாட்டைக் கைப்பற்ற அனைத்து கப்பல்களையும் திரட்டினார். 1588ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி ஸ்பானிஷ் கடற்படை ஆங்கிலக் கால்வாய்க்குள் நுழைந்தது. ஆனால், ஆங்கிலேய கடற்படையின் கப்பல்கள் குறைவாக இருந்தாலும் அவை சிறியவைகளாகவும் வேகமானதாகவும் இருந்தன. தளபதிகளின் திறமையால் 130 ஸ்பானிஷ் கப்பல்களில் 67 மட்டுமே ஸ்பெயினுக்கு பத்திரமாகத் திரும்பியது. இக்கடற் போரில் புயல்களும் சேதத்தை ஏற்படுத்தியதால், இங்கிலாந்து ஸ்பெயினின் தாக்குதலில் இருந்து தப்பியது. இந்த மக்களின் விசுவாசத்தையும் வெற்றியையும் நினைவு கூரும் வகையில் ஆங்கில அரசாங்கம் கடவுள் ஊதினார், அவர்கள் சிதறினர் என்ற இலத்தீன் வாசகம் பொறுத்த பதக்கங்களை வெளியிட்டது.

தானியேலின் 12ஆம் அதிகாரத்திலிருந்து சர்வ லோகாதிபதியே ஒரு நாட்டை உயர்த்துகிறார், மற்றொன்றைத் தாழ்த்துகிறார் என நாம் அறிந்துகொண்டோம். ஓர் அரசரையோ அல்லது ஓர் அதிகாரியையோ ஆட்சியில் அமர்த்துகிறார் அல்லது நீக்குகிறார். இப்புத்தகம் தீர்க்க தரிசனங்களைக் கூறுவதுடன் மட்டுமல்ல; பரலோகமே ஆளுகை செய்கிறது என்று நமக்குக் கற்பிக்கிறது.

தேவன் அதிகாரத்தில் இருக்கிறார். இப்பெரிய உலகத்தில் மிகப்பெரிய காரியங்களுக்கு அவர் அதிகாரியாய் இருக்கும்பொழுது உங்களுடைய சிறிய வாழ்வுக்கும் அவரே பொறுப்பு. உங்களுடைய நித்தியத்தை தேவனுக்குள் நீங்கள் நம்பும் பொழுது, உங்களுடைய பிள்ளைகளுக்கும், உங்களுடைய திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றுக்கும் நீங்கள் அவரை நம்பலாம். தானியேல் ஒரு மிகச்சிறந்த புத்தகம், ஏனெனில் அது அடிப்படையான நித்திய உண்மையை நமக்கு போதிக்கிறது. தேவனே அனைத்தையும் தனது அதிகாரத்தில் வைத்திருக்கிறார்! ஒருவரும் அவரை அந்த அரியாசனத்திலிருந்து அகற்ற முடியாது.

கவலைப்படாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்ல வரவில்லை. மகிழ்ச்சியாயிருங்கள், தேவனை நம்புங்கள். தேவன் நம்மை நேசிக்கிறார். நமக்காகத் தமது குமாரனை அனுப்பினார். தேவன் இன்னும் மக்களை அழைக்கிறார். இஸ்ரவேல் மற்றும் தேசங்களின் மகா நியாயத்தீர்ப்பு நாட்களிலும் நம்மை இரட்சிக்க அவர் அழைக்கிறார்.

என்னோடு சேர்ந்து ஜெபிப்பீர்களா?

தேவனே, பேசுவது எளிது. நீர் எங்களை நேசிக்கிறீர் என்று நாங்கள் அறிவோம். உம்மை நாங்கள் நம்புகிறோம். ஆனால் எங்களுடைய வாழ்வில் அநேக காரியங்கள் எங்களை மீறி நடக்கும்பொழுது இதை நீர் ஏன் அனுமதித்தீர் என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். இது எங்கள் சபையில் ஏன் நடக்கலாம்? என்னுடைய போதகர் ஏன் இதைச் செய்தார்? என்னுடைய பிள்ளைகள் ஏன் என்னை கைவிட்டுவிட்டார்கள்? என் கணவர் ஏன் என்னைவிட்டு பிரிந்தார்? என்னுடைய மனைவி ஏன் மரித்துப் போனாள்? இதைப்போன்ற பல கேள்விகள் எங்களைக் குழப்புகின்றன.

தனிப்பட்ட எங்களுடைய தேவைகளுக்கு நாங்கள் தனிப்பட்ட விடைகளை எதிர்பார்க்கிறோம். தானியேல் புத்தகத்தைப் போல நீர் எங்களது அநேக கேள்விகளுக்கு குறிப்பிட்ட விடைகளைத் தருவதில்லை. ஆயினும், பரலோகமே ஆளுகை செய்கிறது என்ற பொதுவான பதிலைத் தந்துள்ளீர். நாங்கள் உம்மை நம்புவதற்கு நீர் விரும்புகிறீர். உம்மை நம்ப எங்களுக்கு தைரியத்தைத் தாரும். உம்மை நம்புவதற்கு அநேக காரணங்களும் வாய்ப்புகளும் உண்டு. எங்களுக்கு மனதைரியத்தைத் தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

(முற்றிற்று)

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை