• சகோ. வாட்டர்மேன் •
(மே – ஜுன் 2023)

பரிசுத்தாவியானவர் நம்முடைய நாட்டிலே எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதைப்பற்றி அண்மையில் ஒரு சகோதரனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “செழுமை இறையியலினால் (Properity Theology) கிறிஸ்துவின் சரீரம் விழுங்கப்பட்டுவிட்டது’ என கூறிய அவர் “இன்று தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக கிறிஸ்தவர்களாக மாறுபவர்களே அதிகம். கிறிஸ்தவனாக மாறினால் செல்வந்தனாக மாறிவிடலாம் எனும் எண்ணம் நம்மவரிடையே உள்ளது. இன்றைய பிரசங்கிமார்களும் இதை ஊக்குவிப்பவர்களாக இருக்கின்றனர். ஒருவனுடைய ஆவிக்குரிய வாழ்வின் தராதரம் அவனுடைய செல்வத்தை அடிப்படையாய்க்கொண்டே கணிப்பிடப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.

இன்னுமொரு சகோதரன் தன்னுடைய சபையின் நிலையைப் பற்றி பின்வருமாறு வருத்தத்துடன் தெரிவித்தான். “சில வருடங்களுக்கு முன்பதாக நமது சபைகள் சிறப்பான முறையில் வளர்ச்சியுற்று வந்தது. ஆனால் இப்போதோ நிலைமை முற்றிலுமாய் மாறிவிட்டது”. சபைத்தலைவர் களின் பண ஆசை காரணமாக சபையில் எழுப்புதலே இல்லாமல் போய்விட்டது. அநேக விசுவாசிகள் ஆலயத்துக்கு வருவதைகூட நிறுத்தி விட்டனர். கிறிஸ்தவர்களது மனம் பொருளாதார முன்னேற்றத்திலும் லெளகீக செளகரியத்திலும் மயங்கிவிட்டமையால். சபையினது சாட்சியும் வல்லமையும் குறைந்து போய்விட்டது என்றார்.

இந்த இரண்டு சகோதரர்களுடைய வார்த்தைகளைக் கேட்டபின் என்னுள்ளத்தில் இரண்டு கேள்விகள் எழுந்தன. ஒன்று பணத்தைப் பற்றிய நமது மனப்பாங்கு எத்தகையதாயிருக்க வேண்டும்?˜மற்றது, தேவனுடைய வார்த்தையைப் பொறுத்தவரையில் உண்மையான செல்வம் எது?˜ என்பவைகளேயாம்.

(அ) விசுவாசியும் பணமும்

1 தீமோத்தேயு 6:6-10இல் பணத்தைப்பற்றிய விசுவாசியின் மனப்பாங்கு பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

போதுமென்கிற மனதுடனேகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாகலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வசனங்கள் 6-8இல் போதுமென்கிற மனதைப் பற்றி பவுல் கூறுவதை கவனித்தீர்களா?˜ இத்தகைய திருப்திக்கே பவுல் இவ்வசனங்களில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். வசனங்கள் 9-10இல் பண ஆசை உண்மையில் நன்மையளிப்பதாயிராமல் தீமையளிப்பதாகவே உள்ளதென கூறுகிறார். அது உண்மையில் ஆசீர்வாதமாயிராமல் சாபமாகவே உள்ளது (லூக்.6:20-26 ஒப்பிடவும்).

பவுல் எழுதிய இவ்வார்த்தைகள் நடைமுறை வாழ்வில் சாத்தியப்படக்கூடியவைகள் அல்ல என்று சிலர் கேட்கலாம். ஆனால் இவை அத்தகைய வெற்று வார்த்தைகள் அல்ல. பவுல் இவற்றைத் தன்னுடைய வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் போதுமென்கிற மனதுடன் பண ஆசையற்றவராயிருந்தார் என்பதை அவருடைய எழுத்துக்கள் நமக்கு அறியத்தருகின்றது.

2 கொரிந்தியர் 6:3-10இல் அவர் பின்வருமாறு எழுதுகிறார்: இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களைத் தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம். மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும். பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும், கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும். தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும், சத்திய வசனத்திலும், திவ்விய பலத்திலும், நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும், கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும், எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும், அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும். உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும், துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும். தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான் களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.

மாளிகை போன்ற வீடு, உல்லாசமாய் செல்லும் வாகனம், பெருந்திரளாய் பணம் உள்ள வங்கிக் கணக்குகள் என்பவைகளா பவுலினுடைய வாழ்வையும் ஊழியத்தையும் கொண்டு சென்றன. இல்லவே இல்லை. பவுலைப் பொறுத்தவரை, பெரிய வெற்றியாக காணப்பட்டது, இல்லாமையிலும் துயர்களிலும் அவற்றை சகித்துக் கொண்டிருக்கும் மனப்பாங்கேயாகும். அவருடைய மனம், ஆவியின் கனியைப்பற்றியே சிந்தித்த வண்ணமிருந்தது. அவை ஒருபோதும் பணத்தைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. பொருளாதார ரீதியாக ஒன்றுமில்லாதிருந்தும் ஆவிக்குரிய பிரகாரமாக அனைத்தும் தன்னிடம் இருந்ததாக அவர் கூறுகிறார். பணம் சம்பாதிப்பதைமட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள விசுவாசிகள் பவுலின் வார்த்தைகளுக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறார்கள்?

(ஆ) பணமுள்ள விசுவாசியும் அவனுடைய பணமும்

செல்வந்தனாயுள்ள ஒரு விசுவாசி தன்னுடைய பணத்தைப் பற்றி எத்தகைய மனப்பாங்குடன் இருக்கவேண்டும் என்பதைப் பற்றி பவுல் 1தீமோத்தேயு 6:17-19இல் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகல வித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும். நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.

இது ஐசுவரியவான்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டளையாகும். தங்களுடைய செல்வத்தைக் குறித்து பெருமைபட்டமையால், அவர்கள் தேவனை நம்ப வேண்டும். பணத்தினை நம்புவது தேவனை நம்புவதற்கு எதிரானது. தேவனே நம் வாழ்வின் சகல பகுதிகளினதும் செல்வத்தின் மூலமாக இருக்கிறார். 18ஆம் வசனத்தில் ஐசுவரியவான்கள் நன்மை செய்வதிலும் நற்கிரியைகளிலும் ஐசுவரியவான்களாக இருக்கவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் தாராள குணமுள்ளவர்களாயிருக்கும்படியும் பணிக்கப்பட்டுள்ளனர். தேவனிடத்தில் அவர்களுக்குள்ள செல்வமானது, அவர்களிடம் எவ்வளவு இருக்கின்றது என்பதைக் கொண்டல்ல; மாறாக, அவர்கள் எவ்வளவு மற்றவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதன் அடிப்படையிலேயே அளவிடப்படுகின்றது.

19ஆம் வசனத்தில், தாராளமாய் கொடுப்பதை ஊக்குவிக்கும் காரணி எது என்பதை அறியத் தருகிறது. வருங்கால வாழ்வுக்கான ஆதாரத்துக்கே பவுல் இவ்வசனத்தில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இவ்வுலகில் ஐசுவரியவான்களாக இருக்கவேண்டும் என்பதில் பவுல் அதிகளவு அக்கறை கொள்ளவில்லை.

நம்முடைய உண்மையான செல்வமானது தேவனை நம்புவதேயாகும். நம்மிடமுள்ளது போதும் என்ற மனநிறைவுடன் நாம் வாழ வேண்டும். உண்மையான செல்வம் பணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதல்ல என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.