• Dr.தியோடர் எச்.எஃப். •
(மே – ஜுன் 2023)

Dr.தியோடர் எச்.எஃப்.

5. நியாயப்பிரமாணத்தின் காலம்

(கடந்த இதழின் தொடர்ச்சி)

தேவதிட்டத்தில் ஓய்வுநாளுக்குரிய இடம்

தேவனுடைய திட்டத்தில், ஓய்வுநாளுக்குரிய இடத்தைப் பற்றிப்படிப்பது மிக முக்கியமானது, ஏனெனில் அதைக் குறித்து பலவிதமான தவறான கருத்துக்கள் நமது காலத்தில் நிலவுகின்றன.

ஓய்வு நாள் பற்றி முதன் முதலாகக் கூறப்படல்:

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் (ஆதி.2:2).

ஓய்வு நாள் – இதில் “ஓய்வு” என்ற வார்த்தை “முடிக்க” என்ற மூல வார்த்தையிலிருந்து வந்தது. ஓய்வு நாளன்று தேவன் அவரது கிரியைகளையெல்லாம் செய்து முடித்தார். “தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்த படியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.” அதற்கு முந்தைய ஆறு நாட்களின் சிருஷ்டிப்பில் “சாயங்காலமும், விடியற்காலமுமாகி” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது சந்தேகமே இல்லாமல் 24 மணி நேரத்தைக்கொண்ட ஒரு நாளைக் குறிக்கிறது. ஏழாவது நாள் பற்றி அப்படியாக ஏதும் சொல்லப்படவில்லை. அதாவது, மனிதன் பாவத்தில் விழும் வரை, அந்த ஏழாம் நாளில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் தொடர்ந்து ஓய்வில் இருக்கவேண்டுமென்று கூறப்படவில்லை. அந்த ஓய்வு நேரம் எவ்வளவு என்று நமக்கு தெளிவாகக் கூறப்படவில்லை.

ஓய்வுநாள் பற்றி இரண்டாவதாகக் குறிக்கப்பட்டது. ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு பின்பு. அதாவது, கிறிஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பாக கூறப்பட்டுள்ளது. எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்கள் வெளியேறின பின்புதான் மனித சமுதாயத்திற்கு ஓய்வுநாள் ஆசரிக்கப்படவேண்டும் என்று முதன்முதலாகக் கூறப்பட்டது (யாத்.16:2; நெகே. 9:13,14). பின்பு அது நியாயப் பிரமாணத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டது (யாத்.20:8-11).

இஸ்ரவேல் மக்களுக்கு ஓய்வுநாள் ஒரு சிறப்பு அடையாளமாகக் கொடுக்கப்பட்டது (யாத். 31:13-17).

1. இஸ்ரவேலருக்கு மட்டும்தான் ஓய்வு நாள் ஆசரிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டது.

2. இஸ்ரவேல் சிதறடிக்கப்பட்டது. ஆகவே அந்த அடையாளம் இன்றைய நாட்களில் அர்த்த மற்றதாக உள்ளது. இன்றைய காலம் நியாயப் பிரமாணத்தின் காலமல்ல. இக்காலத்தில் தேவன் அவருடைய நாமத்தில் “திருச்சபை” என்ற ஒரு கூட்ட மக்களை அழைக்கிறார். திருச்சபை யூதருமல்ல, புறஜாதியாருமல்ல. யூதருக்கும் புறஜாதி யாருக்கும் இடையே உள்ள நடுச்சுவர் தகர்க்கப் பட்டது (எபே.2:14). தேவன் ஒரு புதிய மனிதனை உருவாக்கியுள்ளார் (வச.15). அதாவது திருச்சபை. ஆகவே ஓய்வுநாள் என்ற அடையாளம் இந்தக் காலத்திற்கானதல்ல (கொலோ.2:16).

3. யூதமக்கள் மறுபடியும் அவர்களது தேசத்திற்கு கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். அப்பொழுது மறுபடியும் ஓய்வுநாள் அவர்களுக்குரிய சிறப்பு அடையாளமாக இருக்கும். (ஏசா.66:23; எசே. 36:16-38; ஆமோஸ் 9:7-9).

ஓய்வுநாளைப் பற்றிய விதிகளும், விதிமுறைகளும் திட்டவட்டமானவை:

1. பாலஸ்தீன நாட்டில் உள்ள சீதோஷ்ண நிலையைக் கொண்டுள்ள நாடுகளில் மட்டும்தான் அவை நிறைவேற்றப்பட முடியும்.

அ) ஓய்வுநாளில் மக்கள் நெருப்பு மூட்டக்கூடாது (யாத்.35:1-3).

ஆ) ஒய்வு நாளில் மன்னாவை சேகரிக்க மக்கள் வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது (யாத்.16: 20-29).

2. இன்றைய காலத்தில் ஓய்வுநாளை ஆசரிப்பவர்கள் அதனை முழுமையுமாக ஆசரிக்க இயலாதவர்களாக இருப்பதால், அவர்கள் சபிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் (கலா.3:10; யாக்.2:10).

ஓய்வு நாள் என்பது ஒரு குறிப்பிட்ட நாளைக் குறிக்கிறது:

1. ஏழாம் நாளாகிய சனிக்கிழமை ஓய்வு நாளாக தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டது.

2. “கிறிஸ்தவ ஓய்வு நாள்” என்று ஒருநாள் இல்லை. கிறிஸ்தவர்கள், சத்திய வார்த்தையை சரியானபடி விவரித்துப் பார்க்காததால் (2தீமோ. 2:15 பார்க்க) அந்த நாளைக் குறித்து குழப்பம் நிலவுகிறது. ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவ ஓய்வு நாள் என்று அழைக்கிறார்கள்.

கிறிஸ்தவர்கள் ஓய்வு நாளை ஆசரிக்கத் தேவை இல்லை ஏன்?

1. அது இஸ்ரவேலருக்குமட்டும் கொடுக்கப்பட்டது (யூதர்களுக்கு மட்டும்).

2. ஓய்வுநாளை ஆசரிப்பதின் மூலம் நாம் நியாயந்தீர்க்கப்பட மாட்டோம் (கொலோ.2:16).

3. இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் யூதர்கள் தொடர்ந்து ஓய்வு நாளில் கூடிவந்தனர், ஆனால், அனைத்து கிறிஸ்தவர்களும், யூதர்களாயினும், புறஜாதியானாலும், வாரத்தின் முதலாம் நாள் கூடிவந்தார்கள் (லூக்கா 24:1; யோவான் 20:19; 1கொரி.16:2; அப்.20:7).

ரோமன் கத்தோலிக்க சபையினர், ஏழாம் நாள் ஓய்வு நாள் கிறிஸ்தவர்களைப் போல வாரத்தின் முதலாம் நாள் ஆராதனையை நடத்தவில்லை. அவ்வாறு வாரத்தின் முதல்நாள் ஆராதனை செய்வது, அப்போஸ்தல திருச்சபைகளாலும், ஆதிகால விசுவாசிகளாலும் துவங்கப்பட்டது, திருச்சபை சரித்திரத்தின்படி அப்போஸ்தலருடைய காலம் முடிந்தபொழுது, ஒவ்வொரு சபையும் சுதந்திரமாக போதகர்கள் குழுவினால் நடத்தப்பட்டன. பேராயர் என்று அழைக்கப்படும் ஒருவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட சபைகளில் சில, சிமிர்னா, கார்த்தேஜ், எபேசு, அலெக்சாண்டிரியா, எருசலேம், கொரிந்து, அந்தியோகியா, ரோமாபுரி ஆகிய பட்டணங்களில் இருந்தன.

ரோமாபுரியில் இருந்த சபை, மற்ற சபைகளின் மீது ஆளுகை செலுத்தும் அதிகாரம் இல்லாதிருந்தது. ஆயினும், ரோம சாம்ராஜ்யத்திற்கு ரோம் தலைநகராக இருந்தபடியினால், ரோமாபுரியில் இருந்த பேராயர்கள், மற்ற சபைகளின்மீது அதிகாரம் செலுத்தி ஆளுகை செலுத்த முயற்சித்தது. ஆகவே அடிக்கடி மற்ற திருச்சபை பேராயர்களால் கண்டிக்கப்பட்டனர்.

கி.பி 325இல், கான்ஸ்டான்டின் ரோமப் பேரரசர் ஆனார். அவர் கிறிஸ்தவத்தை அரசாங்க மதமாக்கி, அவரையே திருச்சபைக்கு தலைவராக்கினார். அவர் உலகத்தின் முதல் முதல் திருச்சபை மன்றத்தை நிசேயாவில் கூட்டினார். இந்த மன்றம், அலெக்சாண்டிரியா, அந்தியோகியா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பேராயர்களுக்கு, ரோமப்பேராயர்களுக்குள்ள அதே அதிகாரத்தைக் கொடுத்தார். அவர்களை ரோமத்திருச்சபைக்குக் கீழாக இருந்து செயல்படாமல் சுதந்திரமாக செயல் பட அனுமதித்தார். ரோமத் திருச்சபையில் அவர் திருமணம் செய்துகொண்டபடியினால், ரோமாபுரியில் உள்ள பேராயர்களுக்கு அநேக சலுகைகள் கொடுத்து வளர்த்துவிட்டார். பின்பு முதலாம் லியோவை (கி.பி.440-461) அநேகர் முதலாவது பேராயர் என்று கருதினர். அவர் திருச்சபைகள் அனைத்திற்கும் தன்னைத் தலைவராக அறிவித்ததோடு அநேக கத்தோலிக்க கோட்பாடுகளையும் உருவாக்கினார்.

ரோமர் கத்தோலிக்க சபை உருவாகுவதற்கு முன்பே வாரத்தின் முதல் நாள் ஆராதனைக்குரிய நாளாக கைக்கொள்ளப்பட்டது என்பதை கவனியுங்கள். ஏற்கனவே கைக்கொள்ளப்பட்டு வந்ததையே, பிற்காலத்தில் திருச்சபை ஏற்றுக்கொண்டது.

ஒழுக்கம் பற்றிய மேலும் சடங்காச்சாரங்கள் பற்றிய நியாயப்பிரமாணம்

நியாயப்பிரமாணம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. ஒழுக்கத்தைப்பற்றிய பிரமாணம் (பத்துக் கட்டளைகள்) இவை தேவனுடைய நீதியைப் பற்றியது. அது மனிதனுடைய பாவத் தன்மையை பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போன்றது (ரோமர் 3:19,20).

2. சடங்காச்சாரங்களைப் பற்றிய பிரமாணம் (இவை பலிகளைப் பற்றியது) இது, மனிதருடைய பாவத்தை தேவனுடைய கிருபை எவ்வாறு மூடுகிறது என்பதை விளக்குகிறது (யோவான் 3:14-18).

நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற கிறிஸ்து வந்தார்.

1. ஒழுக்கத்தைப்பற்றிய பிரமாணங்களை, முழுமையுமாக அவர் கடைப்பிடித்தார். அவற்றை நிறைவேற்றினார்.

2. பாவமில்லாத மனிதனாக அவர் வாழ்ந்தார். ஆகவே அவர் பரிபூரண மனிதனாக இருந்தார். தன்னைத்தானே பலியாக ஒப்புக் கொடுத்ததினால், நமது பாவங்களுக்கான பலியாகி, பலி செலுத்தும் சடங்காச்சாரத்தை நிறைவேற்றினார்.

3. பாவத்தினால் வந்த சாபம் நீக்கப்பட்டது (கலா.3:13).

நியாயப்பிரமாணம் செய்து, வாழ் என்று கூறுகிறது. கிறிஸ்துவின் பரிபூரணமான பலியினாலே நாம் இப்பொழுது வாழ்ந்து செய்கிறோம் (ரோமர் 8:2; கலா.5:1-13).

மறுபடியுமாக இஸ்ரவேலர் ஒன்று கூட்டி சேர்க்கப்பட்ட பின்பு, தேவன் அவரது நியாயப் பிரமாணத்தை அவர்களுடைய இருதயங்களில் வைத்தார். அவர்களும் தேவனுடைய பரிபூரண கிருபையினால் சுகித்து வாழ்வார்கள். முதலாவது ஒளியை பெற்றுக்கொள்வதன் மூலமாகவும், அவருடைய விருப்பங்களின்படி வாழ்வதன் மூலமாகவும், தேவனுடைய கிருபையால் வாழ்வார்கள். (எசே. 36:22-27).

இரட்சிக்கப்படுவதற்கு கிருபை ஒன்றே வழி

எல்லாக் காலங்களிலும் இரட்சிக்கப்படுவதற்கு ஒரேயொரு வழிதான் உள்ளது.

1. நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவன் நமக்கு இந்த இரட்சிப்பைத் தருகிறார்.

அ) அவர் நமது பாவங்களுக்காக அடிக்கப்பட்ட தெய்வீக ஆட்டுக்குட்டி.

ஆ) இந்த இரட்சிப்பு விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் (எபே.2:8,9).

2. தேவனுக்கு முன்பாக நாம் நிற்கும்பொழுது, கிறிஸ்துவினுடைய நீதி நாம் அணியும் நமது ஆடையாக இருக்கிறது.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் வாழ்ந்த மக்கள் பாவத்தைப் போக்கும் பழுதற்ற பலியாக கிறிஸ்துவை எண்ணி, அவர்களது பாவத்தை நீக்கத்தக்கதான பலியாக மற்ற பலிகளை செலுத்திவந்தனர். ஆதாமிற்கும் ஏவாளுக்கும் தோலுடை கொடுக்கப்பட்டது. அதாவது தோலினால் உடையை உண்டாக்க இரத்தம் சிந்தப்படவேண்டும். அவ்வாறு சிந்தப்பட்ட இரத்தம் பாவத்தை மூடுகிறது (ஆதி.3:21).

3. ஆதாமும், ஏவாளும், ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டபொழுது, ஒரு ஆட்டுக்குட்டி, அவர்களது இரட்சிப்பிற்காக அடிக்கப்பட்டது (ஆதி.4:4). ஏனென்றால் பாவமன்னிப்பிற்கு அவசியமானது (எபி.9:22).

4. நோவாவிற்கு தேவனுடைய பார்வையில் கிருபை கிடைத்தது. அவன் முதலாவது தேவனுக்கு பலிசெலுத்தி, தேவனை விசுவாசித்தான் (ஆதி.6:8,9; 8:20).

5. கோத்திரப் பிதாவாகிய ஆபிரகாம், தேவ னுக்கு முன் நீதிமானாக்கப்பட்டான் (ரோமர் 4:2-5; 20:22)

அ) அவனுடைய விசுவாசம் அவனது கிரியைகள் மூலமாக வெளிப்பட்டது (யாக்.2:21-24).

ஆ) அவனுடைய இரட்சிப்பு, விசுவாசத்தினால் மட்டுமே வந்தது.

6. நியாயப்பிரமாணத்தின் காலத்தில்கூட, இரட்சிப்பிற்கு கிருபையே வழியாக இருந்தது (கலா.3:12-24).

அ) நியாயப்பிரமாணம் மனிதனின் பாவத் தன்மையை நிரூபிக்கிறது.

ஆ) இரட்சிப்பிற்கு கிறிஸ்துவையே சுட்டிக்காண்பிக்கிறது (ரோமர் 3:19,20).

இ) இந்தக் காலம் முழுவதும் சடங்காச்சாரத்திற்கான நியாயப்பிரமாணம், தேவனுடைய கிருபையே இரட்சிக்கப்படுவதற்கான வழி என்று கூறுகிறது (எபி.10:1-4; 11-14; 17-20).

கருத்துச் சுருக்கம்

நியாயப்பிரமாணத்தின் காலம், சிலுவைக்கு முன்பான காலத்தில் தேவன் இஸ்ரவேல் என்ற சிறுகூட்ட மக்களைத் தேர்ந்தெடுத்த காலத்தைக் குறிக்கிறது. அவர்கள் மூலமாக, உலகத்தில் உள்ள மற்ற மக்களுக்கு நீதியாக வாழ்வதற்கான முறைகள் தெளிவாகக் கொடுக்கப்பட்டாலும், அவர்கள் அந்த நீதியினால் இரட்சிக்கப்பட முடியாது என்று நிரூபிக்க விரும்பினார். ஏனென்றால், மாம்சமானது பெலவீனமுள்ளது (ரோமர் 8:2,3).

அடுத்த பாடத்தில், கிருபையின் காலத்தைப் பற்றி படிக்கலாம், அந்தக் காலத்தில் தான் நாம் வாழ்கின்றோம். இரட்சிப்பிற்கான தேவகிருபை இங்கு மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயிரம் வருஷம் அரசாட்சி காலத்தில்தான், தேவனுடைய பரிபூரண கிருபை மனிதனை பாவத்திலிருந்து இரட்சித்து, மனிதனை ஆசீர்வதிக்கக் கூடும் என்று தெளிவாகும். அக்காலத்தில் கிறிஸ்துவே பூமியை அரசாளுவார். தேவனுடைய பிரமாணங்கள் மனிதர்களுடைய இருதயங்களில் பதிக்கப்படும்.

(தொடரும்)

மொழியாக்கம்: Mrs.Jeya Suseelan