• கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் •
(மே – ஜுன் 2023)

ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் (யோவான் 3:3).

கலாநிதி தியோடர் வில்லியம்ஸ்

நம் நாட்டு பழங்கதைகளிலே காகத்தைப் பற்றி அநேக கதைகள் உள்ளன. அவைகளில் ஒன்று, ஒரு காகம் ஒரு சமயம் ஒரு குடியானவன் தான் வைத்திருந்த அநேக புறாக்களுக்கு ஆகாரம் கொடுப்பதைப் பார்த்ததாம். வேளை வந்ததும் அந்த குடியானவன் புறாக்களுக்கு ஆகாரம் கொடுப்பான். தாங்கள் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி இலகுவாக புறாக்களுக்கு ஆகாரம் கிடைப்பதைக் காகம் பார்த்துவிட்டு, தானும் இந்த ஆகாரத்தை சாப்பிடவேண்டும், அவைகளுக்குரிய சிலாக்கியத்திலே தானும் பங்குகொள்ள வேண்டும் என்று கருதி, என்ன செய்யலாம் என்று யோசித்தது. காகம் உபாயத்திற்கும் சூழ்ச்சிக்கும் பெயர் பெற்றதல்லவா? ஆகையினால் அது ஒரு முடிவுக்கு வந்தது. தன்னையும் ஒரு புறாவைப்போல் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணி சுண்ணாம்புக் குழியில் போய் புரண்டு படுத்து தன்னையும் வெண்மையாக்கிக் கொண்டதாம். புறாவைப்போல் நடக்கக் கற்றுக் கொண்டதாம்.

அந்த காகம் அடுத்த நாள் குடியானவன் புறாக்களுக்கு ஆகாரம் கொடுக்கும்பொழுது புறாக்களோடுகூட தானும் ஒரு புறாவாக போய் நின்று கொண்டதாம். இப்படியாக வேளா வேளைக்கு புறாக்களுக்குக் கொடுக்கப்படும் ஆகாரத்தைத் தானும் ஒரு புறாவாக தன்னைக் கருதிக்கொண்டு, அந்த திருட்டுக் காகம் தின்று வந்தது. ஒருநாள் திடீரென்று பக்கத்தில் ஒரு எலி செத்துக் கிடக்கும் நாற்றம் வந்தது. செத்த எலியைப் பார்த்துவிட்டு அநேக காகங்கள் கூடி வந்துவிட்டன. வந்த காகங்கள் எல்லாம் கா… கா என்று கத்திக் கொண்டு அந்த செத்த எலியை உண்ண ஆரம்பித்தன. இதைப் பார்த்துவிட்டு வெளிவேஷத்தோடு புறாவைப்போல் வேடம் அணிந்துகொண்டிருந்த இந்த காகத்திற்கு உண்மையாகவே அதன் சுபாவம் மேலோங்கி வந்துவிட்டது. உடனே தன்னையும் மறந்து கா.. ..கா என்று கத்த ஆரம்பித்து விட்டதாம். இதைப் பார்த்த புறாக்கள் எல்லாம் அதை கொத்தி துரத்த ஆரம்பித்தன. குடியானவனும் ஒரு தடியை எடுத்துக்கொண்டு வந்து அதை விரட்டியடித்து விட்டான்.

இந்த கதையில் இருந்து நாம் எதைக் கற்றுகொள்ளலாம்? காகம் தன்னை புறாவாக்கிக்கொள்ள முயன்றாலும், புறாவைப்போல நடக்க முயன்றாலும் புறாவைப்போல வெளிவேஷத்தைத் தரித்துக்கொண்டாலும் உள்ளான சுபாவத்திலே அது காகம்தானே. இப்படித்தான் நாமும் வெளியிலே மார்க்க பக்தியுள்ளவர்களாய் நடந்தாலும், எத்தனையோ தீர்மானங்களை செய்தாலும் நம் உள்ளத்தில் பாவம் உண்டு என்று வேதம் கூறுகிறது. மனிதன் சுபாவப்படி பாவம் உள்ளவன். மனிதன் பாவம் செய்வதினாலே பாவி ஆகி விடவில்லை. அவன் பாவியாக இருப்பதினாலே பாவத்தைச் செய்கிறான்.

என் அருமையான நண்பனே, உன் எண்ணங்கள் அசுத்தமாய் இருப்பதற்கும் உன் கண்கள் அசுத்தமானதை பார்ப்பதற்கும் நாடுவதற்கும் காரணம் என்ன? வேசித்தனமும், விபச்சாரமும் எளிதிலே செய்வதற்கு நமக்கு சோதனை வருவதற்கு காரணம் என்ன? பொய் சொல்வதற்கு மற்றவர்களை ஏமாற்றுவதற்கு கோபங்கொண்டு மற்றவர்களை அடிப்பதற்கு அல்லது மற்றவர்களுக்கு விரோதமான காரியங்களை செய்வதற்கு சுலபமாக நம்முடைய எண்ணங்கள் செயல்கள் முற்படுவதற்கு காரணம் என்ன? நாம் சுபாவத்திலே பாவம் உள்ளவர்கள். இதைத்தான் திருமறை எடுத்துக்கூறுகிறது. ரோமருக்கு எழுதிய நிருபத்திலே பவுலடியார் 3ஆவது அதிகாரம் 23 ஆம் வசனத்திலே என்ன கூறுகிறார்: மனிதராகிய நாம் எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களாகிவிட்டோம் எனத் தெளிவாய் எழுதுகிறார்.

அத்தோடு மாற்கு எழுதிய நற்செய்தி நூல் 7ம் அதிகாரம் 21ஆம் வசனம் முதல் உள்ள பகுதிகளிலே, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பின்வருமாறு கூறியுள்ளார். “எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும் விபசாரங்களும் வேசித்தனங்களும் கொலை பாதகங்களும் களவுகளும் பொருளாசைகளும் துஷ்டத்தனங்களும் கபடும் காமவிகாரமும் வன்கண்ணும் தூஷணமும், பெருமையும் மதிகேடும் புறப்பட்டு வரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.”

மனுஷன் சுபாவப்படி தெய்வீகமானவன் அல்ல. தேவசாயலிலே உருவாக்கப்பட்டவன் என்பது உண்மைதான். ஆனால் கடவுளுக்கு விரோதமாக ஆதி மனிதன் பாவம் செய்தபடியினாலே மனிதனுக்குள் பாவம் குடிகொண்டுவிட்டது. எந்த தேவசாயலிலே அவன் உருவாக்கப்பட்டிருக்கிறானோ, அந்த தேவசாயல் மங்கி மறைந்துவிட்டது. அது அழிந்து போய்விடவில்லை. ஆனால், அது சின்னாபின்னமான நிலையிலே காணப்படுகின்றது. மனிதருக்குள்ளே பாவ சுபாவம் குடி கொண்டிருக்கிறது. அவனுடைய உள்ளத்திலே பாவத்தைப் பார்க்கிறோம். ஆகையினால்தான் அவன் பாவசெயல்களிலே ஈடுபடுகிறான். இதைத்தான் ஆண்டவர் இங்கு எடுத்துசொல்கிறார். பொல்லாங்கானவைகள் மனுஷனின் உள்ளத்திலிருந்து புறப்பட்டு வருகின்றன என்று கூறுகிறார். இப்பேர்ப்பட்ட மனிதன் மறுபடியும் பிறந்தால்தான். அவன் பரிசுத்த ஆவியானவரால் மாற்றப்பட்டால்தான் அவனால் ஆண்டவருக்குப் பிரியமான விதத்தில் வாழமுடியும்.

என் அருமையான நண்பனே, உன்னுடைய வாழ்க்கையிலே எத்தனையோ முறை நன்மை களைச் செய்ய விரும்பினாய். உன்னால் செய்ய முடியவில்லை. செய்யவிரும்பாத தீமைகளை செய்ய விரும்புகிறாய். எத்தனையோ தீர்மானங் களை செய்தாய். எவ்வளவு முயன்று பார்த்தும் உன்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை. இப்படித்தான் ஆண்டவர் யோவான் 3வது அதிகா ரத்திலே நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயரோடு பேச ஆரம்பிக்கிறார். இந்த பரிசேயர் இயேசுவி னிடத்தில் வந்து, “ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெ னில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட் டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்” என்று கூறுகிறான். ஏன் அவன் இராக்காலத்தில் வந்தான். கோழையானபடியி னாலே வந்தான் என்று சாதாரணமாய் நாம் நினைக்கிறோம். அது உண்மை என்று நாம் கூற முடியாது. ஏன்? யோவான் 7ஆம் அதிகாரத்திலே இதே நிக்கொதேமுவைக் குறித்து நாம் 15ஆம் வசனத்திலே பார்க்கிறோம்.

இதோ சனகரிப் சங்கத்திலே மற்றவர்களெல்லாம் இயேசுவுக்கு விரோதமான குற்றச்சாட்டுகளைக் கொண்டுவந்து பேசும்பொழுது, பரிசேயரும் மற்ற அதிகாரிகளும் அவரைக் குற்றஞ்சாட்டும்பொழுது நிக்கொதேமுமட்டும், “ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப் பிரமாணம் சொல்லுகிறதா” என்று கேட்கிறான். எனவே அவன் இரவில் வந்ததற்கு காரணம் கோழைத்தனமாய் இருக்கமுடியாது. இயேசுவோடு உள்ளம் திறந்து பேசலாம் என்று வந்திருக்க வேண்டும். அவருடைய அற்புதங்களை பாராட்டி பேசுகிறான். ஆனால் இயேசுவோ, அற்புதங்கள் செய்வது முக்கியம் அல்ல, நம்முடைய நீதியும் சன்மார்க்க வாழ்வும் போதாது, நாம் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று அவனைப் பார்த்து கூறுகின்றார்.

யோவான் 3வது அதிகாரம் 3 வது வசனத்தில் இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மறுபடியும் 5வது வசனத்திலே, ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார்.

இயற்கையாகவே பாவத்தில் பிறந்த மனிதன், பாவசுபாவத்தில் உள்ள மனிதன் பரிசுத்த ஆவியானவரால் மாற்றப்பட வேண்டும். அப்பொழுது தான் கடவுளையும் அவரைப்பற்றிய சத்தியங்களையும் அவருக்குரிய ஆளுகைகளையும் மனிதன் கண்ணால் கண்டுகொள்ள முடியும்.

இயற்கையாகவே மனிதனால் கடவுளை அறிந்துகொள்ள முடியாது. பல சாஸ்திரங்களை பல தத்துவ நூல்களைக் கற்றால் கடவுளைப் பற்றி அதிகமாக கேட்டு அறிந்தால், அவரை அறிந்துகொள்ளலாம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், இயேசு இங்கு என்ன சொல்லுகிறார்? அவருடைய ஆவியானவர் நம்மைத் தொட வேண்டும். மாற்றவேண்டும். அப்பொழுதுதான் நாம் கடவுளுடைய ஆளுகைகளையும் அவருடைய சத்தியங்களையும் அறிந்துகொள்ள முடியும் என்று கூறுகிறார்.

என் அருமையான நண்பனே, உண்மையாகவே நீ கடவுளை அறிந்துகொள்ள வேண்டுமானால், அவருக்கு ஏற்றபடி நீ வாழ வேண்டுமானால், இந்த மாறுதல் உன் வாழ்க்கையில் அவசியம். இதை நிச்சயமாய் இயேசு உனக்கு தருவார். உன்னுடைய பாவத்தை ஒப்புக்கொண்டு சுயநீதியை அறிக்கையிட்டு “ஆண்டவரே நான் என் சுயநீதியை சன்மார்க்க வாழ்வை சார்ந்திருக்கவில்லை. நீர் எனக்காக சிலுவையிலே மரித்தீரே அதைச் சார்ந்து உம்மிடத்தில் என்னை ஒப்புக் கொடுக்கிறேன்” என்று சொல்லி, அவரை நம்பும்பொழுது அவருடைய ஆவியானவர் உன்னை மாற்றுவார். மறுபிறப்பின் அனுபவத்தை உனக்கு தருவார். அப்பொழுது நீ கடவுளோடு உறவுகொள்ள முடியும். அவரை அறிந்துகொள்ள முடியும். அவரைப்பற்றிய சத்தியங்களை உன்னால் புரிந்துகொள்ள முடியும். இந்த வாழ்வுக்கு உன்னை அவர் அழைக்கிறார்.