ஜெபக்குறிப்பு: டிசம்பர் 8 திங்கள்
“தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது” (யோபு.42:2) என்ற வாக்குப்படியே அமெரிக்க தேசத்திலுள்ள லிங்கன் அலுவலகத்தை கர்த்தர் ஆசீர்வதித்து, அவருடைய அநாதி தீர்மானத்தின்படியே ஊழியத்தின் பணிகள் தடையின்றி நிறைவேறுவதற்கு கிருபை செய்ய ஜெபம் செய்வோம்.
அழிவுக்கு முன் அகந்தை
தியானம்: டிசம்பர் 8 திங்கள்; வாசிப்பு: நீதிமொழிகள் 16:18-25
“அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த
சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு”
(நீதிமொழிகள் 11:2).
குளத்தில் நீர் வற்றிவருவதைக் கண்ட ஒரு ஆமை, தனது நண்பர்களான இரண்டு கொக்குகளைப் பார்த்து, ‘நான் ஒரு தடியைக் கவ்விப் பிடித்தவண்ணம் இருக்கிறேன். நீங்கள் தடியின் இரு முனையிலும் பிடித்தபடி என்னைத் தூக்கிக் கொண்டு பறந்துசென்று நீருள்ள வேறு குளத்திலே சேர்த்து விடுங்கள்’ என்றது. அதற்குச் சம்மதித்த கொக்குகள் தடியின் இரு முனைகளையும் சொண்டில் கவ்வி, ஆமையைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றன. இதைக் கண்ட சிறுவர்கள் ஆரவாரம் செய்தனர். தனது யோசனையைத்தான் பாராட்டுகிறார்கள் என்று எண்ணி அகந்தைகொண்ட ஆமை, இது தனது யோசனைதான் என்று சொல்ல வாயைத்திறந்து, விழுந்து செத்துப்போனது.
‘அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை’ என்கிறார் சாலொமோன் ஞானி. அகந்தையையும், மனமேட்டிமையையும் தேவன் வெறுக்கிறார். தாழ்மையுள்ளவனுக்கோ கிருபையளிக்கிறார். ராஜா வாகிய நேபுகாத்நேச்சார் தனது அரமனையில் உலாவிக்கொண்டிருந்தபோது, “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா“ என்றான். அப்படிச் சொன்ன மாத்திரத்திலேயே அவனது ராஜ்யபாரம் அவனை விட்டு எடுபட்டது. அவன் மனுஷரில் இருந்து தள்ளப்பட்டு மிருகங்களோடே சஞ்சரித்தான் என்று வாசிக்கிறோம் (தானி 4: 29 -33).
நமது காரியம் என்ன? அகந்தைகொண்டு மனமேட்டிமையாக வாழுகிறோமா? தேவனுடைய கிருபைகளையும் தயவையும் உதாசீனம் செய்து நமது பெலத்தில் வாழலாம் என்று பெருமைகொள்ளுகிறோமா? அல்லது, தேவனே வேண்டாம் என்று நினைக்கிறோமா? இந்த உலக ஆஸ்திகளும், புகழும், நம்மைப் பெருமைகொள்ளச் செய்யலாம் ஆனால், ஒருநாள் அவை யாவும் அழிந்துபோகும். அவற்றை மாத்திரம் நம்பி வாழ்ந்தால் நாமும் அழிந்துபோவது நிச்சயம். தேவனுடைய கிருபைவரமோ என்றும் அழியாதது. நாம் தேவ கிருபையில் தங்கி வாழ்ந்தால் என்றும் நிலைத்திருப்போம், நித்தியத்தில் பங்கடைவோம்.
தேவபிள்ளையே, நம்மை மீட்கும்பொருட்டு தம்மைத் தாழ்த்தி இவ்வுலகிற்கு வந்தவர் இயேசு. அவர் வந்த நாளை நினைவுகூரும் இந்த நாட்களில் நம்மைத் தாழ்த்தி, அவர் பாதத்தில் ஒப்புக்கொடுப்போம். கொண்டாட்டங்கள் களிகூருதல்கள் நடக்கட்டும். ஆனால், முதலாவது நமது வாழ்வை மனத்தாழ்மையோடு தேவனுக்காய் ஒப்புக்கொடுத்து, இந்த நாட்களில் கருத்தோடு மகிழ்ந்திருப்போமாக.
ஜெபம்: “அன்பின் தேவனே, அகந்தையையும் மனமேட்டிமையையும் விட்டகற்றி, தாழ்ந்த சிந்தையுடன் செயலாற்ற உதவிடும். ஆமென்.”