ஜெபக்குறிப்பு: டிசம்பர் 5 வெள்ளி

“… இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள்” (எரேமி.11:6) சத்தியவசன வானொலி தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் செய்தியாளர்களை கர்த்தர் தம்முடைய கரத்தில் எடுத்து பயன்படுத்தவும், தேவ வார்த்தைகளை கேட்கும் யாவரும் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவும் ஜெபிப்போம்.

தாழ்மையுள்ளவனுக்கே கிருபை

தியானம்: டிசம்பர் 5 வெள்ளி; வாசிப்பு: யாக்கோபு 4:5-10

“… என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம்
செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே
ஜெபம்பண்ணினான்” (லூக்கா 18:12).

நாம் எப்படிப்பட்ட மனநிலையுடன் தேவசமுகத்திற்குள் கடந்துவருகிறோம்? அந்த நேரத்தில் தேவனுக்காய் செய்த, செய்கின்ற காரியங்கள் மனதில் தோன்றுகின்றதா? இன்னும் என்ன செய்யலாம் என்ற எண்ணம் உருவாகிறதா? அப்படியானால் தேவசமுகத்தில் நாம் தாழ்மையாய் அல்ல; நமது பெருமைகளோடேயே நிற்கிறோம் என்பதை நாம் உணரவேண்டும். தாழ்மையுள்ளோருக்கே தேவன் கிருபையளிக்கிறார் என்பதுதான் தேவவார்த்தை.

தேவாலயத்துக்குச் சென்று ஜெபித்த பரிசேயனின் ஜெபத்துக்கும், ஆயக்காரனின் ஜெபத்துக்கும் நிறையவே வித்தியாசமுண்டு. பரிசேயன் தனது பெருமைகளை ஜெபத்தில் வெளிப்படுத்தினான். ஆயக்காரனோ தனது கண்களையும் ஏறெடுக்கத் துணியாமல், தனது மார்பில் அடித்துக்கொண்டு, “தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று ஜெபித்தான். நமக்காகத் தமது பரலோக மேன்மைகள் யாவையும் துறந்து வந்த ஆண்டவருக்காக நாம் எதைச் செய்திருந்தாலும் அது ஈடாகாது. ஆகவே, அவருடைய சமுகத்துக்குள் நாம் செல்லும்போது ஆயக்காரனின் மனநிலையே நமக்கும் இருக்கவேண்டும்.

நம்மை நாமே உயர்த்துவதைப் பார்க்கிலும், தேவனால் உயர்த்தப்படுவதே மேன்மையானது என்று யாக்கோபு எழுதுகிறார். தன்னைத்தானே உயர்த்துகிறவன் தேவனுக்கு முன்பாக பெருமையுள்ளவனாய் கருதப்படுவான். அவனுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார்; தாழ்மையுள்ளவனுக்கோ கிருபையளிக்கிறார். தாழ்மையின் கோலமாய் வந்து பிறந்த கிறிஸ்துவை நினைவுகூரும் இந் நாட்களில் நமக்குள் எழும்பும் பெருமையான சிந்தனைகள் என்ன? நம்மையே மையமாகக்கொண்டு பெருமையிலேயே வாழப்போகிறோமா? அல்லது, நாம் இயேசுவை அறியாதோர் மத்தியில் அவரை அறிமுகம் செய்ய ஆசிக்கிறோமா?

வருடாவருடம் நாம் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடியும், கிறிஸ்து பிறந்ததையோ, அந்தப் பிறப்பின் நோக்கத்தையோ அறியாமல் எத்தனையோ பேர் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; தினமும் பாவத்தில் அழிந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவனை அறிவிக்கும் பொறுப்பு யாருடையது? நாம் நம்மைச்சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வட்டத்துக்கு வெளியே நடக்கும் அழிவைக்குறித்து நாம் கண்மூடித்தனமாக இருந்து, சுயநலமாக வாழுகிறோம். இந்நாட்களில் விசேஷமாக நம்மைத் தேவனுடைய பாதத்தில் இருத்தி சற்றே சிந்தித்துப் பார்ப்போம். நமது பொறுப்பற்ற வாழ்விலிருந்து மனந்திரும்புவோம். கிறிஸ்துவின் பிறப்பை நம்முடைய வாழ்வில் அர்த்தமுடையதாக்குவோம்.

ஜெபம்: “ஆண்டவரே, என்னைப்பற்றி மாத்திரம் யோசிக்காமல், பிறரைக் குறித்த பாரத்தையும் கொண்டிருக்கும் மனதைத் தாரும். ஆமென்.”