ஜெபக்குறிப்பு: டிசம்பர் 24 புதன்

சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்புப்பணியில் இருக்கும் ஒவ்வொருவரும் அப்பணியை சிறப்போடு செய்வதற்கு தேவஞானத்தை கர்த்தர் தந்தருளவும், பாடல்கள் செய்திகள் அநேகருடைய உள்ளங்களைத் தொடுவதாக அமையவும், தொலைகாட்சி ஊழியத்தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.

மீட்கப்பட்டாயா?

தியானம்: டிசம்பர் 24 புதன்; வாசிப்பு: லூக்கா 15:11-24

“… கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம்
இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” (ரோமர் 5:9).

மேசையிலே சுவையான உணவு, தண்ணீர், சாப்பிடத் தட்டு எல்லாமே ஆயத்தமாயிருக்க, அதே மேசையில் உட்கார்ந்தும் உணவு உண்ணாமல், மரித்துப்போனால் அவனைப்போல ஒரு முட்டாள் இருக்கமுடியாது. ஆத்தும மீட்பை இன்னமும் பெற்றுக்கொள்ளாதிருக்கிறவனின் நிலையும் இதுதான்.

மனிதனுடைய மீட்பிற்கான சகல காரியங்களையும் ஆண்டவர் செய்து முடித்துவிட்டார். பாவிகளாகிய நம்மை மீட்பதற்காகவே அவர் இவ்வுலகிற்கு வந்தார். வந்தவர் சிலுவைவரை தன்னை அர்ப்பணித்து, மரித்து, உயிர்த்து நமக்கான மீட்பைத் தந்துவிட்டார். அதைப் பெற்றுக்கொள்வதும், மறுப்பதும் நமது தெரிவிலேயே தங்கியுள்ளது. இன்று இந்தப் பெரிதான இரட்சிப்பைக் குறித்துக் கரிசனையற்றிருப்போர் அநேகர். இரட்சிப்பைப்பெற்றும் அதைக் காத்துக்கொள்ள முடியாமல் பின்மாற்றங்கண்டோர் பலர். இரட்சிக்கப்படாதோரைக் குறித்து அக்கறையற்றிருப்போர் அதிலும் அநேகர். மொத்தத்தில் உன்னதமான இரட்சிப்பு இன்று உதாசீனம் செய்யப்படுகிறது என்பதுதான் உண்மை.

இது ஏன்? தன் பாவத்தை உணர்ந்து, தன்னைப் பாவி என்று அறிக்கை செய்கிறவனே இந்த மீட்பைப் பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால், தான் ஒரு பாவி என்று உணருமளவுக்குத் தன்னை தாழ்த்துவதுதான் மனிதனுக்கு மிகவும் கடினமான காரியம். இன்றைய வேதப்பகுதியில் இளைய குமாரன் தகப்பனின் அன்பை உதாசீனம் செய்து தனது போக்கில் சென்றான். அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, “…தகப்பனே பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் நான் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல…” என்று அறிக்கை செய்ததைப் பார்க்கிறோம். இந்த மனஉடைவு வரவேண்டுமானால் நாம் நமது நிலையை உணர்ந்து நம்மைத் தாழ்த்தவேண்டும்.

எவனொருவன் தான் பாவியென்றும் பாத்திரனல்லவென்றும் தன்னைத் தாழ்த்துகிறானோ, அவன் மீட்பிற்குத் தூரமானவன் அல்ல. நாம் பாத்திரரல்ல என்று உணரும்போதே பரம தகப்பன் நம்மைத் தமது பிள்ளையாக ஏற்கிறார். நாம் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்க ஆயத்தமா என்பதே கேள்வி. வருஷந்தோறும் நினைவுகூரும் கிறிஸ்து பிறப்பின் அர்த்தம் என்ன? “நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காகப் பிறந்ததினாலே தேவன் நம்மீதுவைத்திருந்த அன்பை விளங்கப்பண்ணினார்” என்பதுதானே. அந்த அன்பை நாம் ஏன் உதாசீனம் செய்யவேண்டும்; இன்றே நம்மைத் தாழ்த்தி ஒப்புவிப்போமாக.

ஜெபம்: “ஆண்டவரே, நீர் ஈட்டித்தந்த இரட்சிப்பை உதாசீனம் செய்யாமல், அதைப் பெற்றுக்கொண்டு உமது பிள்ளையாய் வாழ உதவி செய்யும். ஆமென்.”