ஜெபக்குறிப்பு: டிசம்பர் 31 புதன்

இவ்வருடத்தின் ஒவ்வொரு கணப்பொழுதையும் கர்த்தருடைய கிருபையால் நாம் கடந்துவர தேவனருளிய பாதுகாப்பிற்காகவும், சுகத்திற்காகவும் முழு உள்ளத்தோடு நன்றி செலுத்தி, வருட இறுதி ஆராதனை, மற்றும் புத்தாண்டு ஆராதனைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், நாமும் புதிய எண்ணங்களோடும் புதிய தீர்மானங்களோடும் புத்தாண்டிற்குள் பிரவேசிக்க ஜெபிப்போம்.

தாழ்மையின் பாடம்

தியானம்: டிசம்பர் 31 புதன்; வாசிப்பு: யோவான் 13:1-15

“நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும்
செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்”
(யோவான் 13:15).

வருடத்தின் கடைசிநாளில் வந்து நிற்கிறோம். புதிய வருடத்தை புதிய சிந்தையோடு ஆரம்பிக்க நம்மில் எத்தனைபேர் ஆயத்தமாய் இருக்கிறோம்? கடைசிநாளில் வந்து நிற்கும் நாம் ஆண்டவர் சிலுவைக்குப் போகுமுன்னர் செய்து காட்டிய கடைசிப் பாடத்தைக் குறித்துச் சிந்திப்பது நல்லது. நமக்குப் பிரியமான ஒருவர் மரிக்கும்போது அவருடைய கடைசி வார்த்தை, செய்யும்படி சொல்கின்ற கடைசிக் காரியம் இவற்றை நாம் முழு மூச்சாக ஏற்று நிறைவேற்ற முயற்சிப்போம். பல காரியங்களை சீஷருக்குக் கற்றுக்கொடுத்த ஆண்டவரும் கடைசி இராப்போசனத்தின்போது முக்கியமான பாடம் ஒன்றைச் செய்தே காட்டினார். அதுவே தாழ்மையின் பாடம்.

இது ஒரு முக்கிய பாடம். சீஷர்கள் ஒருபோதும் மறந்துவிடாதபடிக்கு அதனைச் செய்தே காட்டினார் ஆண்டவர். சீஷரது மனதிலே பதிந்திருந்த இந்த தாழ்மையென்னும் பாடத்தைக் குறித்து அவர்களும் தமது நிருபங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார் (1பேது.5:5). கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்; அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார் (யாக்.4:10).

ஆண்டவரின் மூன்றரை வருட ஊழியகாலத்தில் ஆண்டவர் அவராகவே இருந்தார். சீஷர்கள் சீஷர்களாகவே இருந்தனர். ஆனால், கடைசி இராப்போஜனத்தின்போது ஆண்டவர் தமது அரையிலே துண்டைக்கட்டி, பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து உட்கார்ந்து, ஒவ்வொரு சீஷரினதும் கால்களைக் கழுவினார். கழுவி முடிந்ததும், “ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், ….நான் உங்களுக்குச் செய்ததுபோலவே நீங்களும் செய்யும்படிக்கு உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” என்றார். இயேசு இறுதியாக கற்றுக்கொடுத்துச் செய்துகாட்டியது தாழ்மையின் போதனையாகும்.

ஆண்டவரே, தமது மேன்மையைவிட்டு இறங்கி, தம்மைப் பின்பற்றின சீஷர்களின் கால்களைக் கழுவி, மனுஷ குமாரன் ஊழியம் கொள்ளும்படி அல்ல; ஊழியம் செய்யும்படிக்கு வந்தார் என்பதை நிரூபித்தார். இன்று நமது காரியம் என்ன? அதே இராவிருந்தை நினைவுகூரும் நம்மில் சிலர் ஒரு சடங்காகக் கால்களைக் கழுவுவதுண்டு. இன்னும் பலர், பரிசுத்த மேஜையண்டை முழங்காற்படியிடும்போது, தமக்குப் பிடிக்காதவரோ, கோபக்காரரோ அருகில் அமராதவாறு பார்த்துக் கொள்வர். இது எப்படி இருக்கிறது? இனி இந்தப் புது ஆண்டினை புதிய சிந்தையோடு ஆரம்பிப்போம். உங்கள் அனைவருக்கும் சத்தியவசன ஊழியர்கள் சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஜெபம்: “அன்பின் தேவனே, நீர் கற்றுக்கொடுத்த தாழ்மையின் பாடத்தை வரும் ஆண்டிலாவது நான் உண்மையாய் கடைப்பிடிக்க உதவி செய்யும். ஆமென்.”