ஜெபக்குறிப்பு: டிசம்பர் 7 ஞாயிறு
இந்த நாளின் திருவிருந்து ஆராதனையில் “… அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும் … உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும்” (எபி.10:20,22) பந்தியில் சேர்ந்து தேவனை மகிமைப்படுத்த கர்த்தர் கிருபை தர வேண்டுதல் செய்வோம்.
பணிவிடை செய்வோம்
தியானம்: டிசம்பர் 7 ஞாயிறு; வாசிப்பு: லூக்கா 22:24-27
“ … நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல்
இருக்கிறேன்” (லூக்கா 22:27).
விசேஷ கூட்டம் ஒன்றுக்கு சிறப்புப் பேச்சாளர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். மதிய உணவுவேளை முடிந்தது. எல்லோரும் கைகழுவிய சிறுதொட்டியில் தண்ணீர் கீழே போகமுடியாதவாறு உணவுத் துணிக்கைகள் அடைத்துக் கொண்டது. யாரும் அதைப் பொருட்படுத்தாது கழுவிச்சென்றனர். நீர் மட்டம் உயர்ந்துகொண்டே வந்தது. அப்பொழுது அங்கு கைகழுவ வந்த அந்த விசேஷ பேச்சாளர் ஒரு குச்சியைக் கேட்டுவாங்கி அச் சிறுதொட்டியை துப்பரவு செய்துவிட்டார். விசேஷப் பேச்சாளராக அழைக்கப்பட்டவர் அங்கே ஒரு பணிவிடைக்காரனைப்போலச் செயற்பட்டது ஆச்சரியமாயிருந்தது.
‘உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்’ என்றார் ஆண்டவர். நாம் பெரியதொரு பதவியிலோ, நிலைமையிலோ இருந்தாலும், தலைமைப் பதவியிலிருந்தாலும் நாம் அனைவருமே எப்போதும் ஆண்டவரின் பணிவிடைக்காரரே என்ற மன நிலை நமக்கு அவசியம். இவ்வுலகில் நாம் தலைவனாகவோ அல்லது பணிவிடைக்காரனாகவோ இருக்கலாம். எப்படியிருந்தாலும் நாம் தேவனுக்குப் பணிவிடை செய்யும் பணிவிடைக்காரரே! எந்நிலையிலும் தேவனுக்குக் கணக்கு ஒப்புவிக்க ஆயத்தமுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்பதே காரியம்.
இவ்வுலகத்து எஜமானுக்கு பணிவிடை செய்கிறேன் என்ற எண்ணத்தை விட, எல்லாவற்றிற்கும் மேலான உன்னதமான தேவனின் பணியாள் என்ற எண்ணத்தோடு எவனொருவன் பணிவிடை செய்கிறானோ அவனது பணிவிடைதான் உண்மையானதும் அங்கீகாரத்துக்குரியதுமாய் இருக்கும். எல்லா நேரத்திலும் ஒருவர் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில் இருப்பவன் வழிவிலகிப்போகவோ தப்புச்செய்யவோ மாட்டான். அந்த மனநிலை நமக்கு அவசியம்.
தலைமை வகிக்கவே அனைவரும் விரும்புவதுண்டு. ஆனால், “பந்தியிருக்கிறவனோ பணிவிடை செய்கிறவனோ எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப் போல இருக்கிறேன்” என்றார் இயேசு. அவர் நமக்கு வைத்துப்போன முன்மாதிரி இதுவே. அதை நாம் பின்பற்ற ஆயத்தமா? இந்தக் கிறிஸ்துமஸ் காலங்களில் நமது பெருமைகளையெல்லாம் தள்ளிவிட்டு, பணிவிடைக்காரனாய் வந்த கிறிஸ்துவையே பிரதிபலிக்கின்ற பாத்திரங்களாய் கிறிஸ்துவுக்கே சாட்சியாக வாழ, நமது காரியங்களை முன்னெடுக்க நம்மை அர்ப்பணிப்போமாக.
ஜெபம்: “அன்பின் பிதாவே, நான் உமக்குள் என்றும் பணிவிடைக்காரனாய் பணிந்து பணிசெய்ய என்னை ஒப்புவிக்கிறேன். ஆமென்.”