ஜெபக்குறிப்பு: டிசம்பர் 30 செவ்வாய்
“.. நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்” (எரேமி.29:11) என்று வாக்குரைத்த தேவன்தாமே பலவிதமானத் தேவைகளோடு இருக்கிற 10 குடும்பங்களுக்கு இரங்கி அவர்களது மனவிருப்பங்களையும் வேண்டுதல்களையும் அருளி அவர்களை ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.
கற்றிடத் தாமதியாதே!
தியானம்: டிசம்பர் 30 செவ்வாய்; வாசிப்பு: அப். 18:24-28
“… தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய்
அவனுக்கு (அப்பொல்லோ) விவரித்துக் காண்பித்தார்கள்”
(அப்போஸ்தலர் 18:26).
ஒரு குடும்பத்தினர் வெளிநாட்டவரை விருந்துக்கு அழைத்திருந்தனர். விருந்தினருக்கு நண்டு விருப்பம் என்பதால், அவர் கரண்டியால் சாப்பிடுவதற்கு இலகுவாக நண்டின் ஓட்டை உடைத்து சமைத்து வைத்தார்கள். அவரும் அதை சுவைத்து உண்ணும்போது நான்கு வயதுள்ள அவ்வீட்டு சிறுமி, தானே நண்டை உடைத்துச் சாப்பிடுவதை இவர் கவனித்தார். உடனே, நானும் இவளைப்போல நண்டை உடைத்துச் சாப்பிட இவளிடமிருந்தே கற்றுக்கொள்கிறேன் என்று சொல்லி, கரண்டியை அப்பால் வைத்துவிட்டு கைகளினால் சாப்பிட ஆரம்பித்தார். தனது வயதையும் மதிப்பையும் எண்ணாமல் ஒரு சிறுமிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்திய இவர் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டார்.
இங்கே அப்பொல்லோவும், ஆவியில் அனலுள்ளவனாய், கர்த்தருக்கு அடுத்தவைகளை திட்டமாய்ப் போதகம்பண்ணுகிறவனாய் இருந்தும், தனக்கு எல்லாம் தெரியும் என்றிராமல், ஆக்கில்லா பிரிஸ்கில்லாவிடம் கற்றுத் தெரிந்துகொள்ள தன்னை தாழ்த்தி விட்டுக்கொடுக்கிறதை வாசிக்கிறோம். இவ்விதமாய் அவன் கற்றுக்கொண்டதால் அதிக உறுதியுடன் வெளியரங்கமாய் யூதர்களுடன் பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவை கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்த ஏதுவாயிற்று. அப்பொல்லோ தன்னைத் தாழ்த்த கற்றுக்கொண்டதால் மற்றவர்களை கிறிஸ்துவுக்குள்ளாய் பெலப்படுத்தவும், அவர்களுக்கு உதவவும் அவனால் முடிந்தது.
நாமோ நமக்கு எதுவும் தெரியாமலேயே எல்லாம் தெரிந்ததுபோல பேசி விடுகிறோம். அறிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் நமது பெருமை இடங்கொடாது. தேவனுடைய வார்த்தைகளைக்கூட ஆராய்ந்து படிக்க நமக்கு விருப்பங்கிடையாது. தெரிந்த கொஞ்சத்தை வைத்துக்கொண்டு நாமும் குழம்பி, பிறரையும் குழப்பிவிடுகிறோம். நாம் புதியவற்றைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். தெரியாதோருக்கு அத் தம்பதியினர் செய்ததுபோல நாமும் உதவி செய்திட தயாராக இருக்கவேண்டும்.
2014ஆம் வருட இறுதியில் வந்து நிற்கும் நாம் நம்மை ஒருகணம் ஆராய்ந்து பார்ப்போம். பரிசுத்த வேதாகமத்தைக் கற்றுத் தேர்ந்தவர்கள் யாருமே இல்லை. அப்படியிருக்க அப்பொல்லோவிடம் காணப்பட்ட தாழ்மை நம்மிடம் உண்டா? எத்தனை தடவை நமது பெருமையினால் பல காரியங்களைத் தவற விட்டிருக்கிறோம். நாம் பிறருக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய தருணங்களை இழந்திருக்கிறோம். இன்றே தாழ்மையாக கற்றுக்கொள்ள தீர்மானிப்போம். கர்த்தர் தாமே நம்மை வழிநடத்துவாராக!
ஜெபம்: “அன்பின் தேவனே, என்றும் உம் பாதம் அமர்ந்து, தாழ்மையின் சிந்தையோடு உம்மிடம் கற்றுக்கொள்ள என்மேல் கிருபையாயிரும். ஆமென்.”