ஜெபக்குறிப்பு: டிசம்பர் 20 சனி
நம்முடைய தேசத்திலுள்ள ஒவ்வொரு மிஷெனரி ஸ்தாபனங்களுக்காக, வட இந்திய மாநிலங்களில் உள்ள எதிர்ப்புகள் அச்சுறுத்தல்கள் இவற்றின் மத்தியில் பணிசெய்துவரும் மிஷெனரிகளுக்காகவும் அவர்களது பாதுகாப்பிற்காகவும் இவ்வூழியங்களை தாங்கும் ஜெப பங்காளர்களுக்காகவும், ஸ்தாபன தலைவர்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.
உண்மையாயிரு!
தியானம்: டிசம்பர் 20 சனி; வாசிப்பு: ஆதியாகமம் 39:1-23
“உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப்
பெறுவான்” (நீதிமொழிகள் 28:20).
வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரத்திற்கான பரீட்சைக்காகச் சென்றவரிடம், பணம் கொடுத்தால் இலகுவாகப் பத்திரத்தைப் பெற்றுவிடலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டது. அவரோ லஞ்சமாகப் பணம் கொடுப்பதை மறுத்து விட்டார். இறுதியில், நேர்த்தியாக வாகனத்தை ஓட்டிக் காட்டியும், அவருக்குப் பத்திரம் கிடைக்கவில்லை. ஆனாலும், தான் உண்மைத்துவமாய் நடந்து கொண்டதையிட்டுத்தான் திருப்தியடைந்ததாக அவர் கூறினார்.
உண்மைத்துவமாய் நடப்போரும், நீதியைக் கடைப்பிடிப்போரும் உலக வாழ்க்கையில் அநேக காரியங்களை இழந்துபோக நேரிடலாம். ஆனால், நித்திய வாழ்விலே, ‘உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி’ என்று ஆண்டவரின் வரவேற்பைப் பெற்றுக்கொள்வது எத்தனை பெரிய பாக்கியம். இதற்காக நாம் உலக வாழ்விலே எதையும் இழக்கத் தயாராகலாம் அல்லவா?
கர்த்தர் யோசேப்போடே இருக்கிறார்; அவன் செய்வதெல்லாவற்றையும் அவர் வாய்க்கப்பண்ணுகிறார் என்று கண்ட எஜமான், அவனை தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினான். கர்த்தரும் யோசேப்பின் நிமித்தம் அவ்வீட்டை ஆசீர்வதித்தார். அதே வீட்டில் யோசேப்பின் உண்மைத்துவத்துக்கு பெரியதொரு சவால் வந்தது. ஆனாலும், அவன் உண்மைத்துவத்தைப் பற்றிக்கொண்டான். ஆனால், அவனுக்குக் கிடைத்ததோ சிறைவாசம்தான். உண்மைத்துவத்தை இழப்பதைவிட சிறைவாசம் மேல் என்று யோசேப்பு கண்டுகொண்டான்.
உண்மைத்துவமாய் வாழுவதற்கு நாம் தாழ்ந்துபோகவேண்டிய நேரங்களும், கிரயம் செலுத்தவேண்டிய சந்தர்ப்பங்களும் வரலாம். ஆனாலும், எதை இழந்தாலும் உண்மைத்துவமாய் வாழுவதே மேன்மையானது என்பதை நம்மால் தெரிவுசெய்ய முடியுமா? தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக உண்மையாய் வாழவே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். பொய்யையும், மாய்மாலமான வாழ்வையும் தேவன் வெறுக்கிறார். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான், ஐசுவரியவானாகத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான் என்பது தேவவார்த்தை. இன்று, ஐசுவரியவானாகிறதற்கும், பெரிய வசதிகளோடு பெரிய மனுஷன் என்ற போர்வைக்குள் வாழுவதற்கு மனிதன் உண்மையை விற்றுப்போடுகிறான். இதனை தேவன் வெறுக்கிறார். நாம் இன்று யாரைப் பிரியப்படுத்த விரும்புகிறோம்? தேவனையா? மனிதனையா?
ஜெபம்: “பிதாவே, எந்தச் சூழ்நிலையிலும் உண்மைத்துவத்தை இழந்துவிடாமல், உம்மைப் பிரியப்படுத்தி வாழ என்னை வழிநடத்தும். ஆமென்.”