அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2020)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி : நியாயாதிபதிகள் 19:1-30
நாலாம்நாள் காலமே அவர்கள் எழுந்திருந்தபோது, அவன் பிரயாணப்படுகையில், ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் புசித்து, உன் மனதைத் தேற்றிக்கொள்; பிற்பாடு நீங்கள் போகலாம் என்றான் (நியா.19:5).
பண்டைய அண்மை கிழக்கு நாடுகளின் குடும்பங்களில் இரண்டு மாறுபட்ட அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிந்தன. அவை சாதாரண மக்களிடையே காணப்பட்ட விருந்தோம்பலும் கொடுமையான தீயவர்களிடம் காணப்பட்ட பகையுணர்வுமாகும். நியாயாதிபதிகள் 19ம் அதிகாரத்தில் காணப்படும் நிகழ்வு இவ்விரண்டு அம்சங்ளையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றது.
வரலாற்று பதிவின்படி, எப்பிராயீம் மலைகள் அருகே உள்ள ஒரு லேவியன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச் சேர்ந்த ஒரு ஸ்திரீயைத் தனக்கு மறுமனையாட்டியாகக் கொண்டிருந்தான். அவள் அவனுக்கு துரோகம் பண்ணி பெத்லெகேமிலுள்ள தன் தகப்பன் வீட்டுக்குப் போய் அங்கே நான்கு மாதம் தங்கியிருந்தாள். இந்த பிரிவுக்குப் பின்னர் லேவியன் அவளுடன் நலம் சொல்லி திரும்ப அழைத்து வர எண்ணி பெத்லெகேமுக்கு தெற்கு நோக்கிப் பிரயாணம் ஆனான். ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனைக் கண்டபொழுது மகிழ்ச்சியடைந்தான்.
அம்மனிதனின் மாமனுடைய வீடு பண்டைய அண்மை கிழக்கத்திய நாடுகளின் உபசரிப்புக்கு தலையாய உதாரணமாய் விளங்கியது. மூன்று நாட்கள் அம்மனிதன் அங்கு தங்கியிருந்தான். அவர்கள் மகிழ்ச்சியுடன் புசித்துக் குடித்திருந்தார்கள். நான்காம் நாள் அவர்கள் அதிகாலமே எழுந்து பாலஸ்தீனிய கோடை வெயிலுக்கு முன்னதாக சென்றுவிடலாம் என புறப்பட்டனர். ஆனால், ஸ்திரீயின் தகப்பன் மீண்டும் தங்கியிருந்து விருந்துண்ண வற்புறுத்தினார். அந்த நாளும் கழிந்தது. மறுநாள் போகலாம் என்று மீண்டும் அம்மனிதனின் மாமன் வேண்டிக்கொண்டார்.
பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன் “இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலை மயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம்” என்றான் (19:8). இம்முறை அம்மனிதன் மறுத்துவிட்டான். எப்பிராயீம் மலைதேசத்தை இருட்டுவதற்குள் சென்றடைய முடியாது எனத் தெரிந்திருந்தும் அவன் தனது மனைவியுடன் பெத்லெகேமைவிட்டுக் கிளம்பினான்.
எபூசியர் எருசலேமில் வாழ்வதினால் அங்கே செல்ல விரும்பாமல் கிபியாவுக்கு வடக்கே மூன்று மைல் செல்ல எண்ணினான். அங்கே அவனுக்கு சிறந்த உபசரிப்பு கிடைக்கும் என நம்பினான். ஆனால் அவர்களை ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் தெருவிலே தங்குவதற்கு ஆயத்தமானார்கள். அப்பொழுது கிபியாவில் வசித்து வரும் எப்பிராயீம் மலைதேசத்தைச் சேர்ந்த ஒரு கிழவன் அவர்களைத் தன் வீட்டில் தங்கவைத்துக்கொண்டான்.
இந்த வேளையில் சோதோம் கொமோரா பட்டணத்து நிகழ்வு திரும்பிற்று. பேலியாளின் மக்களாகிய சிலர் அவ்வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி, “உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு, வெளியே கொண்டு வா” என்று ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தனர். இக்குறிப்பினை லோத்தின் சந்ததியாரிடமிருந்து அவர்கள் அறிந்திருக்க வேண்டும் (ஆதி.19:1-11). லேவியனுக்குப் பதிலாக தனது மகளையும் லேவியனின் மறுமனையாட்டியையும் ஒழுக்கமற்ற அக்கும்பலுக்கு தருவதாக அக் கிழவன் கூறினான். இது அவர்களைச் சாந்தப்படுத்தியது.
அவர்கள் இராமுழுவதும் அவளை இலச்சையாய் நடத்தி, தங்கள் இச்சையை நிறைவேற்றிக்கொண்டனர். விடியுங்காலத்திற்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகு மட்டும் அங்கே தன் எஜமான் இருந்த வீட்டு வாசற்படியிலே விழுந்துகிடந்தாள். அவள் எஜமான் காலமே எழுந்திருந்து வீட்டின் கதவைத் திறந்து, தன் வழியே போகப் புறப்படுகிறபோது, இதோ, அவன் மறுமனையாட்டியாகிய ஸ்திரீ வீட்டுவாசலுக்கு முன்பாகத் தன் கைகளை வாசற்படியின்மேல் வைத்தவளாய்க் கிடந்தாள் (நியா.19:26,27).
இங்கே பரிவும் பகையும் காணப்படுகிறது. அந்நியரை உபசரிக்க தன் இல்லத்தைத் திறந்து கொடுத்த மனிதனின் செயலுக்கும் மற்றவரின் வீட்டின் கதவைத் தட்டி ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த மக்களின் செயலுக்கும் காரணம் யாது? தேவனுடைய பார்வைக்குப் பிரியமானதைச் செய்ய ஒரு மனிதனுக்கும் தேவனுடைய பார்வைக்கு பொல்லாப்பைச் செய்ய மற்றவருக்கும் தூண்டுகோலாக இருந்தது எது? இதற்குரிய விடையானது, நாம் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப் பட்டபடியால் நன்மையானவைகளைச் செய்யும் விருப்பம் நம்மில் இயற்கையாகவே உள்ளது. ஆனால், அவை நம்முடைய பாவத்தால் அழிக்கப்பட்டு தீமையைச் செய்யும் இயல்புக்கு ஈர்க்கப்படுகிறோம் என்று கூறலாம்.
பெத்லெகேமின் மனிதனும் கிபியாவிலிருந்து வந்த எப்பிராயீம் முதியவரும் மற்றவர்களைப் பிரியப்படுத்த முயன்றனர். ஆனால் கிபியாவின் ஓரினச் சேர்க்கை மனிதர்களோ தங்களது இச்சையை நிறைவேற்றவே விரும்பினர்.
மற்றவர்களுடைய துன்பத்தில் தங்களுடைய சுயவிருப்பத்தை நிறைவேற்றுவது திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமான இருதயத்திலிருந்தே எழும்புகின்றது (எரேமியா 17:9). இவ்விதமான இருதயத்தை எவ்விதத்திலும்; கட்டுப்படுத்தவே முடியாது. இரட்சிப்பின் கிருபையிலேயே அதை குணமாக்கமுடியும்.
அதிகாலைப் பாடல்:
எத்தனை பாவ பாதகங்களைச் செய்தேன் என்று
நீர் நன்றாய் என்னைத் தூண்டிக் காட்டுவீர்;
வெட்கம்கொண்ட அடியேன் துக்கமுள்ளோனாய் வந்தேன்,
பாவம் செய்யாதபடி தடுத்திடும்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை